சொல்லிலும்,செயலிலும் இஸ்லாத்தைக் கலப்போம் .. சமூக உறவில் சகோதரத்துவத்தை வளர்ப்போம்
Sunday, December 30, 2012
அல்லாஹ்வை திக்ர் செய்வதன் மூலம் ஏற்படும் பிரயோசனங்கள்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ. அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் பெயர் கொண்டு ஆரம்பம் செய்கின்றேன். அல்லாஹ்வை எல்லா நேரங்களிலும், எல்லாச் சந்தர்ப்பங்களிலும்,எல்லா நிலைகளிலும் அல்லாஹ்வை திக்ர் செய்ய வேண்டும், அவன் நினைவு இருக்க வேண்டும் . திக்ரின் பிரயோசனங்களை இந்த இடத்தில் தரிசனம் செய்கின்றேன் . முடிந்தால் அல்லாஹ் நாடினால் இதன் மூலம் பல படிப்பினைகளை இன்ஷா அல்லாஹ் அடையலாம்.
அல்லாஹ்வின் அன்பையும்,அவன் பால் நெருக்கத்தையும் திக்ர் செய்வதன் மூலம் அலப்பெரிய பாக்கியங்களை உண்டுபண்ணும். இன்னும் அவனைப் பற்றிய கண்ணியத்தையும், அவன் என்னைக் கண்காணிக்கிறான் என்ற எண்ணத்தையும் தோற்றுவிக்கும். மனிதன் திருந்தி அவன் பக்கம் மீள்வதற்கும் அவனை வழிப்பட்டு அமல் புரிவதற்கும் உதவியாய் இருக்கும்.
கவலைகளை நீக்கி சந்தோஷத்தையும், உளத்தூய்மை, தைரியம் போன்ற நற்குணங்களையும் உருவாக்கும்.
உள்ளத்தில் ஒருவித வெறுமை நிலை உண்டு., அதனை திக்ரின் மூலம் மாத்திரமே நிரப்ப முடியும்.
திக்ரின் மூலம் உள்ளத்தில் உள்ள நோய்கள் அகன்று அது சுத்தமடைவதுடன் வேறு எதனாலும் பெறமுடியாத ஓர் இன்பத்தையும் உள்ளம் உணர்கின்றது.மாறாக அல்லாஹ்வின் ஞாபகத்தை விட்டும் மறந்திருப்பது உளநோய்க்கான அறிகுறியாகும்.
ஒருவன் ஏதேனும் ஒரு பொருளை விரும்பிவிட்டால் அதனை அதிகம் ஞாபகப்படுத்துவதைப் போன்று திக்ரின் மூலம் அல்லாஹ்வின் மீதுள்ள அளவுகடந்த அன்பு வெளிப்படுகின்றது. மேலும் திக்ர் செய்தல் குறைவாக இருப்பது நயவஞ்சகத் தன்மையின் அடையாளமாகும்.
ஒரு அடியான் தனது செழிப்பான காலத்தில் அல்லாஹ்வை நினைவு கூர்ந்தால் அவனுக்குக் கஷ்டம் ஏற்படும் போது அல்லாஹ் அவனை நினைவு கூறுவான், கைவிடமாட்டான், பாதுகாப்பான்,நிம்மதியைக் கொடுப்பான்,கஷ்டத்திலிருந்து விமோசனத்தைக் கொடுப்பான்.அல்லாஹ் இரக்கமுள்ளவன்.
அல்லாஹ்வின் வேதனையை விட்டும் பாதுகாப்புப் பெறுவதற்கான காரணமாகவும், ஸகீனத் எனும் மனநிம்மதியும், அமைதியான சூழலும் உருவாவதற்கும் அல்லாஹ்வின் அன்பும், வானவர்களின் பாவமன்னிப்பும் கிடைப்பதற்கு உதவியாகவும் அது அமைந்திருக்கின்றது.
புறம் பேசுதல், கோள் சொல்லல், பொய் பேசுதல், வீண்பேச்சு போன்ற தடுக்கப்பட்ட காரியங்களில் நாவு ஈடுபடாது திக்ர் பாதுகாக்கின்றது.
திக்ர் செய்வது வணக்கவழிபாடுகளில் மிகச் சிறந்ததும், நாவுக்கு மிக இலேசான அமலுமாகும். மேலும் செய்யப்படும் திக்ருகளின் அளவு சுவர்க்கத்தில் மரங்கள் நட்டப்படும்.
திக்ர் உலகத்திலும், மண்ணறையிலும், மறுமையிலும் அதனைச் செய்தவர்களுக்கு பிரகாசமளிக்கின்றது. இன்னும் அவனுக்கு உள்ளத்தில் இன்பத்தையும், முகத்தில் அழகையும் கௌரவத்தையும் ஏற்படுத்துகின்றது.
திக்ரின் மூலம் அல்லாஹ்வின் பவமன்னிப்பும்,வானவர்களின் துஆவும் கிடைக்கின்றது, இன்னும் அல்லாஹ் திக்ர் செய்தவர்களைப் பற்றி வானவர்களிடம் பெருமை பாராட்டுகின்றான்.
அமல் செய்யக்கூடியவர்களில் மிகச் சிறந்தவர் அல்லாஹ்வை அதிகம் திக்ர் செய்பவராகும். நோன்பாளிகளில் மிகச் சிறந்தவர் நோன்பிருக்கும் நிலையில் அதிகம் திக்ர் செய்பவராகும்.
திக்ர் கஷ்டங்களை இலகுபடுத்தும், அத்துடன் வசதிவாய்ப்பை உருவாக்கி உடம்பை பலப்படுத்தும். இன்ஷா அல்லாஹ்.
குறிப்பு.........ஃ..........:- இப்னு தைமியா (ரஹ்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள். "மீனுக்குத் தண்ணீரைப் போன்று உள்ளத்திற்கு திக்ர் அவசியமாகும். தண்ணீரை விட்டும் மீன் வெளியானால் மீனின் நிலை என்னவாகும்".?
திகர் பற்றி அல்குர்ஆனும் நபிகளாரின் பொன்மொழிகளும்.
நீங்கள் என்னை நினைவு கூருங்கள் நானும் உங்களை நினைவு கூருவேன். இன்னும்
நீங்கள் எனக்கு நன்றி செலுத்துங்கள் எனக்கு மாறுசெய்யாதீர்கள்
(அல்குர்ஆன்.2:152,)
(அறிவாளிகள் யாரெனில்) எவர்கள் நின்ற
நிலையிலும், இருப்பிலும் தங்கள் விலாப்புறங்களில் சாய்ந்து கொண்டும்
அல்லாஹ்வை நினைவு கூருகிறார்களோ (அவர்கள்தாம்) (அல்குர்ஆன். 3:191).
(நபியே!) காலையிலும், மாலையிலும் நீர் உம் மனதிற்குள் பணிவோடும்,
அச்சத்தோடும் உரத்த சப்தமின்றி உம் இறைவனின் திக்ரு செய்வீராக! மறந்து
இருப்போரில் நீர் ஆகி விடாதீர். (அல்குர்ஆன்.7:205),
“ஈமான்
கொண்டவர்களே! உங்கள் செல்வமும், உங்களுடைய மக்களும், அல்லாஹ்வின் நினைப்பை
விட்டும் உங்களைப் பராமுகமாக்கிவிட வேண்டாம் – எவர் இவ்வாறு செய்கிறாரோ
நிச்சயமாக அவர்கள்தாம் நஷ்டமடைந்தவர்கள்” (அல்-குர்ஆன் 63:9)
“நிச்சயமாக எவர்கள் தங்கள் இறைவனை(ப் பார்க்காதிருந்தும்) அந்தரங்கத்தில்
அவனுக்கு அஞ்சுகிறார்களோ, அவர்களுக்கு மன்னிப்புமுண்டு, பெரிய நற்கூலியும்
உண்டு” (அல்-குர்ஆன் 67:12)
“நிச்சயமாக இந்நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை
வஞ்சிக்க நினைக்கின்றனர்; ஆனால் அவன் அவர்களை வஞ்சித்துவிடுவான்;
தொழுகைக்கு அவர்கள் தயாராகும் பொழுது சோம்பலுடையோராகவே நிற்கிறார்கள்
மனிதர்களுக்குத் (தங்களையும் தொழுகையாளியாக்கி) காண்பிப்பதற்காக
(நிற்கிறார்கள்); இன்னும், மிகச் சொற்ப அளவேயன்றி அவர்கள் அல்லாஹ்வை நினைவு
கூர்வதில்லை” (அல்-குர்ஆன் 4:142)
நபிகளாரின் பொன்மொழிகள்.
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்
: “தனது இரட்சகனை ஞாபகப்படுத்துபவனும், ஞாபகப்படுத்தாதவனும்
உயிருள்ளவனையும், இறந்தவனையும் போன்றவர்கள் ஆவர்” அறிவிப்பாளார் : அபூ மூஸா அல் அஷ் அரீ (ரலி), ஆதாரம் : ஸஹீஹ் புஹாரி
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் :“உமது நாவு தொடர்ந்து அல்லாஹ்வை நினைவு
கூறுவதால் நனைந்தவாறிருக்கட்டும்” அறிவிப்பாளார் : அப்துல்லாஹ் இப்னு பஸ்ர்
(ரலி), ஆதாரம் : ஸுனன் திர்மிதி
நபி(ஸல்) அவர்கள்
கூறினார்கள் :”வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் இல்லை. அவன்
தனித்தவன். அவனுக்கு இணை யாரும் இல்லை. அவனுக்கே ஆட்சியதிகாரம் உரியது.
அவனுக்கே புகழ் அனைத்தும் உரியது. அவன் எல்லாவற்றிற்கும் வலிமையுடையவன் –
லாஇலாஹ இல்லல்லாஹ், வஹ்தஹு லாஷரீக்க லஹு, லஹுல், முல்க்கு வ லஹுல், ஹம்து, வ
ஹுவ அலா குல்லி ஷய்இன் கதீர் என்று ஒரு நாளில் நூறு முறை சொல்கிறவருக்கு,
அது பத்து அடிமைகளை விடுதலை செய்வதற்குச் சமமா(க நற்பலன் பெற்றுக்
கொடுப்பதா)கும். மேலும், அவருக்கு நூறு நன்மைகள் எழுதப்படும். அவரின்
கணக்கிலிருந்து (அவர் புரிந்த) நூறு தீமைகள் அழிக்கப்படும். மேலும், அவரின்
அந்த நாளில் மாலை நேரம் வரும் வரை ஷைத்தானிடமிருந்து (பாதுகாக்கும்) அரணாக
அது அவருக்கிருக்கும். மேலும், அவர் புரிந்த சிறந்த நற்செயலை எவரும் செய்ய
முடியாது. ஒருவர் இதை விட அதிகமாக (இதை ஓதினால் அல்லது மிக முக்கியமான)
ஒரு நற்செயல் புரிந்தாலே தவிர என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளார் :அபூ ஹுரைரா (ரலி). ஆதாரம் : புஹாரி : 3293
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் :‘சுப்ஹானல்லாஹ் வபி ஹம்திஹி’ (அல்லாஹ்வைப்
போற்றிப் புகழ்ந்து துதிக்கிறேன்) என்று யார் ஒரு நாளில் நூறு முறை
சொல்வாரோ அவரின் தவறுகள் அழிக்கப்பட்டுவிடுகின்றன. அவை கடலின் நுரை போன்று
(மிகுதியாக) இருந்தாலும் சரியே! என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளார் :அபூ ஹுரைரா (ரலி). ஆதாரம் : புஹாரி :6405
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் :‘இரண்டு வாக்கியங்கள் நாவுக்கு
எளிதானவையாகும். (நன்மை தீமை நிறுக்கப்படும். தராசில் கனமானவையாகும்.
அளவற்ற அருளாளின் பிரியத்திற்குரியவையுமாகும். (அவை:) சுப்ஹானல்லாஹில்
அழீம், சுப்ஹானல்லாஹி வபி ஹம்திஹி.(பொருள்: கண்ணியமிக்க அல்லாஹ்வைத்
துதிக்கிறேன்; அவனைப் போற்றிப் புகழ்ந்து துதி செய்கிறேன்.) என நபி (ஸல்)
அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளார் :அபூ ஹுரைரா (ரலி). ஆதாரம் : புஹாரி : 6406
எல்லாம் வல்ல அல்லாஹ் சத்தியத்தைத் தெளிவாக எடுத்துக் கூறும் சத்தியப்
போதகர்களாகவும் அவ்வழியில் ஏற்படும் இன்னல்களைச் சகித்துக் கொள்ளும்
உண்மைப் போராளிகளாகவும் எம்மையும் உங்களையும் ஆக்கி அருள் புரிவானாக.
இறைவா !சகலமும் அகலட்டும். உன் அருள் மட்டும் இருக்கட்டும். உலகமும் துலங்கட்டும். உன் மறுமையும் விளங்கட்டும். மாறான வழி செல்ல எனக்குள் பயம் பிறக்கட்டும். நேரான வழிவாழ எனக்கு ஜெயம் கிடைக்கட்டும். அடியார்களின் வேண்டல்களை அதிகம் விரும்பும் நீ, இந்த எளியவனின் வேண்டல்களை, விண்ணப்பங்களைக் கிடப்பில் போடாமல் உடனடி உத்தரவிடுவாயாக.!
அனைவருக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக ஆமீன்
ReplyDelete