நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் அல்லாஹ்விற்காக நேசிக்கிறாரோ
அல்லாஹ்விற்காக வெறுக்கிறாரோ அல்லாஹ்விற்காக கொடுக்கிறாரோ அல்லாஹ்விற்காக
மறுக்கிறாரோ அவர் ஈமானை பூரணப்படுத்திக்கொண்டார். (அறிவிப்பவர்: அபூஉமாமா (ரலி), நூல்: அபூதாவூத் 4061)
நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும் ஒருவர் மற்றவருக்கு உற்ற நண்பர்கள்.
அவர்கள் நன்மையை ஏவுவார்கள். தீமையைத் தடுப்பார்கள். தொழுகையை நிலை
நாட்டுவார்கள். ஸகாத்தையும் கொடுப்பார்கள். அல்லாஹ்வுக்கும், அவனது
தூதருக்கும் கட்டுப்படுவார்கள். அவர்களுக்கே அல்லாஹ் அருள் புரிவான்.
அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன். (அல்குர்ஆன் 9:71)
ஒவ்வொரு
மனிதனும் இந்த உலக வாழ்க்கையில் பலவிதமான உறவுகளைப் பெறுகின்றான். ஒரே
மனிதன் கணவனாகவும், மகனாகவும் தந்தையாகவும் நண்பனாகவும் இன்னும் பல
நிலையைக் கொண்டவனாகவும் இருக்கிறான்.
இதுபோன்ற உறவுகளில் சிலதை
அவன் பெறாவிட்டாலும் நட்பு என்ற உறவையாவது பெற்றிருப்பான். ஏனென்றால்
சிறியவர்கள் பெரியவர்கள் கொடியவர்கள் நல்லவர்கள் ஆகிய அனைவரும் யாரையாவது
ஒருவரை நண்பர்களாக தேர்வுசெய்யாமல் இருப்பதில்லை.
* நல்ல நண்பனை தேர்வு செய்வதற்கு முன்னால்...நல்லவர்களை நண்பர்களாக்குதல். * அல்லாஹ்விற்காக நட்பு வைத்தல்.மேலான ஒரு இபாதத். * உயிர் காப்பான் தோழன். இதுக்கு அர்த்தம் உலகம் அறிந்த உண்மை. * நன்மையை ஏவி தீமையைத் தடுத்தல். இதுதான் இன்றைய காலத்தின் கருவூலம். * தவறு செய்தால் மன்னிப்பு கோர வேண்டும். இது மனிதனுக்கு நபியவர்கள் படிப்பித்த பாடம். * பிரதி உபகாரம் செய்ய வேண்டும். இந்த உபகாரம் மறுமைக்கு சாதனமாக அமையும். * நட்பை வெளிப்படுத்த வேண்டும். இது உள்ளச்சத்தோடு சம்பந்தப்பட்டது. * குறைகளை துருவித் துருவி ஆராயக்கூடாது. இதுதான் மனிதனின் கேவளமான செயல்..இன்ஷா அல்லாஹ் தவிர்நது கொள்வோம். * ஏமாற்றக்கூடாது. ஏமாற்றமும், தன்னை ஏமாறும் நிலையும் வேப்பண்ணையைப் போன்றது. * கோபம் கொள்ளக்கூடாது. கோபத்தால் விளையும் பயிர்தான் நாஷாம் என்ற வழி. * மானத்துடன் விளையடக்கூடாது. மானம் என்பது மகத்தான ஒன்று இந்த விஷயத்தில் தன்னைத் தான் மாற்றிக்கொள்ள வேண்டும். * பெருமையடிக்கக் கூடாது. பெருமை என்ற நஞ்சுப்பொருள் நன்மை என்ற அச்சுப்பொருளை தின்று விடும். * நட்பை முறித்துவிடக் கூடாது. சேர வேண்டும் அல்லாஹ்வுக்காக, பிரிய வேண்டும் அல்லாஹ்வுக்காக. * முதலில் நல்ல எண்ணத்தை மனதில் வித்திட வேண்டும். அந்த எண்ணம் என்னும்
விதையில் இருந்து நற்செயல் என்னும் மரம் முளைக்கத் தொடங்கிவிடும். *
நாம் செய்யும் குற்றங்களை எடுத்துச் சொல்லும் மனிதர்களிடம் நன்றியுணர்வு
கொண்டவர்களாக நடந்து கொள்ள வேண்டும். அவரால் தான் நம்மைத் திருத்திக்
கொள்ளும் வாய்ப்பைப் பெறுகிறோம். * கண்களால் நல்லதையே பாருங்கள். காதுகள் நல்ல விஷயத்தை மட்டும் கேட்கட்டும். மனம் எப்போதும் நல்லதையே சிந்திக்கட்டும். * செல்வத்தில் பெருமை கொள்ளாதீர்கள். தேவைகளை குறைத்துக் கொண்டு இருப்பதில் திருப்தி காணுங்கள்
இன்ஷா அல்லாஹ்..... இவைகளே ஒரு நல்ல நட்புக்கும்,குடும்பத்திற்கும், கோத்திரங்களுக்கும்,உறவுகளுக்கும்,சின்னஞ்
சிறார்களுக்கும் வெளிச்சம் தரும் செயல்களே... மறவாதீர்கள், மறுக்காதீர்கள்
என்றைக்கும் இப்போதனையை நெஞ்சினில் அழமாக பதித்து வைத்துக்கொள்ளுங்கள்.
"நட்பு என்பது பாராட்டும் குணம் கொண்டதாக இருக்கவேண்டும். நம் நண்பனை நல்வழிப்படுத்துவதாகவும் இருக்கவேண்டும்"
இந்த உலகின் சக்தி வாய்ந்த அம்சங்களில் ஒன்று நட்பு. ஒரு மனிதனின் மனநிலை
கட்டமைப்பில் நட்பும் முக்கியப் பங்கு வகிக்கிறது. உங்களின் ஆளுமையில்
நண்பர்களுக்கு பங்குள்ளது. சமயத்தில், குடும்பமும், உறவினர்களும் செய்ய
முடியாதவற்றை நண்பர்கள் செய்து விடுகிறார்கள்.
ஒரு நல்ல நண்பன்,
எப்போதுமே, தனது சக நண்பனின் முன்னேற்றம் மற்றும் நலன் சார்ந்த
விஷயங்களிலேயே அக்கறையாக இருப்பான். தனது நண்பன் தீமைகளின் பக்கம்
சென்றால்கூட, புத்திசொல்லி திருத்த முயற்சிப்பான். ஒருவேளை, தான் ஏதேனும்
கெட்டப் பழக்கத்திற்கு அடிமையாகி இருந்தாலும்கூட, தன் நண்பன் அந்தப்
பழக்கத்திற்கு அடிமையாகாதபடி தடுப்பான். அந்த நல்ல நண்பன் சீரிய
சிந்தனைக்கும், அறிவு முன்னேற்றத்திற்கும், ஆக்கப்பூர்வ செயல்பாடுகளுக்கும்
எப்போதும் துணை நிற்பான். அவனும் உயர்வதோடு, தன்னை சார்ந்தவன் உயரவும்
அவன் காரணமாக இருப்பான்.
இன்று பெரும்பாலானவர்களின் அன்பு
பாரபட்சம் பார்த்தே ஏற்படுகிறது. தேவையானபோது தொடர்பு கொள்வதும், தேவைக்காக
பழகுவதும், கூடிப் பொழுதுபோக்குவதுமே நட்பென்று புரிந்து
கொள்ளப்பட்டுள்ளது. நிஜத்தில் அது நட்புமல்ல, அன்புமல்ல, வெறும் சுயநலமே!
“பிறரைப் பார்த்து நீ புன்னகைப்பது கூட ஒரு அறச்செயல்” ஆனால் வாய்விட்டுச்
சிரித்தாலோ, அனைவரிடமும் சிரித்துப் பழகினாலோ சமூக வழக்கில் தப்பாய்ப்
பார்க்கும் கண்ணோட்டம் பரவி இருக்கிறது. அப்படி இருக்கும்போது நாமே
வலியவந்து எல்லோரிடமும் சிரித்துப் பழகி தொடர்ந்து அன்புறவில் ஈடுபடுவது
சாத்தியமற்ற ஒன்றுதான். இருந்தாலும் நாம் எத்தனை பேருடன் நட்புறவுடன்
இருக்கிறோமோ, அதுவே நாம் அர்த்தமுள்ள வாழ்வு வாழ்ந்ததற்கான அடையாளம்.
`என்னை நேசிப்பவரை நான் நேசிப்பேன், எனக்கு உதவி செய்தவருக்கு நான் உதவி
செய்வேன்’ என்பதுவே பலரின் எழுதப்படாத அன்பு இலக்கணம். பழிக்குப் பழி
என்பதற்கும், இதற்கும் வித்தியாசமே இல்லை.
நாம் பழகும்
நண்பர்களைப் பொறுத்து நமது நிலை மாறுகிறது. எனவே நம்முடைய இரு உலக
வாழ்க்கையும் சிறப்புடன் விளங்க நல்ல நண்பர்களைத் தேர்வு செய்து கொள்ள
வேண்டும். இதை நபி(ஸல்) அவர்கள் கூறிக்காட்டினார்கள்.
நல்ல
நண்பனுக்கும் தீய நண்பனுக்கும் உதாரணம் கஸ்தூரி வைத்திருப்பவரும் கொல்லனின்
உலையுமாகும். கஸ்தூரி வைத்திருப்பவரிடமிருந்து உமக்கு ஏதும் கிடைக்காமல
போகாது. நீர் அதை விலைக்கு வாங்கலாம். அல்லது அதன் நறுமணத்தையாவது பெற்றுக்
கொள்ளலாம். கொல்லனின் உலை உமது வீட்டையோ அல்லது உனது ஆடையையோ
எரித்துவிடும். அல்லது அவனிடமிருந்து கெட்ட வாடையை நீர் பெற்றுக் கொள்வீர். அறிவிப்பவர் : அபூமூஸா (ரலி) நூல் : புகாரி (2101)
தீமையான காரியங்களில் நன்பனுக்க ஒத்துப் போவது கூடாது. நன்பன் நன்மையான
காரியங்களைச் செய்ய மறந்து விட்டால் உண்மை நன்பன் அவனுக்கு ஞாபகமூட்ட
வேண்டும். நண்பன் தொழ மறந்து விட்டால் இதை அவனிடத்தில் தெரியப்படுத்தி அவனை
தொழ வைக்க வேண்டும். நண்பன் நல்ல காரியங்களைச் செய்தால் அவனுடன் சேர்ந்து
நாமும் செயல்பட வேண்டும்
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் : அல்லாஹ்
மறுமை நாளில் எனக்காக நேசம் வைத்துக் கொண்டவர்கள் எங்கே? என்னுடைய நிழலைத்
தவிர வேறு நிழல் இல்லாத இந்நாளில் நான் அவர்களுக்கு எனது நிழலைத் தருகிறேன்
என்று கூறுவான். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் : முஸ்லிம் (4655)
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: தோழர்களில் அல்லாஹ்விடத்தில் சிறந்தவர்
அவர்களில் யார் தன்னுடைய தோழரிடத்தில் சிறந்தவராக இருக்கிறாரோ அவராவார். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) நூல்: திர்மிதி 1867)
என் விஷயத்தில் ஒருவருக்கொருவர் நேசித்துக் கொள்பவர்களுக்கும் என்
விஷயத்தில் அமர்பவர்களுக்கும் என் விஷயத்தில் போட்டி போட்டுக் கொண்டு செலவு
செய்பவர்களுக்கும் எனது பிரியும் உறுதியாகி விட்டது என்று அல்லாஹ்
கூறுவதாக நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : முஆத் (ரலி) நூல் : அஹ்மத் (21114)
(அல்லாஹ்வின் தூதரே) ஒரு மனிதர் (நன்) மக்களை நேசிக்கிறார். ஆனால்
(செயல்பாட்டிலும் சிறப்பிலும்) அவர்களை அவர் எட்டவில்லை. (இவரைக்
குறித்துத் தாங்கள் என்ன கருதுகிறீர்கள்?) என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி
வஸல்லம் அவர்களிடம் வினவப்பட்டது. நபி (ஸல்)அவர்கள்மனிதன் யார் மீது அன்பு
வைத்துள்ளானோ அவர்களுடன் தான் இருப்பான் என்று கூறினார்கள்.
(அறிவிப்பவர்:
அபூமூஸா (ரலி) நூல்: புகாரி 6170)
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ''நற்செயல்களில் அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமானது குறைவாக இருந்தாலும் (தொடர்ந்து செய்யப் படும்) நிலையான நற்செயலே ஆகும்.'' (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி 6464)
சொல்லிலும்,செயலிலும் இஸ்லாத்தைக் கலப்போம். சமூக உறவில் சகோதரத்துவத்தை வளர்ப்போம். இன்ஷா அல்லாஹ்......
எல்லாம் வல்ல அல்லாஹ் சத்தியத்தைத் தெளிவாக எடுத்துக் கூறும் சத்தியப்
போதகர்களாகவும் அவ்வழியில் ஏற்படும் இன்னல்களைச் சகித்துக் கொள்ளும்
உண்மைப் போராளிகளாகவும் எம்மையும் உங்களையும் ஆக்கி அருள் புரிவானாக.