அல்லாஹ் மனிதனைப் படைத்து அவன், தான் விரும்புவது போல் வாழ்ந்துக் கொள்ள
விட்டுவிடாமல் வாழ்க்கை நெறியை வேதங்களின் மூலமும் தூதர்களின் மூலமும்
வகுத்துக் கொடுத்தான். இந்த அடிப்படையில் மனித சமுதாயத்திற்கு இறுதி வேதமாக
அல்குர்ஆனையும் இறுதித் தூதராக முஹம்மது(ஸல்) அவர்களையும்
அனுப்பியுள்ளான். எனவே நமது வாழ்க்கையை மன இச்சைப்படி அமைத்துக் கொள்ளாமல்
அல்குர்ஆனும் நபிமொழியும் காட்டித்தரும் நெறியிலேயே அமைத்துக் கொள்ள
வேண்டும். இதுவே முஸ்லிமின் உயரிய பண்பும் குர்ஆன் மற்றும் ஹதீஸின்
எதிர்பார்ப்புமாகும். மார்க்கத்தின் இவ்விரு அங்கங்களில் முதலிடம் பெறுவது
அல்குர்ஆன் ஆகும்.
அல்குர்ஆனுடன் இரண்டு விதமான தொடர்புகளை ஏற்படுத்துவது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கட்டாயக் கடமையாகும்.
1. திருக்குர்ஆனை பொருளறிந்து படிப்பது. அதன் கட்டளைகளைப் புரிந்து அதன் அடிப்படையில் வாழ்க்கையை அமைத்துக் கொள்வது.
2. அல்குர்ஆனை அதிகமாக ஓதி அளவற்ற நன்மையைப் பெற்றுக் கொள்வது.
அத்தியாயம்.1 அல் ஃபாத்திஹா. அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையவனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் ஆரம்பம் செய்கிறேன்.
அகிலத்தாரைப் படைத்துப் பரிபாலிக்கும் அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். (1:1)
(அவன்) அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையவன். (1:2)
தீர்ப்பு நாளின் அதிபதி(யும் அவனே.!) (1:3)
(அல்லாஹ்வே!) நாம் உன்னையே வணங்குகின்றோம், உன்னிடமே உதவியும் தேடுகின்றோம். (1:4)
நீ எங்களை நேரான வழியில் செலுத்துவாயாக.! (1:5)
(அது) நீ யார் மீது அருள் புரிந்தாயோ அவர்களின் வழி. (அது உன்) கோபத்துக்குள்ளானவர்களினதோ, வழிதவறியவர்களினதோ வழியுமல்ல.(1:6,7)
அத்தியாயம். 103 சூரத்துல் அஸ்ர். காலம்.
அளவற்ற அருளாளனும்,நிகரற்ற அன்புடையவனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் ஆரம்பிக்கிறேன். காலத்தின் மீது சத்தியமாக. (103:1)
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையவனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் ஆரம்பம் செய்கிறேன்.
(நபியே!) நீர் கூறுவீராக! நிராகரிப்பாளர்களே! (109:1)
நீங்கள் வணங்குபவற்ற நான் வணங்கமாட்டேன். (109:2)
மேலும் நான் வணங்குபவனை நீங்கள் வணங்குபவர்களுமல்லர். (109:3)
நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்கமாட்டேன். (109:4)
இன்னும் நான் வணங்குபவனை நீங்கள் வணங்குபவர்களுமல்லர். (109:5)
உங்களுக்கு உங்கள் மார்க்கம், எனக்கு எனது மார்க்கம்.(109:6)
அத்தியாயம்.110
அந்நஸ்ர். உதவி.
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையவனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் ஆரம்பம் செய்கிறேன்.
அல்லாஹ்வின் உதவியும்,வெற்றியும் வரும் போது. (110:1)
இன்னும் மனிதர்கள் அல்லாஹ்வின் மார்க்கத்தில் கூட்டம் கூட்டமாக நுழைவதை (நபியே!) நீர் காணும் போது. (110:2)
உமது இரட்சகனின் புகழைத் துதித்து அவனிடம் நீர் பாவமன்னிப்புக் கோருவீராக! நிச்சயமாக அவன் மன்னிப்புக் கோருவதை அதிகம் ஏற்றுக்கொள்பவனாக இருக்கிறான். (110:3)
அத்தியாயம்.111
அல்லஹப். தீச்சுவாலை.
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையவனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் ஆரம்பம் செய்கிறேன்.
அபூலஹபின் இரு கைகளும் நாசமாகட்டும்.! மேலும் அவனும் நாசமாகட்டும்.! (111:1)
அவனது செல்வமோ,அவன் சம்பாதித்தவையோ அவனுக்கு எந்தப் பயனையும் அளிக்கவில்லை. (111:2)
தீச்சுவாலையுடைய நரகத்தில் அவனும்,விறகு சுமக்கும் அவனது மனைவியும் நுழைவார்கள். (111:3-4)
அவனது கழுத்தில் முறுக்கேறிய ஈச்சம் கயிறு இருக்கும்.(111:5)
அத்தியாயம்.112
அல்இஹ்லாஸ். உளத்தூய்மை.
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையவனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் ஆரம்பம் செய்கிறேன்.
அல்லாஹ் ஒருவன்தான் என (நபியே!) நீர் கூறுவீராக.! (112:1)
அல்லாஹ் (எவ்விதத்) தேவையுமற்றவன். (112:2)
அவன் (எவரையும்) பெறவுமில்லை.அவன் (எவருக்கும்) பிறக்கவுமில்லை. (112:3)
மேலும் அவனுக்கு நிகராக எவருமில்லை.(112:4)
அத்தியாயம்.113
அல்பலக். அதிகாலை.
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையவனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் ஆரம்பம் செய்கிறேன்.
அதிகாலையின் இரட்சகனிடம் அவன் படைத்தவற்றின் தீங்கை விட்டும் நான் பாதுகாப்புத் தேடுகிறேன் என (நபியே!) நீர் கூறுவீராக.! (113:1-2)
மேலும் இருள் படரும் போது ஏற்படும் இரவின் தீங்கை விட்டும்.(113:3)
இன்னும் முடிச்சுக்களில் ஊதும் பெண்களின் தீங்கை விட்டும். (113:4)
இன்னும் பொறாமைக்காரன் பொறாமைப்படும் போது ஏற்படும் தீங்கை விட்டும் (நான் பாதுகாப்புத் தேடுகிறேன் என நபியே! நீர் கூறுவீராக.!) (113:5)
அத்தியாயம்.114
அந்நாஸ். மனிதர்கள்.
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையவனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் ஆரம்பம் செய்கிறேன்.
மனிதர்களின் இரட்சகனும்,மனிதர்களின் அரசனும், மனிதர்களின் வணக்கத்திற்குரியவனாக இருப்பவனிடம், மறைந்திருந்து தீய எண்ணங்களை ஏற்படுத்துபவனின் தீங்கை விட்டும் நான் பாதுகாவல் தேடுகிறேன் என (நபியே!) நீர் கூறுவீராக.! (114:1,2,3,4)
அவன் மனிதர்களின் உள்ளங்களில் சந்தேகங்களை உண்டுபண்ணுகின்றான். (114:5)
(இத்தகையோர்) ஜின்களிலும்,மனிதர்களிலும் உள்ளனர். (114:6)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்;
“எவரேனும் அல்-குர்ஆனின் ஓர் எழுத்தை ஓதினால் அவருக்கு பத்து நன்மைகள்
எழுதப்படும். ஒரு நன்மை பத்து மடங்காக இருக்கும். அலிப், லாம், மீம் என்பது
ஓர் எழுத்து, என்று நான் கூறமாட்டேன். மாறாக அவை மூன்றும் மூன்று
எழுத்துக்களாகும்.” அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (றழி), ஆதாரம் : திர்மிதி
நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள், “எவருடைய உள்ளத்தில் அல்-குர்ஆனின் ஒரு சிறிய பகுதியாவது இல்லையோ, அவரது உள்ளம் பாழடைந்த வீட்டைப் போன்றதாகும். அறிபிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (றழி), ஆதாரம் : திர்மிதி
“ஜஹ்பர்” மற்றும் ‘அப்வா’ ஆகிய இரு இடங்களுக்கிடையில் நான் நபியவர்களுடன்
நடந்து போய்க் கொண்டிருந்தேன். அப்போது திடீரென பலத்த காற்று
வீசத்தொடங்கியது. கும்மிருட்டும் எம்மைச் சூழ்ந்து கொண்டது. அவ்வேளை
நபியவர்கள் சூறதுல்பலக், சூறதுந்நாஸ் ஆகிய இரு சூறாக்களையும் ஓதலானார்கள்.
பிறகு என்னைப்பார்த்து, “உக்பாவே! இந்த இரண்டு சூறாக்களையும் கொண்டு நீ
பாதுகாப்புத் தேடிக்கொள். பாதுகாப்புத் தேடுபவர்களுக்கு இவ்விரண்டையும்
தவிர வேறெதுவும் தேவையில்லை..” அறிவிப்பவர்: உக்பாபின் ஆமிர் (றழி) ஆதாரம்: அபூதாவூத்
எல்லாம் வல்ல அல்லாஹ் சத்தியத்தைத் தெளிவாக எடுத்துக் கூறும் சத்தியப்
போதகர்களாகவும் அவ்வழியில் ஏற்படும் இன்னல்களைச் சகித்துக் கொள்ளும்
உண்மைப் போராளிகளாகவும் எம்மையும் உங்களையும் ஆக்கி அருள் புரிவானாக.