(1) அமைதி, சமாதானம் (2) ஓரே இறைவனுக்கு முழுமையாக அடிபணிதல்
அண்ட சராசரங்களையும் படைத்து பரிபாலிக்கும் ஒரே இறைவனான அல்லாஹ்வை மட்டுமே
வணங்கி, அவன் இட்ட கட்டளைகளுக்கு முழுமையாக அடிப்பணிந்து ஒருவன்
வாழும்பொழுது அவன் இவ்வுலக வாழ்க்கையிலும் மரணத்திற்கு பின்னுள்ள
நிரந்தரமான வாழ்க்கையிலும் சமாதானமாகவும் நிம்மதியாகவும் வாழ்கிறான்.
அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் எவர் வழிப்படுகிறாரோ அவர் மகத்தான பாக்கியத்தை அடைந்து விட்டார். (33.71,24:52.)
எவர் அல்லாஹ்வின் தூதருக்குக் கீழ்படிகிறாரோ அவர் அல்லாஹ்வுக்குக் கீழ்படிந்தவர் ஆவார். (4:30)
இத்தூதருக்கு வழிப்படுங்கள் உங்கள் செயல்களை நீங்கள் வீணாக்கிவிடாதீர்கள். (47:33)
இங்கு மேலே சொல்லப்பட்ட அல்குர்ஆன் வசனங்கள் நபி(ஸல்) அவர்களின் சொல்,
செயல், அங்கீகாரங்களை முழுமையாகப் பின்பற்ற வேண்டுமென்பதை உணருகிறோம்.
ஹதீஸ் என்றால் என்ன? அல் ஹதீஸ் என்பது நபி (ஸல்) அவர்கள் சொன்னவை, செய்தவை, மற்றவர்கள் செய்யும்போது அங்கீகரித்தவை ஆகியவற்றை குறிக்கும்.
இவை நபி(ஸல்)அவர்களின் குடும்பத்தார்களான அஹ்லுல் பைத்துக்களாலும்,
தோழர்களான சஹாபாக்களாலும் குறித்து வைக்கப்பட்டும் மனனம் செய்யப்பட்டும்
பாதுக்காக்கப்பட்டது. பிற்காலத்தில் வந்த இமாம்களால் இவை நூல் வடிவில்
தொகுக்கப்பட்டது. இந்த நூல்களில் மிக ஆதாரப்பூர்வமானவை:- புகாரி, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதி, இப்னு மாஜா, நஸாயி எனும் ஆறு கிரந்தங்களாகும். இதற்கு அறபியில் "ஷீஆஉ ஸித்தா" என்று சொல்லப்படும்.
ஹதீஸ் குதுஸி என்றால்?
அல்லாஹ் சொல்கிறான் என்று முன்னுரையிட்டு நபி(ஸல்) அவர்கள் சொல்லும் பொன்மொழியாகும். இந்த தகவல் குர்ஆனில் இருக்காது.
அல்குர்ஆனும், ஹதீஸூல் குத்ஸியும்..
அல்குர்ஆன் என்பது அல்லாஹ்விடமிருந்து ஜிப்ரீயில்(அலை)அவர்கள் மூலமாக
நபி(ஸல்)அவர்களுக்கு வஹியின் மூலம் அருளப்பட்டது. உதாரணமாக அல்லாஹ்
கூறுகின்றான்.. இதைப் போன்ற ஒரு அத்தியாயத்தையாயினும் கொண்டு வந்து
காட்டுங்கள் என அல்குர்ஆன் சவால் விட்டது. அந்த சவால் அன்று தொட்டு இன்று
வரைக்கும் முறியடிக்கப்படாமல் தொடர்கின்றது என்றால் இது ஒரு
அற்புதமாகும்.
ஹதீஸூல் குத்ஸி இந்த சவாலுக்கு அடங்காது. அந்த
வார்த்தைகள் அல்லாஹ் சொன்னதாக நபி(ஸல்)அவர்கள் கூறியது. ஹதீஸூல்
குத்ஸியைப் பொறுத்தவரையில் அவற்றின் கருத்து வஹி மூலம் பெறப்பட்டது.ஆனால்
அந்தக் கருத்தை வெளிப்படுத்தப் பயன்படுத்தப்பட்ட வார்த்தைகள்
நபி(ஸல்)அவர்களது தெரிவாகும்.
இதனால் தான் ஹதீஸையும், ஹதீஸூல்
குத்ஸியையும் அறிவிக்கும் போது நபி(ஸ்ல) அவர்கள் பயன்படுத்திய அதே வார்த்தை
மறந்து விட்டால் அல்லது தவறி விட்டால் நபியவர்கள் இந்த அர்த்தத்தில்
பேசினார்கள் என்று கூறலாம். ஆனால் குர்ஆன் வசங்களைக் கூறும் போது அவ்வாறு
கூற முடியாது.
நாம் ஏற்கனவே குறிப்பட்டது போன்று அல்குர்ஆனை
ஓதுவது இபாதத்தாகும். ஆனால் ஹதீஸ், ஹதீஸூல் குத்ஸியை ஓதுவது இபாதத்தாகாது.
அவ்வாறே தொழுகை போன்ற அமல்களில் ஹதீஸ்களை கிராஅத்துக்குப் பதிலாக ஓதவும்
முடியாது.
இதனால் கீழே நபியவர்களை ஆரம்பமாக ஒருவர் வந்து
நபியவர்களிடத்தில் இஸ்லாம் என்றால் என்ன? ஈமான் என்றால் என்ன? இஹ்ஸான்
என்றால் என்ன? என்ற ஹதீஸ் தொடரையும், அதற்கு கீழ் ஹதீஸூல் குத்ஸி
சிலதையும் முடியுமான அளவு தந்துள்ளோம் ..இன்ஷா அல்லாஹ் ..இதை விளங்க
அல்லாஹ் நல்லருள் புரிய வேண்டும்.
ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர்
ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் ஜனங்களுக்கு மத்தியில் இருந்தார்கள்.
(அப்போது) ஒரு மனிதர் அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதர் அவர்களே!
“ஈமான்” என்றால் என்ன? எனக்கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் அவர்கள்
“அல்லாஹ்வையும் அவனது (மலக்குகளை) அமரர்களையும், அவனது வேதத்தையும், அவனது
சந்திப்பையும், அவனது தூதர்களையும் நம்பிக்கை கொள்வதும், இறுதியாக
எழுப்பப்படுவோம் என்பதை நீ நம்பிக்கை கொள்வதுமாகும்” என்றனர்.
அல்லாஹ்வின் தூதர் அவர்களே! “இஸ்லாம்” என்றால் என்ன? என (வந்திருந்தவர்)
கேட்டார். (அதற்கு) அல்லாஹ்வின் தூதர் அவர்கள் “அல்லாஹ்வை நீ வணங்குவதும்,
அவனுக்கு நீ எதையும் கூட்டாக்காமல் இருப்பதும், விதியாக்கப்பட்ட தொழுகைகளை
நீ நிறைவேற்றுவதும், விதியாக்கப்பட்ட ஜகாத்தை நீ நிறைவேற்றி வருவதும்,
ரமளானில் நீ நோன்பு நோற்பதுமாகும்” என்றனர்.
“அல்லாஹ்வின் தூதர்
அவர்களே! இஹ்ஸான் என்றால் என்ன என (வந்திருப்பவர்) கேட்டார். (அதற்கு
அல்லாஹ்வின் தூதர் அவர்கள்) நிச்சயமாக நீர் அல்லாஹ்வைக் காண்பது போன்றே
வணங்குவதாகும். நிச்சயமாக நீர் அல்லாஹ்வைப் பார்க்கவில்லையாயினும், அல்லாஹ்
நிச்சயமாக உம்மைப் பார்த்துக் கொண்டிருக்கிறான்” என்றனர்.
(வந்திருந்தவர்) “அல்லாஹ்வின் தூதர் அவர்களே! (“கியாமத்” எனப்படும்) இறுதி
நாள் எப்போது”? எனக் கேட்டனர். (அதற்கு அல்லாஹ்வின் தூதர் அவர்கள்)
“கேட்டவரை விட கேட்கப்படுபவர் இது பற்றி மிக அறிந்தவரல்லர். ஆயினும் அதன்
அடையாளங்களைப் பற்றி உமக்கு அடுத்து அறிவிக்கிறேன் (எனக்கூறி) அடிமைப்பெண்
தனது எஜமானனைப்பெற்று விடுவாளாயின் அது அந்நாளின் அடையாளங்களில்
உள்ளதாகும். ஆடையில்லாதவர்களும் காலில் செருப்பணியாதவர்களும் மக்களுக்குத்
தலைவர்களாக ஆகிவிடுவார்களாயின் அது(வும்) அந்நாளின் அடையாளங்களில்
உள்ளதாகும். ஆடு மேய்த்துத் திரிபவர்கள் மிக உயர்ந்த நீண்ட கட்டிடங்களுக்கு
உரிமையாளர்களாகி விடுவார்களாயின் அது(வும்) அந்நாளின் அடையாளங்களில்
உள்ளாதாகும். (இன்னும்) ஐந்து விஷயங்கள் - அவைகளை அல்லாஹ்வையன்றி வேறு
யாரும் அறியமாட்டார்கள்” (எனக் கூறிவிட்டு) பிறகு
நிச்சயமாக
அல்லாஹ்விடமே இறுதிநாள் பற்றிய அறிவு உண்டு. அவனே மழையை இறக்கி வைக்கிறான்.
மேலும் கர்ப்பங்களில் உள்ளவற்றையும் அவனே அறிகிறான். எந்த ஆத்மாவும் நாளை
எதைச் செய்யும் என அதற்கு தெரியாது. எந்த ஆத்மாவும் பூமியில் இறப்பெய்தும்
என்பதையும் அது அறியாது. நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவனாகவும் (செய்திகளை)
அறிவிப்பவனாகவும் இருக்கிறான்” அல்குர்ஆன் : 31: 34 என்ற வசனத்தை
ஒதிக்காட்டினார்கள்.
அதன் பிறகு (வந்திருந்த அந்த ) மனிதர்
திரும்பச் சென்றுவிட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் அவர்கள் “அந்த மனிதரை
மீண்டும் என்னிடம் அழைத்து வாருங்கள்” என்றனர். அவரைத் திரும்ப
அழைத்துவரச் சென்றவர்கள் யாரையும் (அம்மனிதரைக்) காணவில்லை என்றனர்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “இவர்கள்தான்
(வந்து சென்றவர்தான்) ஜிப்ரீல், மனிதர்களுக்கு அவர்களது மார்க்கத்தைக்
கற்றுத்தருவதற்காக வந்தனர்” என்றார்கள்.
1- நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபுஹுரைரா(ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். அல்லாஹ் கூறுகிறான்: 'ஆதமுடைய மகனே! நீ (எனக்காக) செலவிடு. நான் உனக்காக செலவு செய்வேன். நூல்: புகாரீ, முஸ்லிம்.
2- நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபுஹுரைரா(ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
அல்லாஹ் கூறுகிறான்: என்னுடைய அடியான் என்னைப்பற்றி நினைக்கின்ற விதத்தில்
நான் உள்ளேன். அவன் என்னைப் பற்றி அவனது மனத்திற்குள் நினைவு கூர்ந்தால்,
நானும் அவனைப் பற்றி எனது மனதிற்குள் நினைவு கூர்கிறேன். அவன் என்னை ஒரு
சபையில் நினைவு கூர்ந்தால், நானும் அவர்களை விட மேலான (வானவர்கள் நிறைந்த)
சபையில் அவனை நினைவு கூறுகிறேன். அவன் என்னை நோக்கி ஒரு சான் அளவு நெருங்கி
வந்தால், நான் அவனை நோக்கி ஒரு முழம் அளவு நெருங்குவேன். அவன் என்னை
நோக்கி ஒரு முழம் அளவிற்கு நெருங்கி வந்தால், நான் அவனை நோக்கி ஒரு பாகம்
நெருங்கிச் செல்வேன். என்னை நோக்கி அவன் நடந்து வந்தால், அவனை நோக்கி நான்
ஓடிச் செல்வேன். நூல்:புகாரி, முஸ்லிம்.
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
அல்லாஹுத்தஆலா படைப்பினங்களை படைக்க முடிவு செய்தபோது, தன் வசமுள்ள
ஏட்டில், 'என்னுடைய கருணை என்னுடைய கோபத்தை மிகைத்துவிடும் (என்று) தன்
மீது கடைமையாக்கி எழுதி தன் வசம் வைத்துக்கொண்டான்'.
நூல்:புகாரி,முஸ்லிம்,நஸயீ,இப்னுமாஜா.
3- நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபுஹுரைரா(ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
அல்லாஹ் சொன்னான்: ஆதமுடைய மக்கள் காலத்தை திட்டுகிறார்கள்.(ஆனால்) நானே
காலமாக (காலத்தின் போக்கை நிர்ணயிப்பவனாக) உள்ளேன. என்னுடைய கரத்திலேயே
இரவும், பகலும் உள்ளன. புகாரி, முஸ்லிம், அஹ்மத், அபூதாவுத், தாரமி, முஅத்தா.
4- நபிமுஹம்மது (ஸல்) அவர்கள் கூறியதாக அபுஹுரைரா(ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
அல்லாஹ் கூறினான்: நானே (எத்தேவையுமின்றி) தன்னிறைவு உள்ளவனாக
விளங்கும்போது, எனக்குத் துணையாக யாரும் தேவையில்லை. யாரேனும் எனக்கு
வேறொருவரை இணைவைக்கும் விவத்தில்; ஒரு செயலைச் செய்தால்,(எனது உதவியின்றி)
அவனுடைய இணைவைப்புடன் அவனை நான் விட்டு விடுகிறேன். நூல்: முஸ்லிம், அஹ்மத், இப்னுமாஜா.
5- நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபுஹுரைரா(ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
அல்லாஹ் கூறினான்: நானே (எத்தேவையுமின்றி) தன்னிறைவு உள்ளவனாக
விளங்கும்போது, எனக்குத் துணையாக யாரும் தேவையில்லை. யாரேனும் எனக்கு
வேறொருவரை இணைவைக்கும் விவத்தில்; ஒரு செயலைச் செய்தால்,(எனது உதவியின்றி)
அவனுடைய இணைவைப்புடன் அவனை நான் விட்டு விடுகிறேன். நூல்: முஸ்லிம், அஹ்மத், இப்னுமாஜா.
6- நபி (ஸல்) அவர்கள் கூறியதாக உக்பா இப்னு ஆமிர்(ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
'மலை உச்சியில் நின்று, தொழுகைக்கு அழைப்புக் கொடுத்து பின்பு தொழுகின்ற
இடையனை (ஆடு மேய்ப்பவனை)க் கண்டு அல்லாஹ் மகிழ்ச்சி அடைகிறான்.' அப்போது
அல்லாஹ் கூறுகிறான்: 'என்னுடைய இந்த அடியானை பாருங்கள். அவன் தொழுகைக்கு
அழைப்புக் கொடுத்து விட்டு, தொழுகிறான். அவன் என்னைப் பற்றி மிக அச்சஉணர்வு
கொண்டவனாக விளங்குகிறான். என்னுடைய (இந்த) அடியானின் பாவங்களை நான்
மன்னித்து, அவனை சுவர்கத்தினுள் நுழையச் செய்துவிட்டேன்.' நூல்: நஸயீ, அஹ்மத், அபூதாவுத்.
7- நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபுஹுரைரா(ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
இறுதித் தீர்ப்பு நாளில், அல்லாஹ்விடத்தில், அடியானின் கடமைகளில் முதன்
முதலாக அவனுடைய தொழுகை பற்றியே விசாரிக்கப்படும். (தொழுகையை சரியாக
நிறைவேற்றி) அவை செவ்வனே அமைந்திருந்தால், அடியான் வெற்றியும் ஜெயமும்
பெறுவான். (தொழுகையை சரியாக நிறைவேற்றாது இருந்ததின் காரணமாக) அவைகளில்
குறை காணப்பட்டால், அடியான் தோல்வியும், நஷ்டமும் அடைவான். அவனது கடமையான
தொழுகையில் ஏதாவது குறையிருப்பின், கட்டாய தொழுகையிலுள்ள பழுதை நீக்கி,
அதனை முழுமைபடுத்த, அடியான் உபரி தொழுகைகளை தொழுதுள்ளானா என்று பாருங்கள்.
என்று அல்லாஹ் கட்டளையிடுவான். பின்னர் (நோன்பு, ஜகாத் போன்ற) அனைத்துக்
கடமைகளுக்கும் இதே முறையில் தீர்ப்பளிக்கப்படும். நூல்: திர்மிதி.
8- நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூதர் அல் கிஃபாரி(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அல்லாஹ் கூறினான்: 'அடியார்களே! அநீதி இழைப்பதை என் மீது ஹராம்
ஆக்கியுள்ளேன். (நீங்கள்) உங்களுக்கிடையே ஒருவருக்கொருவர் அநீதி
இழைப்பதையும் தடை செய்துள்ளேன். எனவே, ஒருவர் மற்றவருக்கு அநீதி
இழைக்காதீர்கள்.
என் அடியார்களே! உங்களில் நான் நேர்வழி
காட்டியவர்களைத்;;;; தவிர மற்றவர்கள் அனைவரும் வழி கேட்டிலுள்ளீர்கள். எனவே
என்னிடம் நேர் வழியை வேண்டுங்கள். நான் உங்களுக்கு நேர்வழியைக்
காட்டுவேன்.
என் அடியார்களே! உங்களில் நான் உணவளித்தவர்களைத் தவிர
மற்றவர்கள் அனைவரும் பசியுடன் இருக்கின்றீகள். எனவே என்னிடம் உணவை
வேண்டுங்கள். நான் உங்களுக்கு உணவளிப்பேன்.
என் அடியார்களே!
உங்களில் நான் ஆடையளித்தவர்களைத் தவிர மற்றவர்கள் அனைவரும் ஆடையின்றி
உள்ளீர்கள். எனவே என்னிடம் ஆடையை வேண்டுங்கள். நான் உங்களுக்கு ஆடை
அணிவிப்பேன்.
என் அடியார்களே! நீங்கள் இரவும், பகலும் பாவம்
செய்கின்றீர்கள். நான் பாவங்கள் அனைத்தையும் மன்னிப்பேன். எனவே என்னிடம்
பாவமன்னிப்ப தேடுங்கள். நான் பாவங்களை மன்னிப்பேன்.
என்
அடியார்களே! எனக்கு நன்மையோ, தீமையோ செய்வதற்கு உங்களால் கண்டிப்பாக
முடியாது. அவ்வாறு இயன்றால் அல்லவா எனக்கு நன்மையோ, தீமையோ செய்வீர்கள்.
என் அடியார்களே! முதலானவருக்கும், இறுதியானவருக்கும், மனிதர்களுக்கும்,
ஜின்களுக்கும், உங்களிலே மிகவும் பயபக்தியுடையவருடைய இருதயம் இருந்த
போதிலும், எனது சாம்ராஜியத்தில் அவர்களால் எதனையும் அதிகரித்து விட
முடியாது.
என் அடியார்களே! முதலானவருக்கும், இறுதியானவருக்கும்,
மனிதர்களுக்கும், ஜின்களுக்கும், உங்களிலே மிகவும் கொடியவருடைய இருதயம்
இருந்த போதிலும், எனது சாம்ராஜியத்தில் அவர்களால் எதனையும் குறைக்க
முடியாது.
என் அடியார்களே! முதலானவருக்கும், இறுதியானவருக்கும்,
மனிதர்களுக்கும், ஜின்களுக்கும், ஓர் இடத்தில் நின்று கொண்டு என்னிடம்
(எதையாவது) வேண்டினால், நான் அவர்களில் ஒவ்வொருவருக்கும் அவர்கள் வேண்டியதை
கொடுத்தாலும், என்னிடமுள்ளவற்றுக்கு, ஒரு ஊசியைக் கடலில் முக்கி எடுத்தால்
ஏற்படும் இழப்பைவிட அதிகமான இழப்ப ஏற்படாது.
என் அடியார்களே!
நிச்சயமாக நான் உங்களுடைய செயல்களைக் கொண்டே அடையாளம் காண்பேன். பிறகு
அவைகளுக்கு கூலியும் வழங்குவேன். எனவே (மறுமையில் தனக்கு) நன்மையைக்
காண்பவன் அல்லாஹ்வாகிய என்னை புகழட்டும். இதற்கு மாறாக காண்பவன், தன்னைத்
தானே பழித்துக் கொள்ளட்டும். நூல்:முஸ்லிம்.
9- நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அல்லாஹ் கூறினான் : இறுதித் தீர்ப்பு நாளில் மூன்று நபர்களுக்கு நான்
எதிராளியாக (பகைவனாக) இருப்பேன். ஒருவன் என் பெயரைச் சொல்லி கொடுத்த வாக்கை
முறித்தவன். சுதந்திர மனிதனை விற்று, அத்தொகையை விழுங்கியவன். மற்றொருவன்.
வேலையாளை அமர்த்தி, அவனிடம் முழு வேலையையும் வாங்;கியபின், அவனுக்குரிய
கூலியைக் கொடுக்காதவன். நூல்: புகாரி.
10- நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபுஹுரைரா(ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
அல்லாஹ் (தனது) ஒரு அடியானை நேசித்தால், அவன் ஜிப்ரயீல் (அலை) அவர்களை
அழைத்து நான் இன்ன மனிதரை நேசிக்கின்றேன். எனவே நீயும் அவரை நேசிப்பீராக
என்று கூறுவான். ஜிப்ரயீல் (அலை) அவ்வாறே நேசிப்பார். பின்பு ஜிப்ரயீல்
(அலை) அல்லாஹ் இன்ன மனிதரை நிச்சயமாக நேசிக்கிறான். எனவே அவரை நேசியுங்கள்.
என்று வானலோகத்தில் அறிவிப்பார். (பின்னர்) வானவர்களும் அம்மனிதரை
நேசிப்பார்கள். பின் பூமியில் அவர் அங்கீகரிக்கப்படுவார். என அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
மேலும், அல்லாஹ் (தனது) ஒரு
அடியான் மீது கோபம் கொண்டால், ஜிப்ரயீல் (அலை) அவர்களை அழைத்து நான் இன்ன
மனிதர் மீது கோபம் கொண்டுள்ளேன். எனவே நீரும் அவர்மீது கோபம் கொள்வீராக
என்று கூறுவான். பின் ஜிப்ரயீல் (அலை) அவர் மீது கோபம் கொள்வார். பின்
ஜிப்ரயீல் (அலை) அவர்கள் வானவர்களை அழைத்து அல்லாஹ் இன்ன மனிதர் மீது
நிச்சயமாக கோபம்கொண்டுள்ளான். எனவே நீங்கள் அவர் மீது கோபம்கொள்ளுங்கள்.
என்று அறிவிப்பார். எனவே வானவர்களும் அவர் மீது கோபம் கொள்வார்கள்.
இவ்வுலகிலும் அவர்மீது கோபம் நிலை நாட்டப்படும். என அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல் : புகாரி, முஸ்லிம்.
எல்லாம்
வல்ல அல்லாஹ் சத்தியத்தைத் தெளிவாக எடுத்துக் கூறும் சத்தியப்
போதகர்களாகவும் அவ்வழியில் ஏற்படும் இன்னல்களைச் சகித்துக் கொள்ளும்
உண்மைப் போராளிகளாகவும் எம்மையும் உங்களையும் ஆக்கி அருள் புரிவானாக.
No comments:
Post a Comment