Powered By Blogger

Sunday, December 30, 2012

இரகசியம் அது எவ்வளவு பெரிய பாதிப்பு


 

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ..
அளவற்ற அருளாளனும்,நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயர் கொண்டு.இரகசியம் அது எவ்வளவு பெரிய பாதிப்பு என்ற தலைப்பை ஆரம்பம் செய்கின்றேன். அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருள் புரிவானாக..


 
அல்லாஹ் இவ்வுலகில் சிறந்தவனாக,உயர்ந்தவனாக மனித சமூகத்தைப் படைத்திருக்கின்றான். இந்த மனிதனுக்கு அல்லாஹ் எண்ணிலடங்காத அருட்கொடைகளை வழங்கியும் இருக்கின்றான்.இந்த நிலையில் மனிதனுக்கு அல்லாஹ் அவன் இவ்வுலகில் வாழ்வதற்கான வழிமுறைகளையும் காண்பித்தான்.ஆனால் மனிதன் தன் மனம் போன போக்கில் தன் கால்பாதங்களை அடியெடுத்து வைக்கிறான் என்றால் இது அந்த மனிதனுக்கு எவ்வளவு பெரிய நஸ்டம் என்பதை சற்றும் உணராதவனாக இவ்வுலகில் மனிதன் வாழ்ந்து கொண்டிருக்கின்றான். மனிதன் மனிதனுக்குச் செய்யவேண்டிய கடமைகள் ,உரிமைகள் ஏறாளம் அதில் பிண்ணிப் பிணைக்கப்பட்ட ஒரு விடையம் மனிதன் பேசும் இரகசியங்கள். இந்த இரகசியம் என்பது மூன்று நபர் இருக்கும் வேளையில் ஒரு நபரை அப்புறம் தள்ளிவிட்டு இரண்டு பேர் ஒன்றாக சேர்ந்து தள்ளப்பட்ட மனிதனின் முன்னிலையில் எதுவாக இருந்தாலும் சரி அவர்கள் பேசும் பேச்சை இரகசியம் என்று சொல்லலாம். இந்தச் சந்தர்ப்பத்தில் மூன்றாவது நபரில் தள்ளப்பட்டவர் பல எண்ணங்கள் அவர் உள்ளத்தில் தோன்றும் ,இவர்கள் என்னைப்பற்றித்தான் பேசுகின்றார்கள் என்ற எண்ணம் நிச்சயமாக அவர் உள்ளத்தில் தோன்றும் என்றால் இந்த இரு நபரும் ஷைத்தானின் அடிவயிற்றில் இருக்கும் இரையைப்போன்று ஷைத்தானின் சொந்தக்காரர்கள்.

இன்றைக்கு பேச்சுக்களில் இரகசியம் என்ற ஒரு போர்வை எந்தளவுக்கு மிதமிஞ்சி பேசப்படுகின்றது என்றால் மிகவும் கவலைக்குரிய விடையமாக இருக்கின்றது. தன் வீட்டுக்குள் நடக்கும் விடையங்களை வீதிக்கு கொண்டு சென்று தன் மனைவியைப்பற்றி,தன் பிள்ளைகளைப் பற்றி, தன் பெற்றோர்களைப் பற்றி இரகசியங்கள் இன்னோரன்ன நபரிடம் பேசுவதையும் பார்க்கின்றோம். நண்பர்களுக்கு மத்தியில் நட்பின் உச்சகட்டத்தை அடைந்து அந்த நட்பில் இடைச்சருக்கல் ஏற்பட்டு அந்த விளைவுகள் நீடித்து அவரிடத்தில் இருந்த இவரின் இரகசியங்கள் பந்தி முதல் பாதைவரை பேசப்படுவதையும் பார்க்கின்றோம் . இவைகள் இஸ்லாத்தில் ஹராம் , இஸ்லாம் தடுத்தவைகள் தான் இப்படிப் பேசப்படும் இரகசியப் பேச்சுக்கள். தன்னை ஒரு முஸ்லிம் என்றும் மார்க்கத்தின் சுமை தாங்கி என்று பேசப்படும் மனித சமூகத்தில் இந்த பேச்சு என்ற தோறனை சர்வசாதாரணமாக மாறிவிட்டது.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு மனிதனின் இஸ்லாம் சிறப்பானது. நிறைவானது என்பது அவன் தனக்குத் தேவையற்றவைகளை விட்டுவிடுவதாகும்
அறிவிப்பவர்:அபூஹுரைரா (ரலி),
நூல்: திர்மிதி


மற்ற உயிரினங்களுக்கு இல்லாத சிறப்பம்சமாக மனிதர்கள் பேசும் திறனை பெற்று இருக்கிறார்கள்.பேசுதல் மற்றும் எதிராளி பேசுதலை புரிந்து கொள்ளுதல் என்ற இரு முக்கிய நிகழ்வுகளை மனித மூளையின் ஒரே பகுதியே மேற்கொள்கிறது என்பது ஆச்சரியமான விடயமாகும்.
இந்த இரகசியம் என்பது ஒரு துரோகம் என்று சொன்னாலும் அது மிகையாகாது. இந்த மனிதர்கள் ஷைத்தானின் கூட்டாளிகள்,ஷைத்தானின் நண்பர்கள் அவனின் அடிச்சுவட்டைப் பின்பற்றக்கூடியவர்கள் ,இப்பாடியானவர்களைதான் ஷைத்தான் எதிர்பார்த்துக்கொம்டிருக்கிறா
ன். மனிதன் இன்றைக்கு அவன் பேசும் பேச்சுக்கள் மூலம், அவன் எழுத்து வடிவில் உருவாக்கும் பேச்சுக்களிலும் இரகசியம் இன்றைக்கு பந்தி முதல் பாதைவரை அறங்கேற்றப்படுகின்றது என்றால் இது மனிதனின் பண்புகளுக்கு அப்பால்பட்ட விடையமாகும். அல்லாஹ் பின்வருமாறு அல்குர்ஆனில் கூறுகின்றான்.

தர்மம் அல்லது நன்மையானவற்றை, அல்லது மக்கள் மத்தியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல் ஆகியவற்றை ஏவுகின்றவனைத் தவிர , அவர்களின் இரகசியப் பேச்சுக்களில் அதிகமானதில் எவ்வித நன்மையும் இல்லை. யார் இதை அல்லாஹ்வின் பொருத்தத்தை நாடிச் செய்கிறாரோ அவருக்கு நாம் மகத்தான கூலியை வழங்குவோம்.(அல்குர்ஆன். 4:114)

வானங்களில் உள்ளவற்றையும், பூமியிலுள்ளவற்றையும், நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவன் என்பதை நீர் பார்க்கவில்லையா?. மூவரின் இரகசியப் பேச்சில் அவன் அவர்களில் நான்காமவனாக இருக்கின்றான். இன்னும் ஜவரில் அவன் அவர்களில் ஆறாமவனாக இருக்கின்றான். இதைவிடக்குறைவாகவோ, அல்லது கூடுதலாகவோ இருந்தாலும் அவர்கள் எங்கிருந்த போதிலும் அவன் அவர்களுடனேயே இருக்கின்றான். பின்னர் அவர்கள் செய்தவற்றை அவன் அவர்களுக்கு மறுமை நாளில் அறிவிப்பான். நிச்சயமாக அல்லாஹ் யாவற்றையும் நன்கறிந்தவன். (அல்குர்ஆன்.58:7)

அதாவது மூவரில் ஒருவரைப் புறக்கணித்து விட்டு இருவர் மட்டும் இரகசியம் பேசுதல். இது சபைக்குக் கேடு விளைவிப்பவைகளில் ஒன்றாகும். மேலும் முஸ்லிம்களுக்கு மத்தியில் பிரிவினையையும், விரோதத்தையும், குரோதத்தையும் தோற்றுவிப்பதற்காக ஷைத்தான் செய்யும் ஒரு சூழ்ச்சி ஆகும்.

இதன் நிலையையும் காரணத்தையும் தெளிவுபடுத்தியவாறு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘நீங்கள் மூன்று பேர் இருந்தால் ஒருவரைப் புறக்கணித்து விட்டு இருவர் மட்டும் இரகசியம் பேசாதீர்கள் மற்றவர்களும் வந்து நீங்கள் எல்லோரும் கலந்திருந்திடும் வரையில்! ஏனெனில் அது அவருக்கு மனம் வருந்தச் செய்யும்’ அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி), நூல்: புகாரி.

நால்வர் இருக்கும் போது மூவர் மட்டும் இரகசியம் பேசுவதையும், ஐவர் இருக்கும் போது நால்வர் மட்டும் இரகசியம் பேசுவதையும், இப்படியாக ஒருவரை விட்டு விட்டு மற்றவர்கள் சேர்ந்து இரகசியம் பேசுவதையும் இது உள்ளடக்கும். இதுபோல் மூன்றாமவருக்குத் தெரியாத மொழியில் இருவர் இரகசியம் பேசுவதையும் இது உள்ளடக்கும். இப்படியாக ஒருவரை விட்டு விட்டு மற்றவர்கள் இரகசியம் பேசுவது ஒரு வகையில் அவரை அற்பமாகக் கருதுவதாக அமையும். அல்லது தன்னைப் பற்றி அவர்கள் தவறாகப் பேசுகிறார்களோ என்பது போன்று அவர் எண்ணத் தோன்றும் என்பதில் ஐயமில்லை.

எவர்கள் இரகசியம் பேசுவதைவிட்டும் தடுக்கப்பட்டு, பின்னர் தாம் எதைவிட்டும் தடுக்கப்பட்டார்களோ அதன் பால் மீண்டு பாவம் செய்தல்,வரம்பு மீறுதல்,இத்தூதருக்கு மாறு செய்தல் போன்றவற்றில் இரகசியம் பேசுவோரை (நபியே!) நீர் பார்க்கவில்லையா? அவர்கள் உம்மிடம் வந்தால்,அல்லாஹ் உமக்கு வாழ்த்துக் கூறாததைக் கொண்டு அவர்கள் உமக்கு வாழ்த்துக் கூறுகின்றனர்.மேலும் (இவர் உண்மையான தூதராயின்) நாம் கூறியதற்காக அல்லாஹ் எம்மைத் தண்டிக்கவேண்டாமா? என்றும் அவர்கள் தமக்குள் கூறிக்கொள்கின்றனர்.நரகமே அவர்களுக்குப் போதுமாகும்.அதிலே அவர்கள் நுழைவார்கள். அது கெட்ட செல்லுமிடமாகும். (அல்குர்ஆன்.58:8)

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் இரகசியம் பேசினால், பாவம் செய்தல், வரம்பு மீறுதல், இத்தூதருக்கு மாறு செய்தல் போன்றவற்றில் இரகசியம் பேச வேண்டாம். எனினும் நன்மையையும்,பயபக்தியையும் குறித்து நீங்கள் இரகசியம் பேசுங்கள். நீங்கள் எவன்பால் ஒன்று திரட்டப்படுவீர்களோ அந்த அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள். (அல்குர்ஆன்.58:9)

நம்பிக்கை கொண்டோரைக் கவலையுறச் செய்வதற்காக இரகசியம் பேசுவது ஷைத்தானில் நின்றுமுள்ளதாகும்.அல்லாஹ்வின் அனுமதியின்றி அது இவர்களுக்கு எந்த ஒரு தீங்கையும் ஏற்படுத்தாது.நம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வின் மீதே முழுமையாக நம்பிக்கை வைக்கட்டும். (அல்குர்ஆன்.58:10)

ஒரு சபையில், ஒரு சமுதாயத்தில் இருக்கும் போது இருவர் குசு குசுவென்று இரகசியம் பேசினால் இதுவும் ஷைத்தானின் வேலையாகும். ஏனென்றால் இரகசியம் பேசிக் கொண்டிருந்தவர்களிடம் கேட்டால், ஒன்றுமில்லை சும்மா தான். இல்லை.... எந்தக் கடையில் சட்டை எடுக்கலாம் என்று பேசிக் கொண்டிருந்தோம் என்று கூசாமல் பொய் சொல்லுவார்கள். இப்படி பொய் சொல்ல என்ன அவசியம்? எனவே எல்லாரும் இருக்குமிடத்தில் இரகசியம் பேசாமல் இருப்பதே சிறந்தது.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: பலமான இறைநம்பிக்கையாளர், பலவீனமான இறைநம்பிக்கையாளரை விடச் சிறந்த வரும் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானவரும் ஆவார். ஆயினும்,அனைவரிடமும் நன்மை உள்ளது. உனக்குப் பயனளிப்பதையே நீ ஆசைப்படு. இறைவனிடம் உதவிதேடு. நீ தளர்ந்து விடாதே. உனக்கு ஏதேனும் துன்பம் ஏற்படும் போது, "நான் (இப்படிச்) செய்திருந்தால்அப்படி அப்படி ஆயிருக்குமே!'' என்று (அங்கலாய்த்துக்) கூறாதே. மாறாக, "அல்லாஹ்வின் விதிப்படி நடந்து விட்டது. அவன் நாடியதைச் செய்து விட்டான்'' என்று சொல். ஏனெனில், ("இப்படிச் செய்திருந்தால் நன்றாயிருந்திருக்குமே'என்பதைச் சுட்டும்) "லவ்' எனும் (வியங்கோள் இடைச்)சொல்லானது ஷைத்தானின் செயலுக்கே வழி வகுக்கும்.
அறிவிப்பவர்:அபூஹுரைரா (ரலி),
நூல்: முஸ்லிலிம் 5178


கவர்ச்சிகரமான சொற்களையும் பொய் பேச்சுக்களையும் கூறி மனித உள்ளத்தில் சலனத்தை ஏற்படுத்தி மனிதனை நிலைகுலையச் செய்து தவறில் சேர்ப்பதே ஷைத்தானின் ஊசலாட்டமாகும்.

இவ்வாறே மனிதர்களிலும், ஜின்களிலும் உள்ள ஷைத்தான்களை ஒவ்வொரு நபிக்கும் பகைவர்களாக ஆக்கினோம். ஏமாற்றுவதற்காக கவர்ச்சிகரமான சொற்களை அவர்களில் ஒருவர் மற்றவருக்கு அறிவிக்கின்றனர். (முஹம்மதே) உமது இறைவன் நாடியிருந்தால் அவர்கள் இதைச் செய்திருக்க மாட்டார்கள். அவர்கள் இட்டுக் கட்டுவதோடு அவர்களை விட்டு விடுவீராக! (அல்குர்ஆன்: 6:112)

இப்படி கவர்ச்சிகரமான சொற்களைப் பயன்படுத்தித்தான் முதல் மனிதரும் முதல் நபியுமாகிய ஆதம் அவர்களையும் அவர்களது மனைவியையும் ஷைத்தான் கெடுத்ததாக குர்ஆனில் அல்லாஹ் சொல்லுகிறான்.

அவ்விருவரின் மறைக்கப்பட்ட வெட்கத்தலங்களை வெளிப்படுத்துவதற்காக ஷைத்தான் அவ்விருவருக்கும் தீய எண்ணத்தை ஏற்படுத்தினான். "இருவரும் வானவர்களாக ஆகிவிடுவீர்கள் என்பதற்காகவோ, நிரந்தரமாக இங்கேயே தங்கிவிடுவீர்கள் என்பதற்காகவோ தவிர உங்கள் இறைவன் இம்மரத்தை உங்களுக்குத் தடை செய்யவில்லை'' என்று கூறினான். (அல்குர்ஆன்: 7:20)

நாம் மார்க்கத்திற்காகவும், ஏழை எளியோருக்காவும், உற்றார் உறவினருக்காகவும் செலவிடுகிறோம். இதனால் நமது பொருளாதாரம் குறையாது. மாறாக அல்லாஹ்வின் அருளால் ஒன்றுக்குப் பத்து பிறகு நூறு பிறகு ஏழுநூறு மடங்கு வரை வளம் பெருகும் என்று நம்பி செலவு செய்ய வேண்டும். இப்படிச் செய்வது மலக்குமாரின் தூண்டுதல். ஆனால் ஷைத்தான் இப்படிச் செலவு செய்வதினால் நமக்கு வறுமை ஏற்படுவதாக பயமுறுத்துகிறான். ஷைத்தானின் அச்சுறுத்தலுக்குப் பயந்து செலவு செய்வதைக் குறைத்துக் கொண்டாலோ அல்லது செலவே செய்யாமல் இருந்தாலோ நாம் அவனது ஆளுமைக்குள் இருக்கிறோம் என்பதை விளங்க வேண்டும். எந்த மாதிரி எண்ணங்கள் நம்மிடத்தில் வந்தாலும் இறைவனின் பாதையில் நம்மால் இயன்றதைச் செய்வதே ஷைத்தானை நாம் வெல்கிறோம் என்பதற்கான சான்று.

எனவே ஷைத்தான் என்பவன் மக்களை பலவகையில் வழிகெடுக்கவேண்டும் என்ற ஒரே அவாவில் இருக்கின்றான். இந்த ஷைத்தானின் தீங்கை விட்டும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்,உண்மை முஃமின்களாக மாற வேண்டும் என்றால் நாம் பேசுகின்ற பேச்சுக்கள் அல்லாஹ்வுக்கும்,அவன் தூதருக்கும் பொருத்தமானதாக இருக்கவேண்டும். பேசுகின்ற பேச்சுக்கள் நன்மை தரக்கூடியதாக அமைய வேண்டும் இதனை நபியவர்கள் இப்படிக் கூறுகின்றார்கள்.
யார் ஒருவர் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் விசுவாசம் கொள்கின்றாரோ அவர் பேசினால் நல்லதையே பேசட்டும் அல்லது மௌனமாக இருக்கட்டும்’
(அறிவிப்பவர் :
அபூஹுரைரா (ரலி),
ஆதாரம் : புகாரி)

நல்லதைப் பேசுவோம்,
இரகசியங்களைப் பாதுகாப்போம்,
நல்லெண்ணங்களை உருவாக்குவோம்,
நேற்று ,இன்று , நாளை இதில் நாளைய பொழுதை சீராக்குவோம்,
அல்குர்ஆனின் போதனைகளை செவிமடுப்போம்,
நபிகளிரின் உபதேசங்களை நம் வாழ்வில் கடைப்பிடிப்போம்,
ஹராத்தை விட்டும் தூரமாகுவோம்,
நேற்று அவருக்கு இன்று நமக்கு என்ற உணர்வை உறுதியாக்குவோம்,
கண்கண்டதை கை செய்யும்,செய்யும் செயலை சீராகச் செய்வோம்,
ஷைத்தானின் செயலை விட்டும் தூரமாகும்,
அல்லாஹ்விடத்தில் அனைவருக்கும் பிராத்தை செய்வோம்,
நல்லோர் வழியில் சென்று, உயர்ந்த சுவர்க்கத்தை அடைவோமாக,

ஆமீன் ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்.
 
அஹமட் யஹ்யா, ஹொரோவபதான,அனுராதபுரம்.SRI LANKA. 
 

No comments:

Post a Comment