Powered By Blogger

Sunday, December 23, 2012

சொற்களும் அதன் அர்த்தங்களும்.





 
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ.
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனும் அல்லாஹ்வின் திருநாமம் போற்றி துவங்குகின்றேன்...அல்ஹம்துலில்
லாஹ்.

சொல்லிலும்,செயலிலும் இஸ்லாத்தைக் கலப்போம்.
சமூக உறவில் சகோதரத்துவத்தை வளர்ப்போம்.

1- அல்லாஹ்.
அல்லாஹ் என்பது. ஒப்புயர்வற்ற வணக்கத்துக்குத் தகுதியான ஒருவனைக் குறிக்க ஆதிகாலம் தொட்டே அல்லாஹ் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது.

"நீங்கள் எதையும் அறியாதவர்களாக இருந்த நிலையில் உங்கள் தாய்மார்களின் வயிற்றிலிருந்து அல்லாஹ்வே உங்களை வெளியேற்றினான்."  (அல்குர்ஆன். 16:78)

2- இலாஹ்.
இலாஹ் என்றால்.  வணக்கத்திற்குரியவன்.வணங்கப்படத் தகுதியானவன்.அல்லாஹ்வைக் குறிக்க இலாஹ் என்ற பதம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

"மனிதனின் இரட்சகனும், மனிதர்களின் அரசனும், மனிதர்களின் வணக்கத்திற்குரியவனுமாக இருப்பவனிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்."
(அல்குர்ஆன்.114:1,2,3)

3- ரப்பு.
ரப்பு என்பது . தலைவவன், உரிமையாளன், எஜமான் போன்ற அர்த்தங்களில் பயன்படுத்தப்படுகின்றது.

"எங்கள் இரட்சகனே நாம் நம்பிக்கை கொண்டோம். எனவே எம்மை மன்னித்து எங்களுக்கு அருள் புரிவாயாக. " (அல்குர்ஆன். 23:109)

4- அர்ஷ்.
அர்ஷ் என்றால் . அல்லாஹ் ஏழு வானங்களுக்கும் அப்பால் உள்ள அர்ஷ் எனும் சிம்மாசனத்தின் மேலிருந்து ஆட்சி செய்கின்றான்.

"அல்லாஹ்தான் வானங்களை  நீங்கள் பார்க்கக்கூடிய தூண்களின்றி உயர்த்தி பின்னர் அர்ஷின் மீது அமர்ந்தான்." (அல்குர்ஆன். 13:2)

5- அன்ஸார்.
ன்ஸார் என்றால். மக்காவிலிருந்து மதீனாவை நோக்கி வந்த முஸ்லிம்களை அரவணைத்து அவர்களுக்கு உதவி புரிந்தவர்கள் அன்ஸார்கள். "அன்ஸார்" என்றால்?  உதவி செய்பவர்கள்.

"அல்லாஹ் இந்த நபியையும், முஹாஜிர்களையும், அன்ஸாரிகளையும் மன்னித்து விட்டான்." (அல்குர்ஆன். 9:117)

6- இஸ்லாம்.
இஸ்லாம் என்பது. ஆதம்(அலை)அவர்கள் முதல் நபி(ஸல்)அவர்கள் வரை அல்லாஹ்வினால் அனைத்து மக்களுக்கும் அருளப்பட்டதே இஸ்லாம் மார்க்கம். இஸ்லாம் என்றால்? சாந்தி,சமாதானம் என்று அர்த்தம்.

"அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக (அங்கிகரிக்கப்பட்ட) மார்க்கம் இஸ்லாம் தான்."  (அல்குர்ஆன். 3:19)

7- இன்ஜீல்.
இன்ஜீல் என்பது ஒரு வேதம்.பல்வேறுபட்ட தூதர்களுக்கும் வேதங்கள் அருளப்பட்டன. அதன்படி மூஸா நபிக்கு தவ்ராத்தும், தாவூத் நபிக்கு ஸபூரும், ஈஸா நபிக்கு இன்ஜிலும் வழங்கப்பட்டதாக அல்குர்ஆன் கூறுகிறது.

"அவருக்கு நாம் இன்ஜீலை வழங்கினோம், அதில் நேர்வழியும், ஓளியும் இருக்கின்றன." (அல்குர்ஆன். 5:46)

8- இஃதிகாப்.
இஃதிகாப் என்றால்.அல்லாஹ்வை வணங்குவதற்காக காலத்தையும்,நேரத்தையும் ஒதுக்கி உலக விவகாரங்களிலிருந்து விடுபட்டு  பள்ளியில் தங்கியிருப்பதற்கு இஃதிகாப் என்று கூறப்படும்.

 "இன்னும் நீங்கள் பள்ளிவாசலில் தனித்து இஃதிகாபில் இருக்கும் போது உங்கள் மனைவியருடன் கூடாதீர்கள்” (அல்குர்ஆன். 2:187)
  
“ நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு ரமழான் மாதத்திலும் பத்து நாட்கள் இஃதிகாப் இருப்பார்கள். அவர்கள் மரணித்த வருடத்திலே இருபது நாட்கள் இஃதிகாப் இருந்தார்கள்.” என அபூ ஹுரைரா (றழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (ஆதாரம் - புகாரி)

9- இத்தா.
இத்தா என்றால்.கணவனை இழந்த அல்லது கணவனால் விவாகரத்துச் செய்யப்பட்ட அல்லது கணவனிடமிருந்து விவாகரத்துப் பெற்ற பெண்கள் குறிப்பிட்ட காலம் மறுமணம் செய்யது காத்திருக்கும் காலத்துக்கு இத்த எனறு சொல்லப்படும். 1- கணவனை இழந்தவர்கள் 4 மாதமும் 10 நாட்களும் . 2- விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்களில்  மாதவிடாய் ஏற்பட்டவர்கள் மூன்று மாதவிடாய் ஏற்பட்டு சுத்தமாகும் வரையும். 3-  மாதவிடாய் ஏற்பட்டவர்களும், மாதவிடாய் அற்றுப் போனவர்களும் மூன்று மாதங்கள் வரையும், 4-  கர்ப்பிணிகளின் இத்தாக் காலம் குழந்தையைப் பிரசவிக்கும் காலம் வரையும் காத்திருக்க வேண்டும். இவைகளுக்கு இத்த என்று சொல்லப்படும்.

‘ உங்களில் எவரேனும் மனைவியரை விட்டு மரணித்தால் நான்கு மாதங்களும் பத்து நாட்களும் (மறுமணம் செய்யாமல்) அப்பெண்கள் காத்திருக்க வேண்டும். அந்தக் காலக்கெடுவை நிறைவு செய்து விட்டால் அவர்கள் தம் விஷயமாக நல்ல முறையில் முடிவு செய்வதில் உங்கள் மீது எந்தக் குற்றமும் இல்லை. நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.’ (அல்குர்ஆன் 2:234)

10- இஹ்ராம்.
இஹ்ராம் என்றால்.ஹஜ் அல்லது உம்ரா செய்பவர்கள் கஃபாவுக்குச் செல்லும் போது "மீகாத்" எல்லையில் அல்லாஹ்வுக்காகச் செய்கிறேன் என்ற எண்ணத்துடன் அணியும் ஆடையையே இஹ்ராம் எனப்படும். 

ஹஜ்ஜுக்குரிய காலம் குறிப்பிடப்பட்ட மாதங்களாகும்; எனவே, அவற்றில் எவரேனும் (இஹ்ராம் அணிந்து) ஹஜ்ஜைத் தம் மீது கடமையாக்கிக் கொண்டால், ஹஜ்ஜின் காலத்தில் உடலுறவு, கெட்ட வார்த்தைகள் பேசுதல், சச்சரவு – ஆகியவை செய்தல் கூடாது; நீங்கள் செய்யும் ஒவ்வொரு நன்மையையும் அல்லாஹ் அறிந்தனாகவே இருக்கிறான்; மேலும் ஹஜ்ஜுக்குத் தேவையான பொருட்களைச் சித்தப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள்; நிச்சயமாக இவ்வாறு சித்தப்படுத்தி வைப்பவற்றுள் நன்மை மிக்கது, தக்வா(என்னும் இறையச்சமே) ஆகும்; எனவே நல்லறிவுடையோரே! என்னையே அஞ்சி வாழுங்கள் (அல்குர்ஆன் 2:197).

 யமன் வாசிகள் (ஹஜ்ஜுக்குத் தேவையான) பொருள்களைச் சேகரிக்காமல் ஹஜ்ஜுக்கு வருவார்கள். மேலும், ‘நாங்கள் இறைவன் மீது நம்பிக்கை வைத்துள்ளோம்’ என்றும் கூறுவார்கள். மக்கா வந்தடைந்தால் மக்களிடம் யாசகம் கேட்பார்கள். இது குறித்தே அல்லாஹ், “(ஹஜ்ஜுக்குத் தேவையான) பொருட்களைச் சித்தப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள், நிச்சயமாக இவ்வாறு சித்தப்படுத்தி வைப்பவற்றுள் மிகவும் நன்மையானது தக்வா (என்னும் இறையச்சமே) ஆகும்” என்ற வசனத்தை இறக்கினான். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) (நூல்: புகாரி 1523).

11- ஈமான்.
ஈமான் என்றால் நம்பிக்கை. அல்லாஹ்வையும், வானவர்களையும், தூதர்களையும், வேதங்களையும், மறுமை நாளையும், கழா கத்ர் எனும் விதியையும் நம்புவதே ஈமானாகும்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஒருநாள் மக்கள் முன்வந்திருந்தார்கள். அப்போது ஒருவர் (வாகனமேதுமின்றி) நடந்துவந்து, ‘இறைத்தூதர் அவர்களே! ‘ஈமான்’ எனும் இறைநம்பிக்கை என்றால் என்ன?’ என்று கேட்டார்.அவர்கள், 

‘ஈமான்’ எனும் இறைநம்பிக்கை என்பது, அல்லாஹ்வையும், அவனுடைய வானவர்களையும், அவனுடைய தூதர்களையும், அவனுடைய சந்திப்பையும் நீங்கள் நம்புவதும், (மரணத்திற்குப் பின்) இறுதியாக (அனைவரும்) உயிருடன் எழுப்பப்படுவதை நம்புவதும் ஆகும்’ என்று பதிலளித்தார்கள்.‘

இறைத்தூதர் அவர்களே!’ ‘இஸ்லாம்’ (அடிபணிதல்) என்றால் என்ன?’ என்று அவர் கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘இஸ்லாம் என்பது அல்லாஹ்வை நீங்கள் வணங்குவதும், அவனுக்கு நீங்கள் எதையும் இணைவைக்காமலிருப்பதும், தொழுகையை நிலைநிறுத்துவதும், கடமையான ‘ஸக்காத்’ தை வழங்கிவருவதும், ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பதும் ஆகும்’ என்றார்கள்.அம்மனிதர், 

‘இறைத்தூதர் அவர்களே! ‘இஹ்ஸான்’ (நன்மை புரிதல் என்றால் என்ன?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘இஹ்ஸான் என்பது அல்லாஹ்வை நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது போன்ற உணர்வுடன் வணங்குவதாகும். நீங்கள் அவனைப் பார்க்கவில்லை என்றாலும், அவன் உங்களைப் பார்க்கிறான் (எனும் உணர்வுடன் அவனை வணங்குவதாகும்.)’ என்று பதிலளித்தார்கள்.அம்மனிதர், 

 ‘இறைத்தூதர் அவர்களே! மறுமை (நாள்) எப்போது வரும்?’ என்று கேட்கஇ நபி(ஸல்) அவர்கள், ‘கேள்வி கேட்கப்படுபவர் (அதாவது நான்,) கேட்பவரைவிட (அதாவது உங்களைவிட) அதிகம் அறிந்தவர் அல்லர். ஆயினும், நான் உங்களுக்க மறுமை நாளின் அடையாளங்கள் சிலவற்றை எடுத்துக் கூறுகிறேன்:ஒரு (அடிமைப்) பெண் தன் எஜமானியைப் பெற்றெடுப்பாளாயின் அது மறுமையின் அடையாளங்களில் ஒன்றாகும்.காலில் செருப்பணியாத, நிர்வாணமானவர்கள் மக்களின் தலைவர்களாக இருந்தால் அதுவும் அதன் அடையாளங்களில் ஒன்றாகும். (மறுமை நாள் எப்போது வரவிருக்கிறது எனும் அறிவானது) அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியாத ஐந்து விஷயங்களில் அடங்கும். 

‘நிச்சயமாக, மறுமை (நாள் எப்போது சம்பவிக்கும் என்பது) பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது. அவனே மழையை இறக்கிவைக்கிறான். இன்னும், அவன் கர்ப்பங்களில் உள்ளவற்றையும் (தீர்க்கமாக) அறிகிறான். தாம் நாளை என்ன சம்பாதிப்போம் என்பதை (அவனைத் தவிர வேறு) யாரும் (உறுதியாக) அறிவதில்லை. எந்த இடத்தில் தாம் இறக்கப்போகிறோம் என்பதையும் எவரும் அறிவதில்லை. அல்லாஹ்தான் (இவற்றையெல்லாம்) நன்கறிந்தவன்; நுணுக்கமானவன்’ (எனும் 31:34 வது வசனத்தை நபியவர்கள் ஓதினார்கள்.) பிறகு அந்த மனிதர் திரும்பிச் சென்றார்.நபி(ஸல்) அவர்கள் ‘அந்த மனிதரைத் திரும்ப என்னிடம் அழைத்து வாருங்கள்!’ என்று கூறினார்கள். மக்கள் அம்மனிதரைத் திரும்ப அழைத்து வரச் சென்றார்கள். எங்கேயும் காணவில்லை. பின்னர், நபி(ஸல்) அவர்கள் ‘இ(ப்போது வந்து போன)வர், (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் தாம். மக்களுக்கு அவர்களின் மார்க்கத்தைக் கற்றுத்தருவதற்காக அவர் வந்திருந்தார்’ என்று கூறினார்கள். அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி), ஆதாரம் : புகாரி

12- கிப்லா.
கிப்லா என்றால்  முன்னோக்குதல், முன்னோக்கும் திசை எனக் கூறப்படும். தொழுகையின் போது  முன்னோக்கும் திசையை கிப்லா என்று சொல்லப்படும்.

 "நீர் எங்கிருந்து புறப்பட்டாலும் உமது முகத்தை மஸ்ஜிதுல் ஹராம் திசையில் திருப்புவீராக! எங்கே நீங்கள் இருந்தாலும் உங்கள் முகங்களை அதன் திசையிலேயே திருப்பிக் கொள்ளுங்கள்! அவர்களில் அநீதி இழைத்தோரைத் தவிர (மற்ற) மக்களுக்கு உங்களுக்கு எதிராக எந்தச் சான்றும் இருக்கக் கூடாது என்பதும், எனது அருட்கொடையை உங்களுக்கு நான் முழுமைப் படுத்துவதும், நீங்கள் நேர் வழி பெறுவதுமே இதற்குக் காரணம். (அல்குர்ஆன் 2:150)

13- பஜ்ர்.
பஜ்ர் என்பது அதிகாலையைக் குறிக்கும் . அதிகாலையில் தொழப்படும் தொழுகையை பஜ்ர்த் தொழுகை எனவும் குர்ஆன் குறிப்பிடுகின்றது.

"சூரியன் சாய்ந்ததிலிருந்து  இரவின் இருள் சூழும் வரை தொழுகையையும், இன்னும் பஜ்ருடைய தொழுகையையும் நிலைநாட்டுவீராக." (அல்குர்ஆன். 17:78)

14- மன்னு ஸல்வா.
மன்னு ஸல்வா என்றால்.மூஸா நபியின் சமூகத்தினர் வேண்டிய போது வானத்திலிருந்து அல்லாஹ் இறக்கிய இருவகை உணவை இது குறிக்கும். 

"இன்னும் உங்கள் மீது மேகத்தை நிழலிடச் செய்தோம், மன்னு ஸல்வா( எனும் உண)வை உங்களுக்கு இறக்கி, நாம் உங்களுக்கு வழங்கிய பரிசுத்தமானவற்றிலிருந்து உண்ணுங்கள் (என்றோம்)  எனினும் அவர்கள் எமக்கு அநியாயம் செய்துவிடவில்லை  மாறாக அவர்கள் தமக்குத் தாமே அநியாயம் செய்து கொண்டனர்." (அல்குர்ஆன்.2:57)

15- ரூஹ் .
ரூஹ் என்றால். உயிர் என்று அர்த்தம்.  அல்குர்ஆனில் பல இடங்களில், ரூஹ் உயிர் ஆத்மா என்றும். ரூஹூல் குத்ஸ் பரிசுத்த ஆத்மா என்றும்.  இடம்பெற்றுள்ளன.

"மர்யமின் மகன் ஈஸாவே! உம்மீதும், உமது தாய் மீதும் உள்ள எனது அருட்கொடைகளை நினைத்துப் பார்ப்பீராக! (ஜிப்ரீல் எனும்) ரூஹூல் குத்ஸைக் கொண்டு உம்மை நான் வலுவூட்டியபோது தொட்டில் பருவத்திலும்,வாலிபப்பருவத்திலும் நீர் மனிதர்களிடம் பேசியதையும், வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும்,இன்ஜீலையும் உமக்கு நாம் காற்றுத்தந்ததையும் (எண்ணிப்பார்ப்பீராக!)  (அல்குர்ஆன். 5:110)


எல்லாம் வல்ல அல்லாஹ் சத்தியத்தைத் தெளிவாக எடுத்துக் கூறும் சத்தியப் போதகர்களாகவும் அவ்வழியில் ஏற்படும் இன்னல்களைச் சகித்துக் கொள்ளும் உண்மைப் போராளிகளாகவும் எம்மையும் உங்களையும் ஆக்கி அருள் புரிவானாக.
 
அஹமட் யஹ்யா,ஹொரோவபதான, அனுராதபுரம்.SRI LANKA.
 

பிரயோசனம் தரும் நபிமொழிகள்.


 
 
 
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ.
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனும் அல்லாஹ்வின் திருநாமம் போற்றி துவங்குகின்றேன்...அல்ஹம்துலில்லாஹ்.

சொல்லிலும்,செயலிலும் இஸ்லாத்தைக் கலப்போம்.
சமூக உறவில் சகோதரத்துவத்தை வளர்ப்போம்.
 
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என் விஷயத்தில் ஒருவருக்கொருவர் நேசித்துக் கொள்பவர்களுக்கும் என் விஷயத்தில் அமர்பவர்களுக்கும் என் விஷயத்தில் போட்டி போட்டுக் கொண்டு செலவுசெய்பவர்களுக்கும் எனது பிரியும் உறுதியாகிவிட்டது என்று அல்லாஹ் கூறுகிறான்.
அறிவிப்பவர்: முஆத் (ரலி)
நூல்: அஹ்மத் (21114)

_____________________________________________________________________

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் மறுமை நாளில் எனக்காக நேசம் வைத்துக் கொண்டவர்கள் எங்கே? என்னுடைய நிழலைத் தவிர வேறு நிழல் இல்லாத இந்நாளில் நான் அவர்களுக்கு எனது நிழலைத் தருகிறேன் என்று கூறுவான்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் (4655)

_____________________________________________________________________

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மக்களே! நான் உங்களிடம் இரண்டு விஷயங்களை விட்டுச் செல்கின்றேன். அதைப் பற்றிப் பிடித்திருக்கும் காலமெல்லாம் ஒருபோதும் வழி தவறமாட்டீர்கள். 1. அல்லாஹ்வின் வேதம் 2. அவனது தூதரின் வழிமுறை ‘ என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: ஹாகிம் 318

_____________________________________________________________________

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“அல்லாஹ்வின் சார்பாக நான் ஒரு கருத்தைக் கூறினால் அதைக்
கடைப்பிடியுங்கள். ஏனெனில் அல்லாஹ்வின் பெயரால் நான் பொய் சொல்ல மாட்டேன்” எனறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர்: தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரலி)
நூல்: முஸ்லிம் 4711


______________________________________________________________________

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு மனிதருக்கு (மறுமையில் ) நன்மை செய்ய இறைவன் நாடினால் இவ்வுலகிலேயே அவருக்குரிய தண்டனையை முன்கூட்டியே அளித்து விடுவான். ஒரு மனிதருக்கு (மறுமையில்) அல்லாஹ் தீமையை நாடினால் அவருடைய பாவங்களை நிலுவையில் வைத்து நியாயத் தீர்ப்பு நாளில் கணக்குத் தீர்ப்பான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக்(ரலி)
நூல்: திர்மிதீ 2319


______________________________________________________________________

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறை நம்பிக்கையுடைய ஆணும் இறை நம்பிக்கையுடைய பெண்ணும் தமது
விஷயத்திலும், தமது பிள்ளைகள் விஷயத்திலும், தமது செல்வங்களிலும் தொடர்ந்து துன்பங்களுக்கு உட்படுத்தப்படுவார்கள். அல்லாஹ்வைச் சந்திக்கும் நாளில் அவர்கள் மீது எந்தக் குற்றமும் மீதமிருக்காது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல்: திர்மிதீ 2323


______________________________________________________________________

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஓர் இறைநம்பிக்கையாளருக்கு ஏற்படும் வலி, துன்பம், நோய், கவலை, அவர் உணரும் சிறு மனவேதனை உள்பட எதுவாயினும் அதற்குப் பதிலாக அவருடைய பாவங்களில் சில மன்னிக்கப்படாமல் இருப்பதில்லை.
அறிவிப்பாளர். அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள்
நூல் : முஸ்லிம் 5030


______________________________________________________________________

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“ஒரு முஸ்லிமுக்கு ஏற்படும் நோயாயினும் , அது அல்லாத வேறு எந்தத் துன்பமாயினும் ( அதற்கு ஈடாக) , மரம் தன் இலைகளை உதிர்த்துவிடுவதைப் போன்று அவருடைய பாவங்களை அல்லாஹ் உதிர்க்காமல் இருப்பதில்லை ” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர். அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள்
நூல் : முஸ்லிம் 5023

______________________________________________________________________

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என் சமுதாயத்தாரின் உள்ளங்களில் ஊசலாடும் தீய எண்ணங்களை , அவர்கள் அதன்படி செயல்படாத வரை , அல்லது அதை (வெளிப்படுத்தி)ப் பேசாத வரை அல்லாஹ் (அவற்றுக்குத் தண்டனை வழங்குவதில்லை) மன்னித்துவிடுகிறான்.
அறிவிப்பாளர். அபூஹுரைரா (ரலி) அவர்கள்
நூல்: புகாரி 6664


______________________________________________________________________

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நபித்தோழர்களில் சிலர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “எங்கள் உள்ளத்தில் சில (தடுமாற்றமான) விஷயங்கள் எழுகின்றன. அவற்றை (வெளிப்படுத்திப்) பேசுவதைக்கூட நாங்கள் மிகப்பெரும் (பாவ)காரியமாகக் கருதுகிறோம்” என்று கூறினர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “உண்மையிலேயே நீங்கள் அத்தகைய உணர்வுகளுக்கு உள்ளாகின்றீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு
நபித்தோழர்கள், “ஆம்” என்று பதிலளித்தார்கள். அதற்கு, “அதுதான் ஒளிவுமறைவற்ற (தெளிவான) இறைநம்பிக்கை” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி).
நூல் : முஸ்லிம் 188

______________________________________________________________________

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என் சமுதாயத்தாரில் (பாவம் செய்த) அனைவரும் (இறைவனால்) மன்னிக்கப்படுவர் ; ( தம் பாவங்களைத்) தாமே பகிரங்கப்படுத்துகின்றவர்களைத் தவிர. ஒரு மனிதன் இரவில் ஒரு (பாவச்) செயல் புரிந்து விட்டுப் பிறகு காலையானதும் அல்லாஹ் அவனது பாவத்தை (பிறருக்குத் தெரியாமல்) மறைத்துவிட்டிருக்க , இன்னாரே! நேற்றிரவு நான் (பாவங்களில்) இன்னின்னதைச் செய்தேன் என்று அவனே கூறுவது பகிரங்கப்படுத்துவதில் அடங்கும். (அவன் செய்த பாவத்தை) இரவில் (பிறருக்குத் தெரியாமல்) இறைவன் மறைத்துவிட்டான். (ஆனால் ,) இறைவன் மறைத்ததைக் காலையில் அந்த மனிதன் தானே வெளிச்சமாக்கி விடுகிறான்.
அறிவிப்பவர். அபூஹுரைரா (ரலி) அவர்கள்
நூல்: புகாரி 6069

______________________________________________________________________

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
” மலையின் மீதிருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொள்கிறவர் நரக நெருப்பில் (தள்ளப்பட்டு மேலிருந்து கீழே) என்றைக்கும் நிரந்தரமாக குதித்துக் கொண்டேயிருப்பர். விஷம் குடித்து தற்கொலை செய்துகொள்கிறவர் தம் விஷத்தைக் கையில் வைத்திருந்தபடி நரக நெருப்பில் என்றென்றும் நிரந்தரமாக குடித்துக் கொண்டேயிருப்பார். ஒரு கூரிய ஆயுதத்தால் தற்கொலை செய்து கொள்கிறவரின் கூராயுதத்தை அவர் தம் கையில் வைத்துக்கொண்டு நரக நெருப்பில் தம் வயிற்றில் தாமே என்றென்றும் நிரந்தரமாக அதனால் குத்திக் கொண்டேயிருப்பார் ” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 5778

______________________________________________________________________

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வை இரட்சகனாகவும், இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாகவும், முஹம்மது நபி (ஸல்) அவர்களை இறைத் தூதராகவும் நான் மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டேன் என்று கூறுபவருக்கு சொர்க்கம் கடமையாகிவிட்டது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் : அபூஸயீத் அல்குத்ரீ -ரலி, நூல் : அபூதாவூத் 1306)

______________________________________________________________________

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதரே! நல்லறங்கள் புரியும் ஒருவரை அவரின் நல்லறங்களுக்காக ஒருவர் நேசிக்கிறார், ஆனால் நேசிப்பவரோ அவரைப் போன்று நல்லறங்கள் புரியவில்லை, இவரைப் பற்றிக் கூறுங்களேன்! என்று நபி (ஸல்) அவர்களிடம் ஒருவர் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் மனிதன் அவன் யாரை நேசிக்கின்றானோ அவருடன் (மறுமையில்) இருப்பான் என்று கூறினார்கள். இதனைக் கேட்ட நபித்தோழர்கள் இதற்கு முன்னர் வேறு எதற்கும் மகிழ்ச்சியடைந்து நான் கண்டிடாத அளவுக்கு மகிழ்ந்தனர்.
(அறிவிப்பவர்: அனஸ் (ரலி) அவர்கள், நூல்: அபூதாவூத் 4462)

______________________________________________________________________

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்கு சகோதரன் ஆவான். அவனுக்கு அநியாயம் செய்யக் கூடாது. காட்டிக் கொடுக்கக் கூடாது. யார் தன் சகோதரனின் தேவையை நிறைவேற்றுகிறாரோ அவரது தேவையை அல்லாஹ் நிறைவேற்றுகிறான். யார் ஒரு முஸ்லிமின் நெருக்கடியை அகற்றுகிறாரோ கியாமத் நாளின் நெருக்கடிகளில் ஒரு நெருக்கடியை அவரை விட்டும் அல்லாஹ் அகற்றுகிறான். யார் ஒரு முஸ்லிமின் குறையை மறைக்கிறாரோ அவரது குறையை அல்லாஹ் மறைக்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்:
இப்னு உமர் (ரலி) அவர்கள், நூல்: புகாரீ 2262, முஸ்லிம்)

______________________________________________________________________

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நல்ல நண்பனுக்கும் தீய நண்பனுக்கும் உதாரணம் கஸ்தூரி வைத்திருப்பவரும் கொல்லனின் உலையுமாகும்! கஸ்தூரி வைத்தி ருப்பவரிடமிருந்து உமக்கு ஏதும் கிடைக்காமல் போகாது! நீர் அதை விலைக்கு வாங்கலாம்; அல்லது அதன் நறுமணத்தையா வது பெற்றுக்கொள்ளலாம்! கொல்லனின் உலை உமது வீட்டையோ உமது ஆடையையோ எரித்து விடும்; அல்லது அவனிடமிருந்து கெட்ட வாடையை நீர் பெற்றுக்கொள்வீர்!
அறிவிப்பவர் : அபூமூஸா (ரலி)
நூல் : புகாரி (2101)


______________________________________________________________________

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
குர்ஆனை ஓதுகின்ற(நல்ல)வரின் நிலையானது எலுமிச்சை போன்றதாகும். அதன் சுவையும் நன்று!வாசனையும் நன்று! (நல்லவராக இருந்து) குர்ஆன் ஓதாமல் இருப்பவர், பேரீச்சம் பழத்தைப்போன்றவராவார். அதன் சுவை நன்று; அதற்கு வாசனை கிடையாது. தீயவனாகவும் இருந்து கொண்டுகுர்ஆனை ஓதி வருகின்றவனின் நிலை துளசிச் செடியின் நிலையை ஒத்து இருக்கின்றது. அதன்வாசனை நன்று, சுவையோ கசப்பு! தீமையும் செய்து கொண்டு குர்ஆனையும் ஓதாமல் இருப்பவனின்நிலை குமட்டிக் காயின் நிலையை ஒத்திருக்கின்றது. அதன் சுவையும் கசப்பு, அதற்கு வாசனையும்கிடையாது.
அறிவிப்பவர்: அபூ மூஸா அஷ்அரீ (ரலி)
நூல்: புகாரி 5020


______________________________________________________________________

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பெண்கள் வளைந்த எலும்பு போன்றவர்கள். அதனை நிமிர்த்த முயன்றால் அதனை உடைத்து விடுவாய். அந்த வளைவு இருக்கும் நிலையிலேயே அவளை விட்டு விட்டால் அவளிடம் இன்பம் பெறுவாய் என்று நபிகள் நாயகம் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 3331, 5184, 5186


______________________________________________________________________

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
தன் அன்பளிப்பைத் திரும்பப் பெறுபவன் வாந்தியெடுத்த பிறகு, அதை மீண்டும் தின்கின்ற நாயைப்போன்றவன் ஆவான்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல் : புகாரி (2589)

______________________________________________________________________

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'உங்களில் ஒருவரது வாசலில் ஆறு ஒன்று (ஓடிக் கொண்டு) இருக்கிறது; அதில் அவர் தினமும் ஐந்து தடவை குளிக்கின்றார்; அவரது மேனியிலுள்ள அழுக்குகளில் எதுவும் எஞ்சியிருக்குமா? எனக் கூறுங்கள்' என்று நபித்தோழர்களிடம் நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். 'அவரது அழுக்குகளில் சிறிதளவும் எஞ்சியிராது' என நபித்தோழர்கள் கூறினர். 'இது ஐவேளைத் தொழுகைகளின் உவமையாகும். இதன் மூலம் அல்லாஹ் (சிறிய) பாவங்களை அகற்றுகிறான்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்கள்: புகாரீ 528, முஸ்லிம் 1071

______________________________________________________________________

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"கஞ்சனுக்கும் தர்மம் செய்பவனுக்கும் உதாரணமாவது, மார்பிலிருந்து கழுத்து வரை இரும்பாலான அங்கிகள் அணிந்த இரு மனிதர்களைப் போன்றதாகும். தர்மம் செய்பவர் தர்மம் செய்யும் போதெல்லாம் அவருடைய அங்கி விரிந்து விரல்களை மறைத்துக் கால்களை மூடி, தரையில் இழுபடும் அளவுக்கு விரிவடையும். கஞ்சன் செலவு செய்யக் கூடாது என்று எண்ணும் போதெல்லாம் அவ்வங்கியின் ஒவ்வொரு வளையமும் அதற்குரிய இடத்தை நெருக்கும் அவன் அதை விரிக்க முயன்றாலும் அது விரியாது'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அஹுரைரா (ரலி),
நூல்: புகாரி 1443, 1444, 5797


______________________________________________________________________

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எனது நிலையும் எனக்கு முன்பிருந்த இறைத்தூதர்கன் நிலையும் ஒரு வீட்டைக் கட்டி அதை அழகாக அலங்கரித்து, ஒரு மூலையில் ஒரு செங்கல் அளவிற்குள்ள இடத்தை மட்டும் விட்டு விட்ட ஒரு மனிதரின் நிலை போன்றதாகும். மக்கள் அதைச் சுற்றிப் பார்த்து விட்டு ஆச்சரியமடைந்து, இந்தச் செங்கல் (இங்கே) வைக்கப்பட்டிருக்கக் கூடாதா? என்று கேட்கலானார்கள். நான் தான் அந்தச் செங்கல். மேலும், நான் தான் இறைத் தூதர்களில் இறுதியானவன்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
நூல்: புகாரி 3535


______________________________________________________________________
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
அல்லாஹ் நினைவு கூறப்பட்டுப் போற்றப்படும் இல்லத்தின் நிலை உயிருள்ளவர்களின் நிலைக்கும், அல்லாஹ் நினைவு கூறப்பட்டுப் போற்றப்படாத இல்லத்தின் நிலை உயிரற்றவனின் நிலைக்கும் ஒத்திருக்கிறது.
அறிவிப்பவர்: அபூ மூஸா (ரலி)
நூல்: முஸ்லிம் 1429


 
எல்லாம் வல்ல அல்லாஹ் சத்தியத்தைத் தெளிவாக எடுத்துக் கூறும் சத்தியப் போதகர்களாகவும் அவ்வழியில் ஏற்படும் இன்னல்களைச் சகித்துக் கொள்ளும் உண்மைப் போராளிகளாகவும் எம்மையும் உங்களையும் ஆக்கி அருள் புரிவானாக.

இறைவா !
சகலமும் அகலட்டும்.
உன் அருள் மட்டும் இருக்கட்டும்.
உலகமும் துலங்கட்டும்.
உன் மறுமையும் விளங்கட்டும்.
மாறான வழி செல்ல எனக்குள் பயம் பிறக்கட்டும்.
நேரான வழிவாழ எனக்கு ஜெயம் கிடைக்கட்டும்.
அடியார்களின் வேண்டல்களை அதிகம் விரும்பும் நீ,
இந்த எளியவனின் வேண்டல்களை, விண்ணப்பங்களைக் கிடப்பில் போடாமல் உடனடி உத்தரவிடுவாயாக.!
 
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அஹமட் யஹ்யா
ஹொரோவபதான.
அனுராதபுரம்.
SRI LANKA.
_____________________________________

கல்வி பற்றி ஆறு தலைப்புகள்.

 
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ.
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனும் அல்லாஹ்வின் திருநாமம் போற்றி துவங்குகின்றேன்...அல்ஹம்துலில்
லாஹ்.

சொல்லிலும்,செயலிலும் இஸ்லாத்தைக் கலப்போம்.
சமூக உறவில் சகோதரத்துவத்தை வளர்ப்போம்.

* இஸ்லாத்தின் பார்வையில் கல்வியின் முக்கியத்துவம்.
* கல்வியில் நமது சமூகத்தின் இன்றைய நிலை.
* ஆக்கப்பூர்வமான கல்வி எது.?
* அதை அடைய நம்முடையே வசதி வாய்ப்புக்கள் உள்ளனவா.?
* வசதி வாய்ப்பு இல்லை என்றால் அதை எவ்வாறு உருவாக்குவது.?
* உருவாக்குவதற்கான சாதக, பாதகங்கள் என்ன.?


1.இஸ்லாத்தின் பார்வையில் கல்வியின் முக்கியத்துவம்.

உலகில் காணப்படுகின்ற எந்த மதமும், சித்தாந்தமும் வழங்கிட முடியாத அளவு அறிவைத் தேடுமாறு வலியுறுத்துவதுடன், விவேகத்தையும் ஞானத்தையும் வரவேற்பதன் மூலம், அறிவைத் தேடுகின்றவர்களுக்கு உயர்ந்த அந்தஸ்தை வழங்கியுள்ளது இஸ்லாம்.
( “இக்ரஃ”) என்னும் ஓதுவீராக!என்ற வார்த்தைகளோடு ஆரம்பமாகி, அதன் நிறைந்த கருத்தின் அடிப்படையில் உலகத்தில் வாழும் மனித சமூகத்தின் பண்பாடுகள்,கலாச்சாரங்கள்,அவ்வப
்போது ஏற்படும் பிரச்சனைக்கான தீர்வுகள்,மனித வாழ்க்கையின் வட்டத்திற்குள் ஹராம்,ஹலால் பேணவேண்டிய வடிவமைப்புக்கள் இது போன்று உலக ஆரம்பம் முதல் முடிவு வரை "ஓதுவீராக!" என்ற வார்த்தையின் மூலமே அமையப்பெற்றது. இது தான் கல்வியின் முக்கியத்துவத்திற்கு வரைவிலக்கணம்.

அல்லாஹ் அல்குர்ஆனில் கூறுகின்றான்.
"அறிந்தோரும் அறியாதோரும் சமமாவார்களா? என்று கேட்பீராக! அறிவுடையோர் தான் நல்லறிவு பெறுவார்கள்".(அல்குர்ஆன்: 39:9)
"குருடனும் பார்வையுடையவனும் சமமாவார்களா? சிந்திக்க மாட்டிர்களா? என்று கேட்பீராக!"( அல்குர்ஆன்: 6:50)

அறிந்தவர்களும்,அறியாதவர்களும் சமமாவார்களா ? என்றும் குருடனும்,பார்வையுள்ளவனும் சமமாவார்களா? என்றும் அல்லாஹ் அல்குர்ஆனில் ரத்தினச் சுருக்கமாக உலகத்தில் வாழும் சமூகங்களுக்கும், எக்காலத்துக்கும் பொருத்தமான நிலையிலும் கூறுகின்றான். இந்த வசனத்தை ஆரம்பமாக அறிந்தால் கல்வியின் முக்கியம் ,அதன் சீர்திருத்தம் போன்ற பன்முனைகளை விளங்கிக்கொள்ளலாம்.

ஆக்குகின்றவன்,அழிக்கின்றவன் அல்லாஹ்.
அறிவைக் கொடுப்பதும்,கொடுக்காமல் இருப்பதும் அல்லாஹ்.
இதற்கிடையில் மனிதனை அல்லாஹ் படைத்து அவனுக்கும் மற்றும் உண்டான படைப்பினங்களுக்கும் வித்தியாசமாக பகுத்தறிவை அல்லாஹ் மனிதனுக்கு வழங்கினான். இந்த பகுத்தறிவின் மூலம் நல்லது,கெட்டது இந்த இரண்டையும் ஒன்றோடு ஒன்று கலப்பிடம் செய்யாமல் விளங்கக்கூடிய ஆற்றலை அல்லாஹ் மனிதனுக்கு வழங்கினான். இந்த விஷயத்தை வைத்து கல்வியின் முக்கியத்துவத்தை கோடிட்டுக் காட்டும் வசனமே மேலே சொல்லப்பட்டது.


அறிந்தவர்கள் எதையும் அறிந்து கொள்வார்கள் அதற்கான முயற்சியை ஆயுதமாகக் கையில் எடுப்பார்கள். அறியாதவர்கள் அறிந்து கொள்ள முயற்சி என்ற வாசகத்தில் , ""கண்டதே காட்சி கொண்டதே கோலம்"" என்று இதைத்தான் அவர்களின் ஆயுதமாக கையில் அல்ல அவர்களின் மனதில் பதித்துக்கொள்வார்கள்.
இதையும் அல்லாஹ் அல்குர்ஆனில் வர்ணித்துக் காட்டுகின்றான்.

"அவன் தான் நாடுவோருக்கு ஞானத்தை வழங்குகின்றான். எவர் ஞானம்கொடுக்கப்படுகிறாரோ அவர் நிச்சயமாக அதிக நன்மைகள்
வழங்கப்பட்டவராவார். சிந்தனையுடேயோர்தான் படிப்பினை பெறுவார்கள்." (அல்குர்ஆன்.2:269)

இந்த வசனத்தில் சிந்தனை என்ற வாசகம் இடம்பெற்றிருப்பதால் மனிதனுக்கு முயற்சி அவசியம் என்பதை சுருக்கமாக விளங்கலாம்.
இந்த முயற்சி இருந்தால் மட்டும் படிப்பினை பெறலாம், ஒரு தலைப்பின்,அல்லது தான் செய்யும் ஒரு முக்கிய சேவையின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ளலாம். இதிலிருந்து கல்வியின் முக்கியத்துவம் எந்தளவுக்கு மதிக்கப்பட வேண்டும் என்பதை மேலே சொல்லப்பட்ட வசனம் உணர்த்துகின்றது.


நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எவருக்கு அல்லாஹ் நன்மையை நாடுகிறானோ அவரை மார்க்கத்தில் விளக்கம் பெற்றவராக ஆக்கி விடுகிறான். அல்லாஹ் கொடுப்பவனாக இருக்கிறான். நான் அதை வினியோகிப்பவனாக இருக்கிறேன். இந்தச் சமுதாயத்தில் ஒரு சாரார் அல்லாஹ்வுடைய கட்டளையைப் பேணுவதில் நிலைத்தே இருப்பார்கள். மறுமைநாள் வரும்வரை அவர்களுக்கு மாறு செய்பவர்களால் எந்த தீங்கும் செய்துவிட முடியாது. (அறிவிப்பவர்..முஆவியா(ரலி) புகாரி 71)

கல்வி என்பது மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத ஒன்றாகும். மனிதனை மற்ற உயிரினங்களிலிருந்துப் பிரித்துக் காட்டும். பல அம்சங்களில் இந்த கல்வியும் முக்கியமான ஒன்று. அவன் சிந்திக்கவும் செயல்படவும் தேவையானது அறிவுதான். அந்த அறிவைப் பெற்றிட அல்லாஹ்வின் அருளால் அவன் நாட வேண்டியது கல்வியாகும்.
இஸ்லாம் சொல்லும் நேரான பாதையை கற்றுக்கொள்ளும் போது மனிதன் அதுதரும் அறிவைக் கொண்டு தனக்கென ஒருதனி அந்தஸ்தைப் பெறுகிறான்.

பயனுள்ள கல்வியை தனக்கும் பிறருக்கும் பயன் தரும் வகையில் அம்மனிதன் செயல்படுத்தும் போது அவனது வாழ்க்கைத்தரம் இறையருளால் உயர்ந்த கட்டமைப்பை நோக்கி நகர்கிறது...


அல்லாஹ் அல்குர்ஆனில் கூறுகின்றான்.
"நபிமார்கள் அனுப்பப்பட்டதும் கல்வி கற்பிப்பதற்கே! உங்களுக்கு உங்களிலிருந்தே தூதரை அனுப்பியது போல் (கிப்லாவை மாற்றுவதன் மூலமும் அருள் புரிந்தான்),அவர் உங்களுக்கு நமது வசனங்களைக் கூறுவார். உங்களைத் தூய்மைப்படுத்துவார். உங்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுத் தருவார். நீங்கள் அறியாமல் இருந்த வற்றையும் உங்களுக்கு அவர் கற்றுத் தருவார்". (அல்குர்ஆன்: 2:151)
நபி(ஸல்)அவர்கள் எம்மைப்போன்ற மனிதர்தான் அவர்களை அல்லாஹ் மனிதர்களில் புனிதர்களாகத் தேர்ந்தெடுத்தான். அவர்கள் எழுதப் படிக்கத் தெரியாத உம்மி நபியாக இருந்தும் அவர்களை அல்லாஹ் கல்வியைக் கற்பிக்கவே அனுப்பிவைத்தான்.
கல்வி என்பது விழிப்புணர்வை எற்படுத்துவதாக இருத்தல் வேண்டும். தொலை தூர நோக்கோடு மனிதர்களை நல்வழிப்படுத்துவதாக
இருத்தல் வேண்டும். சரியான நிலையாகப் பயன்தரும் இலக்கைச் சுட்டிக் காட்டுவதாக இருத்தல் வேண்டும். எந்த நிலை வந்தபோதும் அந்தப் பயன்மிக்க இலக்கை அடைவதை உயிர்மூச்சாகக் கொள்ளும் பக்குவத்தை மனிதர்களுக்கு தரும் விதமாக கல்வி இருக்க வேண்டும்.

தீமைகளை மட்டும் சொல்லி விட்டு தீர்வைச் சொல்லா விட்டால் பயனேதும் இல்லை. இவற்றிலிருந்து மீள்வதற்கான தீர்வுதான் என்ன? சென்று விட்ட சமுதாயத்தைப் பற்றி சிந்தித்துப் பயன் இல்லை. இப்போது இருக்கின்ற சமுதாயத்தை நெறிமுறைப்படுத்த நாட்கள் பல ஆகலாம். அல்லது நாம் நினைப்பது போல் நடக்காமலும் போகலாம். ஆனால் இனி வரும் இளைய சமுதாயத்தை – வருங்கால சமுதாயத்தை வளர்த்தெடுக்கின்ற பணிகளை நாம் மேற்கொண்டால் நிச்சயமாக அதுவே நமக்கு மிகவும் நன்மை பயப்பதாக அமையும்.

(*) முஆத் பின் ஜபல் (ரழி)அவர்கள் கூறினார்கள்.

* அறிவைக் கற்றுக் கொள்ளுங்கள்;;,
* அதனை அல்லாவுக்காகக் கற்பது இறையச்சமாகும்.
* அதனைத் தேடுவது வணக்கமாகும் ஆகும்.
* அதனை மீட்டுவது தஸ்பீஹ் ஆகும்.
* அதனைப் பற்றி ஆராய்வது ஜிஹாத் ஆகும்.
* அறியாதவருக்கு அதனைக் கற்பிப்பது ஸதக்காவாகும்.
* அதனை அதற்குரியவனுக்கு வழங்குவது நற்கருமமாகும்.


(*)அறிவு,

* தனிமையின் தோழன்
* மார்க்கத்தின் வழிகாட்டி
* இன்ப துன்பத்தில் உதவியாளன்
* நண்பருக்கு மத்தியில் தலைவன்.
* நெருக்கமானவர்களுக்கு மத்தியில் நெருங்கியவன்
* சுவனப் பாதையின் ஒளி விளக்கு


அறிவைக் கொண்டு அல்லாஹ் சிலரை உயர்த்தி, அவர்களை நன்மையான விடயங்களுக்கு முன்னோடியாகவும் ஆக்கிவிடுகிறான்.
அவர்களின் அடிச்சுவட்டில் பலர் செல்வர்.
ஆவர்களின் தோழமையை மலக்குகளும் விரும்புவர்.
மலக்குகள் அவர்களைத் தமது இறக்கைகளால் தடவி விடுவர்.
கடலில் உள்ள மீன்கள், ஏனைய ஜீவராசிகள், கரையில் உள்ள மிருகங்கள், கால் நடைகள், வானம், நட்சத்திரங்கள் உட்பட பசுமையான, காய்ந்த அனைத்தும் அவர்களுக்காகப் பிரார்த்திக்கின்றன…
ஸூப்ஹானல்லாஹ் கல்வியின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ள அல்லாஹ் நமக்கு நல்லருள் புரியவேண்டும்.


2. கல்வியில் நமது சமூகத்தின் இன்றைய நிலை.

“நம்பிக்கை கொண்டோரே! சபைகளில் (பிறருக்கு) இடமளியுங்கள்!” என்று உங்களிடம் கூறப்பட்டால் இடமளியுங்கள்! அல்லாஹ் உங்களுக்கு இடமளிப்பான். “எழுந்து விடுங்கள்!” எனக் கூறப்பட்டால் எழுந்து விடுங்கள்!உங்களில் நம்பிக்கை கொண்டோருக்கும் கல்வி வழங்கப்பட்டோருக்கும் அல்லாஹ் பல தகுதிகளை உயர்த்துவான். நீஙகள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.(அல்குர்ஆன் 58:11)

இந்த வசனத்தை நன்றாக உணரும் போது அல்லாஹ் ஒன்றைச் சொன்னால் அதற்கு எதிர்ச் சொல்லையும் பயன்படுத்துகின்றான். செய்ய வேண்டும், செய்ய வேண்டாம். இப்படி இரு வித வார்த்தைகளையும் பயன் படுத்துகின்றான். இப்படியும் இருக்கின்றது அப்படியும் இருக்கின்றது. கல்வியின் நிலையை நோக்கும் போதும் அல்லாஹ் புற்களை பசுமையாகவும் ஆக்கின்றான், அவைகளை காய்ந்ததாகவும் ஆக்கின்றான். இது போன்று அல்லாஹ் மனிதனுக்கு ஞானத்தையும் கொடுக்கின்றான், கொடுக்காமலும் இருக்கின்றான் இது அல்லாஹ் அவனது படைப்புகளுக்கு வித்தியாசம் இல்லாமல் கொடுத்துக்கொண்டிருக்கும் நியதியே!

இன்றைய சிறார்கள் நாளைய தலைவர்கள். என்று அந்தந்த மொழி பேசும் மக்கள் சொல்லுவதையும் அடிக்கடி கேட்கின்றோம். அதே வரிசையில் இன்றைய கல்வியின் நிலையைக் கேட்டால் எவற்றுக்கு இஸ்லாம் முக்கியத்துவம் கொடுக்கச் சொல்கின்றதோ,நபியவர்கள் எதைப் போதித்தார்களோ அவைகளுக்கு நிலை என்ற நிலையான வரைவிளக்கணத்தை பெற்றோர்கள் தன் பிள்ளைகளுக்கு வழங்கிட முடியாத நிலைக்கு இன்றைய நவீனயுக எத்தனையோ கண்டுபிடிப்புக்கள் தடைக் கல்லாக இருப்பதை பார்க்கின்றோம்.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இரண்டு விஷயங்களைத் தவிர வேறு எதிலும் பேராசை கொள்ளக் கூடாது. ஒரு மனிதருக்கு அல்லாஹ் வழங்கிய செல்வத்தை அவர் நல்ல வழியில் செலவு செய்தல். இன்னொரு மனிதருக்கு அல்லாஹ் அறிவு ஞானத்தை வழங்கி, அதற்கேற்ப அவர் தீர்ப்பு வழங்குபவராகவும் கற்றுக் கொடுப்பவராகவும் இருப்பது (ஆகியவையே அந்த இரண்டு விஷயங்கள்)”.
அறிவிப்பவர்:; அப்துல்லாஹ் பின் மஸ்வூது(ரலி),
ஆதாரம்: புஹாரி 73


மேலே சொல்லப்பட்ட நபியவர்களின் போதனைக்கு அமைய இன்றைய கல்வி என்பதைக் கேள்விக் குறியாக ???????????????? எடுத்துக்கொண்டால். இதுதான் இன்றைய கல்வியின் நிலை என்பதை உணர முடியும் இந்த உணர்வை தூய்மையான முறையில் சிந்திக்கும் போது நிச்சயம் மேலே சொல்லப்பட்ட நபிமொழியில் பேராசை, பணம், அறிவு இந்த மூன்றையும் மூன்று பகுதிகலாக பிரித்து அதே மூன்றை மூன்று இடத்தில் வைத்து ஒரே பார்வையில் உற்று நோக்கினால் இதில் எவற்றுக்கு முக்கியம் கொடுக்க வேண்டும், கொடுக்கப்படுகின்றது, அப்படிக்கொடுப்பதால் என்ன பலன் கிடைக்கின்றது என்பதை நன்றாக உணர முடியும்.

3. ஆக்கப்பூர்வமான கல்வி எது?

இஸ்லாம் எல்லா விடயங்களிலும் படிமுறை அமைப்பைப் பேணுகின்றது. இஸ்லாமிய சட்டங்களும் படிப்படியாகவே வழங்கப்பட்டன. கல்விப் போதனையின் போதும் இம்முறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என இஸ்லாம் போதிக்கின்றது. முஆத் (றழி) அவர்களை நபியவர்கள் யெமன் பிரதேசத்திற்கு அனுப்ப முற்பட்ட வேளையில் எவ்வாறு படிப்படியாக, ஒன்றன் பின் ஒன்றாக மார்க்கக் கடமைகளை அங்கு வாழும் மக்களுக்கு விளக்க வேண்டுமென்பதைத் தெளிவுபடுத்தினார்கள்.

கற்பித்தலில் ஈடுபடும் ஆசிரியர் அளவு, அமைப்பு ஆகிய இரண்டிலும் இப்படிமுறையைப் பேண வேண்டும் அதாவது, மாணவனுக்கு அவன் இருக்கும் தரத்தில் எந்தளவு அறிவைக் கொடுக்க வேண்டுமோ அந்தளவையே வழங்க வேண்டும். ஒரே தடவையில் அதிகமான விடயங்களைப் புகுத்த முற்படும் போது, அவனால் கிரகிக்க முடியுமான சிறிதளவையும் கூட, அவன் இழந்து விடும் நிலையே உருவாகும்.


நபி (ஸல்) அவர்களிடம் பலர் வந்து தமக்கு உபதேசிக்குமாறு வேண்டிய வேளைகளில், அவர்கள் வித்தியாசமான உபதேசங்களைச் செய்தார்கள்.
ஒருவருக்கு 'நீர் அல்லாஹ்வை வணங்க வேண்டும். அவனுக்கு 'ஷிர்க்' வைக்கக் கூடாது. தொழுகையை நிலைநாட்டி, ஸக்காத்தையும் கொடுக்க வேண்டும். இனபந்துக்களைச் சேர்ந்து நடக்க வேண்டும்' என்றார்கள்.
மற்றொருவருக்கு, 'எங்கிருந்த போதும் அல்லாஹ்வைப் பயந்து கொள்வீராக. ஒரு தீமையைச் செய்துவிட்டால், அதனைத் தொடரந்து ஒரு நன்மையைச் செய்து விடுவீராக. அந்த நன்மையானது அத்தீமையை அழித்து விடும். மனிதர்களுடன் பண்பாகப் பழகுவீராக'
என்றார்கள்.
மேலும் ஒருவருக்கு, 'அல்லாஹ்வை ஈமான் கொண்டேன் என்று கூறிப் பின்னர் அதில் நிலைத்திருப்பீராக' என்று உபதேசித்தார்கள்;.
இன்னொருவருக்கு நபியவர்கள், 'கோபப்படாதீர்' என உபதேசித்தார்கள்.


தன்னை மறந்துவிட்டுப் பிற மனிதர்களுக்குப் போதிக்கும் மனிதன், பிறருக்கு ஒளியைக் கொடுத்து, தன்னை எரித்துக் கொள்ளும் திரியைப் போன்றவனாவான்.'
முஃமின் தேனீயைப் போன்றவனாவான். அது நல்லதைச் சாப்பிடும், நல்லதையே வெளியேற்றும். அது ஒரு கொடியில் அமர்ந்தாலும் அதனை முறித்து விடாது.
இவைகளுக்கு ஒப்பாக எது சிறந்ததோ அவைகள் தான் உன்னதமானது ("100 மாம்பழம் ஒரு பையில் இருந்து அதில் ஒரு மாம்பழம் சீர்கெட்டால் மீதி 99 மாம்பழத்துக்கும் ஆபத்து") என்பதைப் போன்று சீரான கல்வி மறுமைக்கு பயன்தரும் கல்வியாக இருக்க வேண்டும்.

கல்வி, உலகத்தை மட்டுமின்றி இதர அண்ட சராசரங்களையும் புணரமைப்பதற்குரிய அடித்தளமாகும். பரந்த உலகில் எந்த ஒரு அங்குலத்தில் எந்த ஒரு மாற்றம் நடைபெற வேண்டுமானாலும் கல்விதான் முதல் விதி. கல்வியின் ஆரம்பத்தை நாம் அறிந்தாலும் அதன் முடிவு எங்கே என்று யாருக்கும் தெரியாது. இத்தோடு முடித்துக்கொள்ளலாம் என்பதற்குரிய முற்றுப்புள்ளி இங்கே இல்லை. சிறந்த, மிகச் சிறந்த மனிதர்களை உருவாக்குவது கல்விதான். ஆனால் எந்த மனிதராலும் கல்வியை உருவாக்க முடியாது. புதிய கல்வித் திட்டம் என்பதெல்லாம் ஏற்கனவே கற்றதின் மறு வடிவம் தானே தவிர கருவரையில் புதிதாக உற்பத்தியாவதல்ல.

"கற்றுக் கொள்ளும் ஆற்றல்தான், மனிதனை விலங்குகளிலிருந்தும், தாவரங்களிலிருந்தும் பிரித்துக் காட்டும் முக்கிய குணம். மனித நாகரீகத்தின் சாராம்சத்தைக் காட்டுவதும் இந்த ஆற்றல்தான். ஏதேனும் ஒரு காரணத்தை முன்னிட்டு, இந்த ஆற்றலை மனிதன் இழக்க நேர்ந்தால், பிற ஜீவராசிகள் அனைத்தும் எண்ணற்ற திறன்களில் தன்னை விஞ்சி நிற்பது அவனுக்குத் தெரிய வரும்"
யாருமே சுயமாக கற்பது இல்லை. கற்றுக் கொடுக்கப்படுகிறது. இறைவன் நபிகளாருக்கு "ஓதுவீராக..!" என்று ஜிப்ரீல் (அலை) மூலம் கற்றுக் கொடுக்கிறான். கற்பவர்- மாணவர், கற்றுக்கொடுப்பவர்- ஆசிரியர்.

“மேலும், தங்கள் தீனை அல்லாஹ்வுக்கு மட்டுமே உரித்தாக்கியவர்களாகவும், முற்றிலும் ஒருமனப்பட்டவர்களாய் அல்லாஹ்வுக்கு அடிபணிய வேண்டும், என்பதையும் தவிர வேறு எந்த கட்டளையும் அவர்களுக்கு இடப்படவில்லை.” (அல்குர்ஆன்.98:5)

இந்த நிலையில் தீன் என்பது இறைவனைத் தலைவனாகவும், எஜமானனாகவும் அதிகாரியாகவும் ஒப்புக் கொள்வது.இறைவனுக்கு அடிபணிந்து பணிபுரிவது அவனை பின்பற்றுவது இறைவனின் விசாரணைக்கு அஞ்சுவது, அவனுடைய தண்டனைக்குப் பயப்படுவது, அவனையே நற்கூலிக்கு ஆசைப்படுவது என்றாகிறது.

இந்த வகையில் ஆக்கப்பூர்வமான கல்வி நவீனயுகம் ஓடிக்கொண்டிருக்கும் இதே வேளையில் பேனாக்களுக்கு மதிப்பற்ற நிலையில் கருவிகள் காணப்படுவதையும்,அதந் மூலம் பிரயோசனம் அடைவதையும், இதனால் ஆக்கப்பூர்வமான முறையில் கல்வியைக் கற்றுக்கொள்ளவும் முடிகின்றது.எதுவாக இருந்தாலும் இஸ்லாத்தைப் பொறுத்த வரையில் அது இன்மையிலிருந்து மறுமைக்கு பயன் தருகின்ற கல்வியாக இருக்குமானால் இந்த உலகத்தில் அதுதான் ஆக்கப்பூர்வமான கல்வி என்று சொன்னால் அதில் சந்தேகம் இல்லை.

4. அதை அடைய நம்மிடையே வசதி வாய்ப்புக்கள் உள்ளனவா?

"விடா முயற்சி வெற்றிக்கு வழி"  என்தைப் போன்று வசதி வாய்ப்புக்கள் உள்ளனவா என்று கேட்டால் உண்டு என்று பதில் சொல்வதில் தயக்கமே இல்லை காரணம் அல்லாஹ் மனிதனுக்கு நலவை நாடுகின்றான் கஸ்டத்தை நாடவில்லை.

"அல்லாஹ்வின் திருமுகத்தை நாடியே அல்லாது (வீண் பெருமைக்காகச்) செலவு செய்யாதீர்கள். நல்லவற்றிலிருந்து நீங்கள் எதைச் செலவு செய்தாலும், அதற்குரிய நற்பலன் உங்களுக்கு பரிபூரணமாத் திருப்பிக் கொடுக்கப்படும்; நீங்கள் அநியாயம் செய்யப்பட மாட்டீர்கள்." (அல்குர்ஆன்.2:272)
"(நபியே!) தங்களைத் தாங்களே பரிசுத்தமானவர்கள் என்(று கூறிக் கொள்)பவர்களை நீர் பார்க்கவில்லையா? (அவர்கள் கூறுவது போல்) அல்ல. அல்லாஹ் தான் நாடியவர்களைப் பரிசுத்தம் ஆக்குவான். (இவ்விஷயத்தில்) எவரும் ஒரு அணுவளவும் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்." (அல்குர்ஆன்.4:49)
"நாம் எந்த ஆத்மாவையும், அதன் சக்திக்கு ஏற்றவாறு அல்லாமல் (அதிகம் செய்யுமாறு) நிர்பந்திக்க மாட்டோம்; மேலும் உண்மையை பேசும் ஒரு (பதிவுப்)புத்தகம் நம்மிடம் இருக்கிறது. இன்னும் அவர்களுக்கு (ஒரு சிறிதும்) அநியாயம் செய்யப்பட மாட்டாது." (அல்குர்ஆன்.23:62)
"ஒவ்வொருவருக்கும் அவரவர் செய்த செய்கைகளுக்குத் தகுந்த பதவிகள் (மறுமையில்) உண்டு. ஆகவே அவர்கள் தங்கள் செயலுக்குரிய கூலியைப் பரிபூரணமாகப் பெறுவதற்காக. ஆகவே அவர்கள் (இதில்) அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்." (அல்குர்ஆன்.46:19)
"எவர் முஃமினாக இருந்து, ஸாலிஹான-நற்செயல்களைச் செய்கிறாரோ அவர் தமக்கு அநியாயம் செய்யப்படுமென்றோ, (தமக்குரிய) நற்கூலி குறைந்து விடுமென்றோ பயப்பட மாட்டார்."(அல்குர்ஆன்.20:112)
"எவர் ஒருவர் (ஒரு) நன்மையைச் செய்கிறாரோ அவருக்கு அதுபோல் பத்து மடங்கு நன்மை உண்டு; எவர் ஒருவர் (ஒரு) தீமையைச் செய்கிறாரோ அதைப் போன்ற அளவுடைய கூலியே கொடுக்கப்படுவார். " (அல்குர்ஆன்.6:160)


மேலே கூறப்பட்ட அல்குர்ஆனின் போதனைகள் அல்லாஹ் மனிதனுக்கு செல்வத்தைக் கொடுத்தால் அதை வீணான முறையில் சிலவு செய்யக் கூடாது.
எந்த ஒன்றை நன்மையாகச் செய்தாலும் அதற்காக மனிதனுக்கு அல்லாஹ் அநியாயம் செய்யமாட்டான்.அவர்களின் கூலியை முறையாகக் கொடுப்பான்.
உள்ளச்சமுள்ள மனிதனுக்கு நம்பிக்கை தான் ஆயுதம் அவன் மனம் தூய்மையாக இருக்கும் எதைச் சாதிக்க வேண்டுமோ அதை நன்மைக்காகச் சாதிப்பான்.
எனவே அல்லாஹ் மனிதனுக்கு அழித்திருக்கும் செல்வத்தை முறையாக பயன்படுத்தும் போது அல்லாஹ் அந்த மனிதனுக்கு மனமான வாழ்க்கையைக் கொடுக்கின்றான் கற்கும் கல்விக்கு இலகுவை நாடுவான். அவைகளைக் கற்றுக்கொள்ள வசதிகளை ஏற்படுத்துவான். "ஒன்றே செய்! அதையும் நன்றே செய்!" என்பதை குறிக்கோலாகக் கொண்டு ஆக்கப்பூர்வமான எதுவல்லாம் பிரயோசனம் அழிக்குமோ அவைகளுக்கு முன்னுரிமை காட்டும் தன்மையை முன்வைக்கும் போது அடைய வேண்டிய வழிகளை அல்லாஹ் இலகு படுத்துவான்.


5. வசதி வாய்ப்பு இல்லையெனில் எவ்வாறு அதை உருவாக்குவது?

அல்குர்ஆனை மறுத்து அதற்கு மாறு செய்பவர்களுக்கும், அவ்வேதத்தை நம்பி அதன்படி செயல்படுபவர்களுக்கும், சிந்தனை என்ற கருத்துப்படிவத்தின் கீழ் இறைவன் மனிதனை இருவேறு தன்மைகளைக் கொண்டு வேறுபடுத்திக் காட்டுகின்றான்...

இவ்விரு பிரிவினர்களுக்கு உதாரணம் (ஒரு பிரிவினர்) குருடர், செவிடர் போலவும் (இனியொரு பிரிவினர் நல்ல) பார்வையுள்ளவர், (நல்ல) கேட்கும் சக்தியுடையவர் போலவும் இருக்கின்றனர், இவ்விரு பிரிவினரும் ஒப்புவமையில் சமமாவாரா? நீங்கள் சிந்திக்க வேண்டாமா? (அல்குர்ஆன்.11:24)

சிந்திக்கும் திறன் கொண்டவர்களை அல்லாஹ் பார்வைத்திறன் கொண்டவர்கள் என்றும் நல்ல செவிப்புலனுடையவர்கள் என்றும் கூறுகின்றான். சிந்திக்காத மனிதனை அல்லாஹ் பார்வையிருந்தும் அவன் குருடனைப்போல மற்றும் செவிகள் இருந்தும் அவன் செவிடனைப்போல என்று சிந்திக்காதவர்களை அல்லாஹ் தாழ்மைப்படுத்திக் கூறுகின்றான். மனிதன் படைப்பால் ஒன்றுபட்டாலும் அவனுடைய செயல்களால் வேறுபடுகின்றான்.

ஒரு தந்தை தனது பிள்ளைகளுக்கு சிறந்த வழிகாட்டியாக இருந்து வளர்த்தால்தான் பிள்ளைகள் அறிவுள்ள, ஆற்றல் உள்ள, ஒழுக்கமுள்ள மார்க்க அறிவுள்ளவர்களாக ஆவார்கள். அந்த பிள்ளைகள் தான் குடும்பத்தையும் சமூகத்தையும் முன்னேற்றக் கூடியவர்களாக ஆவார்கள். இவ்வாறு குடும்பத்தையும்,சமூகத்தையும் உருவாக்கும் நிலை ஒன்று அவசியம் என்றால் அதற்கு வசதி, வாய்ப்பு மற்றும் ஒன்றாகத் தேவை. இந்த வசிதி வாய்ப்புக்கள் இல்லாத போது இந்தக் கல்வியை எவ்வாறு உருவாக்குவது என்றொரு பிரச்சை என்ற சொல் பாவிப்பது மட்டுமல்லாது அது கேள்விக் குறியாகவே கணிக்கப்படுகின்றது. இந்நிலையில் மேலே அல்லாஹ் அல்குர்ஆனில் கூறியிருப்பதை இந்த இடத்தில் கோர்வை செய்யும் போது அல்லாஹ் இரு பிரிவினர்களை கூறுகின்றான். குருடர்களும்,பார்வையுள்ளவர்களும் சமனாக மாட்டார்கள் இது போன்று சமூகத்திலும் இரு பிரிவினர்களாக தான் இருக்கின்றார்கள் 1- இயற்கையில் மனிதன். அந்த மனிதன் அவர்களுக்குள்ளால் போதிய அறிவுள்ளவர்கள், 2- பாமர மக்கள் என்று இரு பிரிவினர்களாக இருப்பது எங்கும் மறுக்கவோ,மறக்கவோ முடியாத உண்மை. இச்சந்தர்ப்பத்தில் பாமர மக்களை வழி நடத்துவதற்கும் அவர்களின் கஷ்டங்களை சுயமாக விளங்குவதற்கும் சாதாரண மனிதனுக்கு உரிமை உள்ளது. இதன் அடிப்படையில் இந்தக் கல்வியை மனிதன் என்று பெயர் பொறிக்கப்பட்டவன் ஒரு நல்லெண்ணம் கொண்ட சமூகத்தைக் கட்டியெழுப்ப முடியும். இவ்வாறு கட்டியெழுப்பப்பட்ட சமூகம் வசதி வாய்ப்பு இல்லாத சக சமூகத்துக்கு இலகுவான முறையில் உதவிகள் ,உத்தசைகள் செய்யும் போது மார்க்கத்தின் கல்வியை வழிநடத்த முடியும்.

இவை அணைத்தையும் சாதிக்க மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் முறையான வழிகாட்டுதல் இருந்தால் போதும்.
இந்த பணியை செய்யக் கூடியவர்கள் அல்லாஹ்வுக்காக மட்டும் பணியாற்றக்கூடிய ஷிர்க் வைக்காதவர்களா இருந்தால் மட்டுமே அல்லாஹ்வின் உதவியோடு எளிதில் சாதிக்கலாம்.
நாங்கள் செய்ய வேண்டியது மேலே சொன்ன காரியங்களை வழி நடத்துவதற்கு பணம் தேவையில்லை. நல்லெண்ணம் கொண்டு கட்டியெழுப்பப்படும் சமூகத்தின் பாரிய முயச்சியே இந்த கல்வியை உருவாக்குவதற்கு காரணமாக அமையும்.
ஒவ்வொரு முஃமினுக்கும் புனிதமான குர்ஆனையும், நபி (ஸல்) அவர்களின் போதனையையும் படித்து மார்க்க அறிவை பெறுவது கடமையாக்கப்பட்டுள்ளது.


6- உருவாக்குவதற்கென சாதக பாதகங்கள் என்ன?

நீங்கள் ( அருமை நபியும் சஹாபாக்களும் ) எவ்வாறு ஈமானை பெற்றுக் கொண்டீர்களோ , சுமந்தீர்களோ அவ்வாறே ஏனையோர் பெற்று சுமந்துக் கொண்டால் நேர்வழியை அடைவீர்கள். இல்லையென்றால் பிளவில் தான் இருப்பீர்கள். (அல்குர்ஆன்.2:137)

எனவே, சரியான ஈமானை , சரியான கொள்கையை அந்த அருமை சஹாபாக்கள் சுமந்தது போன்று சுமக்க , அதனை அவர்களிடம் இருந்து தான் பெற வேண்டும். எந்தவொரு அல்குர்ஆன் வசனமாகட்டும், ஹதீஸாகட்டும் அதற்குரிய விளக்கத்தை , அந்த அருமை சஹாபாக்களிடம் இருந்து தான் பெற வேண்டும்.
இல்லை என்றால் , மனித புத்திக்கு படவில்லை என்று புறக்கணிப்பான், அல்லது மாற்று கருத்து கொடுப்பான்.
அருமை சஹாபாக்களிடம் இருந்த கல்வியை மூன்று வகையாக
வர்ணிக்கலாம்.

1 . பரிபூரணமான விளக்கம்
2 . சஹிஹான கல்வி
3 . சாலிஹான அமல்கள் .

அதாவது , பரிபூரணமான விளக்கம் என்றால்?, நபி(ஸல்) அவர்களிடம் நேரடியாக பெற்ற விளக்கம். சஹிஹான கல்வி என்றால்?, எந்த விதமான கலப்படமும் இல்லாத , இட்டுகட்டப்பட்ட , பொய்யான , களங்கமான எந்தவிதமான மாசும் இல்லாத தூய்மையாக கல்வி. சாலிஹான அமல் என்றால்?, அல்லாஹ்வை நான் பார்க்காவிட்டாலும் அல்லாஹ் எந்னைப் பார்க்கின்றான் என்ற ஓர்மையோடு அமல் செய்வது இந்த எண்ணம் நல்லமல்களை நிச்சயம் செய்யத் தூண்டும்.
"ஆகவே, எவர்கள் ஈமான் கொண்டு நல்ல அமல்கள் செய்கிறார்களோ அவர்களுடைய தீங்குகளை அவர்களை விட்டும் நிச்சயமாக நீக்கி விடுவோம்; இன்னும், அவர்கள் செய்த நன்மைகளுக்கு அவற்றைவிட மிக்க அழகான கூலியை, நிச்சயமாக நாம் அவர்களுக்கு கொடுப்போம்." (அல்குர்ஆன்: 29:07)

மேலே சொல்லப்பட்ட வாசகங்கள் கல்வியை உருவாக்குவதற்கான சாதக பாதகங்களுக்குள் போவதற்கு முன் கடைப்பிடிக்க வேண்டிய சுருக்கமான வழி முறைகள் இதை சஹாபாக்கள் எவ்வாறு மேற்கொண்டார்கள், அதை அடைந்து கொள்ள எதைப் பயன் படுத்தினார்கள் என்பதை விளக்கமாக விளங்கினால் அதற்கு நுழைவதற்காக வாசல் திறபடும் என்பது இஸ்லாம் போதித்த போதனை.
இந்தக் கல்வியை உருவாக்குவதற்கு மனிதனுக்குள் இருக்க வேண்டிய அவசியமான சில வற்றை இவ்விடத்தில் சொல்ல வேண்டும்.

மனிதனுக்கு நற்பண்புகள் இருக்க வேண்டும்.
மனிதனுக்கு இஸ்லாமிய ஒழுக்கம் இருக்க வேண்டும்.
மனிதனுக்கு கஷ்டம்,நஸ்டம் வந்தாலும் பொறுமை வேண்டும்.
மனிதனுக்கு முடியும் என்ற தன்னம்பிக்கை வேண்டும்.
மனிதனுக்கு நோக்கம் ஒன்றாக இருக்க வேண்டும்.
மனிதனுக்கு மனிதன் உதவி ஒத்தாசையாக இருக்க வேண்டும்.

இப்படி வரிசைப் படிவங்களாக மனித சமூகம் இன்னும் ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்பும் போது அவனுக்கண்டான சில முக்கிய விழுமியங்களை கையாழும் போது அவைகளே எதை உருவாக்க வேண்டுமானாலும் அது சாதகமாக அமைகின்றது.

எல்லாம் வல்ல அல்லாஹ் சத்தியத்தைத் தெளிவாக எடுத்துக் கூறும் சத்தியப் போதகர்களாகவும் அவ்வழியில் ஏற்படும் இன்னல்களைச் சகித்துக் கொள்ளும் உண்மைப் போராளிகளாகவும் எம்மையும் உங்களையும் ஆக்கி அருள் புரிவானாக.
 குறிப்பு..:- இஸ்லாமியப் பெண்மணி  என்ற  அங்கத்தவர்கள் கல்வி என்ற தலைப்பில் வெளியிட்ட கட்டுரைப்போட்டியில் ஆறு தலைப்புகளைத் தேர்ந்தெடுத்து  1-3 வரை பரிசுகள் வழங்குவதாக வெளியிட்டார்கள். ..ஆனால் பரிசுகளை அடைய வேண்டும் என்ற நோக்கில் இக்கட்டுரையை நான் எழுத வில்லை.  என்னால் முடிந்த வரை தெரிந்ததை இவ்விடத்தில் தரிசனம் செய்கின்றேன். இது மக்களுக்கு பிரயோசனம் தர வேண்டும் என்பதே! இக்கட்டுரையின் நோக்கம்..ஜஷாக்கல்லாஹூ ஹய்ரா.
 
 ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
 

அஹமட் யஹ்யா.
ஹொரோவபதான.
அனுராதபுரம்.
SRI LANKA.