Powered By Blogger

Wednesday, January 2, 2013

லாஇலாஹ இல்லல்லாஹ்வின் பொருள்.

 
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ..
அளவற்ற அருளாளனும்,நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயர் கொண்டு லாஇலாஹ இல்லல்லாஹ் என்பதின் பொருள் என்ற தலைப்பை இவ்விடம் தரிசனம் செய்கிந்றேன். அல்லாஹ் நம்அனைவருக்கும் இதை விளங்கி இதன்படி செயல்பட நல்லருள் புரிவானாக.


லாஇலாஹ இல்லல்லாஹ்வின் பொருள்.

லாஇலாஹ இல்லல்லாஹ் என்பது. இம்மார்க்கத்தின் அடிப்படையாகும்.இஸ்லாம் மார்க்கத்தில் இதற்கு மிகப் பெரும் அந்தஸ்தும்,கண்ணியமும்,மதிப்பும இருக்கின்றது.லாஇலாஹ இல்லல்லாஹ் என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகளில் முதற் கடமையும், ஈமானின் கிளைகளில் மிக உயர்ந்ததுமாகும். செயல்கள் ஏற்கப்படுவது என்பது இக்கலிமாவை மொழிந்து அதற்கேற்ப செயல்படுவதில் தான் இருக்கிறது.
இதன் உண்மையான பொருள். இதை விடுத்து வேறு பொருள் கொள்ளக்கூடாத பொருள். உண்மையில் வணங்கப்படுவதற்கு உரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை., என்பதாகும. இதன் பொருள் படைப்பவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை, என்பதோ அல்லது பொருட்களை உருவாக்குவதற்கு சக்தியுள்ளவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்பதோ அல்லது உலகத்தில் இருப்பது அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்பதோ அல்ல. உண்மையான பொருள். உண்மையில் வணங்கப்படுவதற்கு உரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்பதாகும்.

 

இக்கலிமாவுக்குரிய இரு அம்சங்கள்.

இக்கலிமாவுக்கு இரு அம்சங்கள் உள்ளன.
ஒன்று. எதிர்மறை.
இரண்டு. உடன்பாடு.

1- எதிர் மறை. இது லாஇலாஹ - வணக்கத்திற்குரியவன் யாருமில்லை-என்று நாம் சொல்லும் போது வணக்கத்திற்கு உரிய தகுதி வேறு யாருக்குமில்லை என்று மறுப்பதாகும்.

2- உடன்பாடு. இது இல்லல்லாஹ்- அல்லாஹ்வைத் தவிர- என்று நாம் கூறும் போது வணக்கத்திற்குரிய தகுதி அல்லாஹ்வுக்கு மட்டுமே உள்ளது. இதில் அவனுக்கு இணை யாரும் கிடையாது என்று ஒப்புக்கொள்வதாகும்.


எனவே அல்லாஹ்வைத் தவிர வேறு யாரையும் வணங்கப்படக்கூடாது.வணக்க வகைகளில் எதுவும் அல்லாஹ் அல்லாதவருக்கு செய்யப்படக்கூடாது. இக்கலிமாவின் பொருள் அறிந்து, இணைவைத்தலை நிராகரித்தல், ஏகத்துவத்தை ஏற்றுக்கொள்ளுதல் என்ற இதன் தேட்டத்தை உறுதியாக நம்பி அதன் பிரகாரம் செயல்பட்ட வண்ணம் யார் இக்கலிமாவைச் சொல்லுகிறாரோ அவரே உம்மையான முஸ்லிம். இக்கலிமாவை நம்பாமல் இதன்படி செயல்படுபவன் நயவஞ்சகன். இக்கலிமாவுக்கு எதிராக இணை கற்பித்து செயல்படுபவன் காபிர். இறைமறுப்பாளனும்,இணைவைத்தவனுமாவான். இக்கலிமாவை அவன் நாவால் மொழிந்தாலும் சரியே.


லாஇலாஹ இல்லல்லாஹ்வின் சிறப்பு.

இக்கலிமாவுக்கு அதிகமான சிறப்புகளும், பலன்களும் உள்ளன. அவற்றில் சில பின்வருமாறு....

1- இக்கலிமா. ஏகத்துவவாதிகளில் நரகம் செல்லத் தகுதியானவர்களை நரகத்தில் நிரந்தரமாக இருப்பதை தடுப்பதற்கரிய காரணமாக இருக்கும்.

"ஒரு மணிக்கோதுமை அளவு ஒருவனின் உள்ளத்தில் நன்மையிருக்கும் நிலையில் லாஇலாஹ இல்லல்லாஹ் எனக் கூறியவன் நரகத்திலிருந்து வெளியேற்றப்படுவான். ஒரு தொலிக்கோதுமை அளவு ஒருவனது உள்ளத்தில் நன்மையிருக்க லாஇலாஹ இல்லல்லாஹ் எனக் கூறியவனும் நரகத்திலிருந்து வெளியேற்றப்படுவான். ஒரு மக்காச்சோளம் அளவு நன்மை உள்ளத்திலிருக்க லாஇலாஹ் இல்லல்லாஹ் கூறுயவனும் நரகத்திலிருந்து வெளியேற்றப்படுவான்." என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். (நூல். புகாரி.44)

2- மனிதர்களும்,ஜின்களும் இதற்காகவே படைக்கப்பட்டுள்ளனர்.அல்லாஹ் கூறுகின்றான்.
"ஜின்னையும்,மனிதனையும் என்னை வணங்குவதற்காகவே தவிர வேறு எதற்காகவும் நான் படைக்கவில்லை". (அல்குர்ஆன். 51:56)

3- தூதர்கள் அனுப்பப்பட்டதும், வேதங்கள் இறக்கப்பட்டதும் இதற்காகத்தான். அல்லாஹ் கூறுகின்றான்.
"(நபியே!) உமக்கு முன் நாம் அனுப்பிய ஒவ்வொரு தூதரிடமும் வணக்கத்திற்குரியவன் என்னைத் தவிர வேறு யாரிமில்லை , எனவே என்னையே வணங்குங்கள் என நாம் வஹி அறிவிக்காமல் இல்லை."(அல்குர்ஆன்.21:25)

4- இதுவே இறைத்தூதர்களின் அழைப்பிற்குரிய திறவுகோலாகும். எல்லா இறைத்தூதர்களும் இதன் பக்கம் தான் மக்களை அழைத்தார்கள். அவர்கள் அனைவரும் தம் மக்களிடம் "அல்லாஹ்வை வணங்குங்கள் அவனையன்றி வேறு இறைவன் உங்களுக்குக் கிடையாது. என்றே கூறினார்கள்".(அல்குர்ஆன்.7:73)

5- இக்கலிமா அல்லாஹ்வை நினைவுகூர்கின்ற வார்த்தைகளில் மிகச் சிறந்ததாகும். "நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். நானும் எனக்கு முன் சென்ற நபிமார்களும் கூறியதில் மிகச் சிறந்தது லாஇலாஹ இல்லல்லாஹூ வஹ்தஹூ லாஷரீக்கலஹூ- வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை அவன் தனித் தவன் அவனுக்கு இணையாக எதுவும் கிடையாது- என்பதாகும்."(முஅத்தா-449)

லாஇலாஹ இல்லல்லாஹ்வின் நிபந்தனைகள்.

லாஇலாஹ இல்லல்லாஹ்விற்கு ஏழி நிபந்தனைகள் உள்ளன. ஒரு அடியான் அவற்றில் எந்த ஒன்றுக்கும் முரண்படாமல் அந்த ஏழையும் ஒன்றாகப்பற்றிப்பிடித்துக் கொள்ளாத வரையில் அது செல்லாது அவைகள் பின்வருமாறு...

1- அறிவு.
அதாவது எதிர்மறை,உடன்பாடு எனும் இரு அம்சங்களுடன் இக்கலிமாவின் பொருளையும் அப்பொருள் வலியுறுத்துகின்ற செயலையும் அறியவேண்டும்.
எனவே ஒரு அடியான் அல்லாஹ் மட்டுமே வணக்கத்திற்குரியவன், அவனல்லாதவற்றை வணங்குவது தவறானது, என்பதை அறிந்து அதற்கேற்ப செயல்படுவானேயானல் அவனே இதன் பொருளைத் தெரிந்தவனாவான். அல்லாஹ் கூறுகின்றான்.

"வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்பதை நீர் அறிந்துகொள்வீராக!." (அல்குர்ஆன்.47:19)

நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள் "வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்பதை அறிந்த நிலையில் ஒருவன் மரணமடைந்தால் அவன் சுவர்க்கம் செல்வான்"(நூல்.முஸ்லிம்.26)

2- உறுதி.
அதாவது இக்கலிமாவை ஜின், மனித ஷைத்தான்கள் ஏற்படுத்துகின்ற சந்தேகங்கள் வராமல் தெளிவான உள்ளத்துடன் உறுதியாக மொழிவதாகும். மற்றும் இதன் பொருளை மிக உறுதியாக நம்பி இதைக் கூறிடவேண்டும். அல்லாஹ் கூறுகின்றான்.
"நிச்சயமாக (உண்மையான) முஃமின்கள் யாரெனில் அவர்கள் அல்லாஹ்வையும், அவனது தூதரையும் நம்பிய பின்னர் (அதுபற்றி எத்தகைய) சந்தேகமும் கொள்ளமாட்டார்கள்." (அல்குர்ஆன்.49:15)

நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். "வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்றும் நான் அல்லாஹ்வின் தூதரென்றும் சாட்சி சொல்லுகிறேன். இவ்விரண்டு விஷயங்களையும் எவ்வித சந்தேகமுமின்றி நம்பி ஒரு அடியான் அல்லாஹ்வை சந்திப்பானேயானால் அவன் சுவர்க்கத்தில் நுழைவான்."(நூல். முஸ்லிம். 27)

3- ஏற்றுக் கொள்ளல்.
அதாவது இக்கலிமாவின் தேட்டம் அனைத்தையும் உள்ளத்தால் உறுதி கொண்டு நாவால் மொழிந்து ஏற்றுக்கொள்ள வேண்டும். நபி(ஸல்)அவர்கள் மூலம் வந்துள்ள எல்லாச் செய்திகளையும் உண்மை என்று நம்பி அவை அனைத்தையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அவற்றில் எதையும் மறுத்துவிடக் கூடாது.அல்லாஹ் கூறுகின்றான்.
"இத்தூதர் தம் இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பட்டதை நம்பினார்.நம்பிக்கை கொண்டோரும் (இதை நம்பினர்). இவர்கள் அனைவரும் அல்லாஹ்வையும்,அவனது வானர்களையும்,அவனது வேதங்களையும்,அவனது தூதர்களையும் நம்பினார்கள். அவனது தூதர்களில் எவருக்கிடையேனும் பாரபட்சம் காட்டமாட்டோம், செவியுற்றோம், கட்டுப்பட்டோம். எங்கள் இறைவனே! உன்னிடமே மன்னிப்புக் கோருகிறோம் உன்னிடமே (எங்கள்) திரும்புதல் உண்டு." (அல்குர்ஆன். 2:285)

மார்க்கச் சட்டங்களில் அல்லது குற்றவியல் சட்டங்களில்- உதாரணமாக. திருட்டு, அல்லது விபச்சாரத்திற்குரிய தண்டனை, பலதாரமணம், அல்லது வாரிசுரிமைச் சட்டம் போன்றவைகளில் சிலவற்றை ஆட்சேபிக்கின்றவர்கள் அல்லது மறுப்பவர்கள் இக்கலிமாவை நிராகரிப்பவர்களில் , ஏற்றுக்கொள்ளாதவர்களில் சேர்நது விடுகிறார்கள். அல்லாஹ் கூறுகின்றான்.
"அல்லாஹ்வும்,அவனது தூதரும் ஒரு காரியத்தை முடிவு செய்து விட்டால் நம்பிக்கை கொண்ட ஆணுக்கும்,பெண்ணுக்கும் தமது அக்காரியத்தில் சுயவிருப்பம் கொள்வதற்கு உரிமை இல்லை.எவன் அல்லாஹ்வுக்கும்,அவனது தூதருக்கும் மாறு செய்கிறானோ அவன் மிகத் தெளிவான வழி கேட்டில் சென்றுவிட்டான்" (அல்குர்ஆன். 33:36)

4- கட்டுப்படுதல்.
அதாவது ஏகத்துவக் கலிமா எதை அறிவிக்கின்றதோ அதற்குக் கட்டுப்படவேண்டும். ஏற்றுக்கொள்வதற்கும்,கட்டுப்படுவதற்குமுள்ள வித்தியாசம் என்னவென்றால்?. ஏற்றுக்கொள்வதென்பது? அதற்குரிய சரியான பொருளை வார்த்தையால் வெளிப்படுத்துவது. கட்டுப்படுவதென்பது? செயல்களால் பின்பற்றுவதாகும். ஒருவன் லாஇலாஹ இல்லல்லாஹ் என்பதன் பொருளை அறிந்து,அதை உறுதி கொண்டு அதை ஏற்றுக்கொள்ளவும் செய்கிறான். எனினும் அவன் அதற்கு கட்டுப்படவில்லை எனில் அவன் அறிந்ததற்கேற்ப செயல்படவில்லையெனில் அது அவனுக்குப் பலனளிக்காது. அல்லாஹ் கூறுகின்றான்.
"வேதனை உங்களிடம் வருவதற்கு முன்னர் உங்கள் இறைவனிடம் மீண்டு, அவனுக்கே கட்டுப்பட்டு விடுங்கள். பின்னர் நீங்கள் உதவி செய்யப்படுவீர்கள்." (அல்குர்ஆன்.39:54)

"உம் இறைவன் மீது சத்தியமாக!அவர்கள் தங்களிடையே எழுந்த சச்சரவுகளில் உம்மை நீதிபதியாக ஏற்று பின்னர் நீர் தீர்ப்புச் செய்தது பற்றி தமக்குள் எந்த அதிருப்தியும் கொள்ளாமல் அதற்கு முழுமையாகக் கட்டுப்படாதவரை அவர்கள் நம்பிக்கை கொண்டவர்களாகமாட்டார்கள்." (அல்குர்ஆன்.4:65)


5- உண்மை.
அதாவது அல்லாஹ்விடம் உண்மையாக நடந்து கொள்ளுதல். இது அவனுடைய நம்பிக்கையில் அடிப்படைக் கொள்கையில் உண்மையாளனாக இருப்பதைக் குறிக்கும். அல்லாஹ் கூறுகின்றான்.
"நம்பிக்கை கொண்டோரே அல்லாஹ்வை அஞ்சுங்கள். நீங்கள் உண்மையாளர்களுடன் இருங்கள்." (அல்குர்ஆன்.9:119)

நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். :உண்மையான உள்ளத்துடன் யாரேனும் லாஇலாஹ இல்லல்லாஹ் எனக் கூறினால் அவர் சுவர்க்கம் நுழைவார்".. (நூல் .அஹ்மத்)

ஒருவன் இக்கலிமாவை நாவால் சொல்லிக்கொண்டு அதன் அருத்தத்தை உள்ளத்தால் மறுத்தால் நிச்சயமாக அது அவனுக்கு ஈடேற்றமளிக்காது. மாறாக அவன் நயவஞ்சகனின் கூட்டத்தில் சேர்ந்து விடுவான். நபி(ஸல்)அவர்கள் கொண்டு வந்த அனைத்தையுமோ,அல்லது சிலவற்றையோ பொய்யாக்குவது உண்மைக்கு முரணானதாகும். ஏனெனில் அல்லாஹ் நபி(ஸல்)அவர்களுக்கு கட்டுப்படவும்,அவர்களை உண்மைப்படுத்தவும் ஏவியுள்ளான். நபிக்குக் கட்டுப்படுவதை தனக்குக் கட்டுப்படுவதோடு சேர்த்துக் கூறியிருக்கிறான். அல்லாஹ் கூறுகின்றான்.
"அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள், அவன் தூதருக்கும் கட்டுப்படுங்கள் என (நபியே) நீர் கூறுவீராக." (அல்குர்ஆன்.24:54)

6- வாய்மை.
அதாவது மனிதன் தனது செயல்களை தூய எண்ணத்தைக் கொண்டு ஷிர்க்கின் சாயல் படிந்த அனைத்தையும் விட்டும் தூய்மைப்படுத்துவதாகும். இது எவ்வாறெனில் சொல் , செயல்கள் அனைத்தும் அவனிடமிருந்து அல்லாஹ்வின் திருமுகத்துக்காக என தூய எண்ணத்துடனும், அவனது திருப்பொருத்தத்தை நாடியும் ஏற்படவேண்டும். அதில் முஹஸ்துதி, பிறர் பாராட்ட வேண்டுமென்ற நோக்கம், பயன் கருதுதல், சுய நலன், வெளிப்படையான அல்லது மறைமுகமான மனோ இச்சை, அல்லது அல்லாஹ்வின் வழிகாட்டுதல் இன்றி ஒரு மனிதனின் பிரியத்திற்காகவோ அல்லது ஒரு மத்ஹபுக்காகவோ ஒரு செயலைச் செய்வது போன்ற எந்தக் கலப்படமும் இருக்கக்கூடாது.
எனினும் அவன் தனது செயல் மூலம் அல்லாஹ்வின் திருமுகத்தையும், மறுமையையும் நாடுபவனாக இருப்பது அவசியமாகும். மனிதர்களில் எவரது பிரதிபலனுக்கோ நன்றி பாரட்டுக்கோ தனது உள்ளத்தில் இடமளித்து விடக் கூடாது. அல்லாஹ் கூறுகின்றான்.

"அறிந்து கொள்வீராக! தூய்மையான இம்மார்க்கம் அல்லாஹ்வுக்கே உரியது." (அல்குர்ஆன்.39:3)
"வணக்கத்தை அல்லாஹ்வுக்கே தூய்மையாக்கியவர்களாக அல்லாஹ்வை அவர்கள் வணங்கவேண்டும் என்றே அவர்கள் ஏவப்பட்டுள்ளார்கள்." (அல்குர்ஆன்.98:5)


நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். "அல்லாஹ்வின் திருமுகத்தை நாடி "லாஇலாஹ இல்லல்லாஹ்" என்று கூறியவருக்கு அல்லாஹ் நரகத்தை தடைசெய்துவிட்டான்."
அறிவிப்பவர். இத்பான் (ரலி)
(நூல்,புகாரி. 425- முஸ்லிம். 33)

7- அன்பு.
அதாவது இம்மகத்தான கலிமாவையும், இதன் தேட்டத்தையும் இது எதை அறிவிக்கிறதோ அதையும் நேசிக்க வேண்டும். மற்ற எல்லாவற்றினுடைய நேசத்தை விட அல்லாஹவுக்கும்,அவன் தூதருக்கும் காட்டவேண்டிய நேசத்துக்கே முன்னுரிமை வழங்க வேண்டும். நேசத்திற்குரிய நிபந்தனைகளையும், அதற்கு அவசியமான வற்றையும் கடைப்பிடிக்க வேண்டும்.
ஆகவே கண்ணியப்படுத்துதல்,மகத்துவப்படுத்துதல், பயப்படுதல்,ஆதரவு வைத்தல் ஆகியவற்றுடன் அல்லாஹ்வை நேசிக்க வேண்டும். பொதுவாக மக்கா, மதீனா, இறையில்லாங்கள் போன்ற அல்லாஹ்வுக்குப் பிரியமான இடங்களையும், ரமழான், துல்ஹஜின் முதல் பத்து நாட்கள் போன்ற அல்லாஹ்வுக்குப் பிரியமான காலங்களையும், நபிமார்கள்,ரசூல்மார்கள்,மலக்குகள்,சத்தியவான்கள்,உயிர்த்தியாகிகள், நல்லடியார்கள் போன்ற அல்லாஹ்வுக்குப் பிரியமான மனிதர்களையும்.தொழுகை,ஜகாத்,நோன்பு, ஹஜ் போன்ற அல்லாஹ்வுக்குப் பிரியமான செயல்களையும் நேசிக்க வேண்டும்.
மனவிருப்பங்கள், மனோஇச்சைகளை விடவும் அல்லாஹ்வின் விருப்பங்களுக்கு முன்னுரிமை தர வேண்டும். அல்லாஹ் வெறுப்பவற்றை வெறுப்பதும் இறைநேசமே. அதனால் இறைநிராகரிப்பாளர் இறை நிராகரிப்பு, பாவம், இறைவனுக்கு மாறு செய்தல் ஆகியவற்றையும் வெறுக்க வேண்டும். அல்லாஹ் கூறுகின்ரான்.

"நம்பிக்கை கொண்டோரே! உங்களில் யாரேனும் தனது மார்க்கத்தை விட்டு மாறி விட்டால் அல்லாஹ் வேறொரு சமுதாயத்தைக் கொண்டுவருவான். அவன் அவர்களை நேசிப்பான். அவர்களும் அவனை நேசிப்பார்கள். அவர்கள் நம்பிக்கை கொண்டோரிடம் பணிவாகவும், நிராகரிப்போரிடம் கடுமையாகவும் இருப்பார்கள். அல்லாஹ்வின் பாதையில் போர் புரிவார்கள். பழிப்போரின் பழிச் செயலுக்கு அவர்கள் அஞ்சமாட்டார்கள்." (அல்குர்ஆன். 5:54)
 

முஹம்மத்துர் ரசூலுல்லாஹ்வின் பொருள்.

இதன் பொருள் முஹம்மத்(ஸல்)அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும், மனித சமுதாயம் அனைத்திற்கும் அனுப்பப்பட்ட தூதருமாவார்களென வெளிப்டையாகவும்,அந்தரங்கத்திலும், அதாவது நம்பிக்கையாலும்,சொல்லாலும், செயலாலும் ஏற்றுக்கொல்வதும் இதன் தேட்டத்தின் படி செயல்படுவதுமாகும். நபி(ஸல்)அவர்கள் ஏவியவற்றுக்குக் கீழ்படிவதும், அவர்கள் அறிவித்தவற்றை உண்மைப்படுத்தவது, அவர்கள் விலக்கியவற்றிலிருந்து விலகிக்கொள்வது, மற்றும் அவர்கள் காட்டிய வழியில் மட்டுமே அல்லாஹ்வை வணங்குவதும் அவசியம்.
முஹம்மதுர் ரசூலுல்லாஹ் என்று சாட்சி சொல்வதில் இரண்டுஅம்சங்கள் உள்ளன. அவை பின்வருமாறு...

ஒன்று. அப்துஹூ
இரண்டு. வரசூலுஹூ.

அல்லாஹ்வின் அடியாரும், அவனது தூதரும் ஆவார்கள் என்பதாகும். இவ்விரண்டும் நபிஸல்அவர்கள் விஷயத்தில் வரம்பு மீறுவதையும்,தரக்குறைவாகக் கருதுவதையும் அகற்றிவிடுகிறது. ஏனெனில் அவர்கள் அல்லாஹ்வின் அடியாராகவும், அவனுடைய தூதராகவும் இருக்கிறார்கள். சிறப்பான இவ்விரண்டு தன்மைகளில் அவர்கள் மக்களிலேயே மிகப் பரிபூரணமானவர்களாக இருக்கிரார்கள்.

இந்த இடத்தில் அப்து என்பதன் பொருள் .. வணக்கம் புரியும் அடிமை என்பதாகும். நபி(ஸல்)அவர்கள் ஒரு மனிதர்தான். எதிலிருந்து மனிதன் படைக்கப்பட்டானோ அதிலிருந்தே அவர்களும் படைக்கப்பட்டார்கள். ஏனைய மனிதர்களுக்கு உள்ளதுதான் அவர்களுக்கும். அல்லாஹ் கூறுகின்றான். "(நபியே!) நீர் கூறுவீராக! நிச்சயமாக நான் உங்களைப்போன்ற ஒரு மனிதன் தான்." (அல்குர்ஆன்.18:110)

"புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே! அவனே தன் அடியார் மீது இவ்வேதத்தை இறக்கியருளினான். இதில் எவ்விதக் கோணலையும் வைத்திடவில்லை."(அல்குர்ஆன். 18:1)

ரசூல் என்பதன் பொருள் . சுவர்க்கத்தைக் கொண்டு நற்செய்தி சொல்லவும், நரகத்தைக் கொண்டு எச்சரிக்கை செய்யவும் அல்லாஹ்வின் பக்கம் அழைக்கவும் மனித சமுதாயம் முழுவதற்கும் தூதராக அனுப்பப்பட்டவர் என்பதாகும். இவ்விரு தன்மைகளைக் கொண்டு சாட்சி சொல்வது நபி(ஸல்)அவர்கள் விஷயத்தில் வரம்பு மீறுவதையும் ,தரக்குறைவாகக் கருவதையும் முற்றாக நீக்கி விடுகின்றது.
எனவே இக்கலிமாவின் பொருளை முழுமையாக நம்பி அதன் படி செயல்பட அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக! எல்லாம் வல்ல அல்லாஹ் சத்தியத்தைத் தெளிவாக எடுத்துக் கூறும் சத்தியப் போதகர்களாகவும் அவ்வழியில் ஏற்படும் இன்னல்களைச் சகித்துக் கொள்ளும் உண்மைப் போராளிகளாகவும் எம்மையும் உங்களையும் ஆக்கி அருள் புரிவானாக!..ஆமீன்.


அஹமட் யஹ்யா,
ஹொரோவபதான.
அனுராதபுரம்.
SRI LANKA.