Powered By Blogger

Wednesday, December 12, 2012

இஸ்லாமியப் பெண்களுக்கு




அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ.

புகழனைத்தும் அகிலத்தார்களைப் படைத்து  பரிபாலிக்கும் அல்லாஹ்வுக்கே. 
சாந்தியும் ,சமாதானமும் நபிமார்களில் இறுதியானவரும், அல்லாஹ்வின் தூதருமான நபி(ஸல்)அவர்கள் மீதும் ,அவர்களின் குடும்பத்தினர் ,தோழர்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் கருணை நிலவட்டுமாக. ஆமீன்.

நிச்சயமாக இஸ்லாமிய மார்க்கம் மனிதனின் இம்மை,மறுமை வாழ்விற்குத் தேவையான எல்லாவற்றையும்  தன்னகத்தே அமைத்துக்கொண்ட ஒரே மார்க்கமாகும். அல்லாஹ் அல்குர்ஆனில் கூறுகின்றான்..
"இன்றைய தினம் உங்களுக்கு உங்களின் மார்க்கத்தை பூரணமாக்கி விட்டேன். உங்களுக்கு இஸ்லாத்தை மார்க்கமாக ஏற்றுக்கொண்டேன்." (5:3)
இம்மார்க்கம் அல்லாஹ்வை மட்டும் ஒருமைப் படுத்துவதற்காகவும்,மனிதர்களிடையே  நீதியை சமநிலைப்படுத்துவதற்காகவும், இம்மார்க்கம் நமக்கு வழங்கப்பட்டுள்ளது. எனவே மனிதர்களிடையே இறையச்சமல்லாத , அல்லாஹ்வுக்கு மாற்றமானவற்றை இம்மார்க்கத்துக்குள் நுழைக்க முடியாது என்ற உண்மையை 1400 ஆண்டுகளுக்கு முன்னால் இஸ்லாம் மனிதனுக்குப் போதித்திருப்பது யாரும் அறிந்த உண்மையே. 

இன்னும் இம்மார்க்கம் மனிதர்களிடையே வேறூன்விட்ட சாதி,மத வேற்றுமையைத் தடுப்பதற்காகவும் இம்மார்க்கம் நமக்கு வழங்கப்பட்டுள்ளது. உரிமைகளிலும், சட்டங்களிலும் ஆண்களும்,பெண்களும் சமமே என்று உறுதிப்படுத்தப்படுகின்றது .  அல்லாஹ் கூறுகின்றான்..
"மனிதர்களே! நிச்சயமாக உங்களை ஒரு ஆணிலிருந்தும்,பெண்ணிலிருந்தும் படைத்தோம். நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்வதற்காக உங்களைப் பல கிளைகளாகவும்,கோத்திரங்களாகவும் ஆக்கினோம்.நிச்சயமாக உங்களில் அல்லாஹ்விடத்தில் மிக மரியாதைக்குரியவர்கள் உங்களில் மிகுந்த இறையச்சமுடையவர்களே."(49:13)

இந்த முன்னுரையின் மூலம் பெண்கள் சம்பந்தப்பட்ட சட்டங்களையும், ஒழுக்கங்களையும் உள்ளடக்கிக் கொண்ட இந்தத்க் கட்டுரையை உங்கள் முன் கொண்டுவருகின்றேன்.....
*முஸ்லிம் பெண்ணே! உனது செயல்கள் அல்லாஹ்வும் , அவனது தூதரும் மார்க்கமாக்கியவற்றிற்கு ஏற்றதாக அமைவதற்கு இதை அறிந்து கொள்வதும்,இதற்கேற்ப செயல்படுவதும் உனக்கு அவசியமாகும்.
இதில் உள்ளடங்கி இருக்கும் தலைப்புகள்.
1- இஸ்லாத்தில் பெண்கள் நிலை.  2- பெண்களின் மாதவிடாய், பிரசவ இரத்தம்.
3- பர்தா.



1-  இஸ்லாத்தில் பெண்கள் நிலை.

இஸ்லாத்தில் பெண்களுக்கிருக்கின்ற உரிமைகள் பற்றிப் பேசுவதற்கு முன்னால்  பெண்களை மற்ற சமூகத்தினர் எப்படி நடத்திக்கொண்டிருக்கின்றார்கள் என்பதைத் தெளிவு படுத்துவது அவசியமாகும்.

ஃ- கிரேக்கர்கள்.  இவர்கள் பெண்களை வியாபாரப் பொருளாகவே   கருதுகின்றனர். அவர்களுக்கென எந்த உரிமையும் கிடையாது,உரிமைகள் அனைத்தும் ஆண்களுக்கே என்றனர். இன்னும் அப்பெண்களுக்கு சொத்துரிமை,கொடுக்கள் , வாங்கள் போன்ற உரிமைகள் தடுக்கப்பட்டிருந்தன.மேலும்  பெண்கள் விஷமரத்துக்கு ஒப்பானவர்கள். அம்மரத்தின் வெளித்தோற்றம் அழகாக இருக்கும், எனினும் அதன் கனிகளை சிட்டுக் குருவிகள் சாப்பிட்டவுடனே இறந்து விடுகின்றன என்று கூறுகின்றனர்.

ஃ- ரோமானியர்கள். இவர்கள் பெண்களை உயிரற்ற ஒரு பொருளாகவே கருதி வந்துள்ளனர். அவர்களிடம் பெண்களுக்கு எந்த உரிமையும், மதிப்பும் இருந்ததில்லை.  பெண்கள் உயிரற்ற பொருளாகக் கருதப்பட்டமையால்தான் அவர்களை கொதிக்கின்ற எண்ணெயை ஊற்றியும், தூண்களில் கட்டியும் வேதனை செய்தார்கள்.  இது மட்டுமல்ல குற்றமற்ற பெண்களை குதிரைகளின் வால்களில் கட்டி அவர்கள் மரணித்துப் போகின்ற அளவிற்கு மிக விரைவாக ஓட்டிவிடுவார்கள்.

ஃ- இந்தியர்கள்.  இவர்களும் ரோமானியர்களைப் போன்றுதான்  இவர்கள் அவர்களை விட ஒரு படி மேல் அதிகமாக  கணவன் இறந்து விட்டால் அவனின் சிதையுடன் மனைவியையும் எரித்து விடுபவர்களாவும் இருந்திருக்கின்றனர்.

ஃ- சீனர்கள்.  இவர்கள் பெண்களை நற்பாக்கியத்தையும், செல்வங்களையும் அழித்துவிடக் கூடிய தண்ணீருக்கு ஒப்பாக்கினர். அவர்கள் தம் மனைவியை உயிரோடு புதைப்பதற்கும்,  விற்றுவிடுவதற்கும் உரிமை பெற்றிருந்தனர்.

ஃ- யூதர்கள்.  இவர்கள் பெண்கள் சாபத்திற்குரியவர்கள் என்று கருதுகின்றனர். ஏனெனில் அவள் தான் ஆதம்(அலை)அவர்களை வழிகெடுத்து மரத்தின் கனியைச் சாப்பிடச் செய்துவிட்டாள். மேலும் பெண்ணுக்கு மாதவிடாய் வந்து விட்டால் அவள் அசுத்தமானவள், வீட்டையும்,அவள் தொடும்பொருளையும் அசுத்தப்படுத்தி விடக்கூடியவள் எனவும் கருதுகின்றார்கள். பெண்ணுக்குச் சகோதரர்கள் இருந்தால்  அவள் தன் தந்தையின் சொத்தில் சிறிதும் உரிமை பெறமாட்டாள் என்றும் கருதுகின்றார்கள்.

ஃ- கிருஸ்தவர்கள்.  இவர்கள் பெண்களை ஷைத்தானின் வாசலுக்குக் கருதுகின்ரார்கள். கிருஸ்தவ  அறிஞ்சர் ஒருவர் கூறினார். பெண் என்பவள்  மனித இனத்தைச் சார்ந்தவறல்ல என்று கூறினார். இன்னும் ஒருவர் கூறினார்  நீங்கள் பெண்களைக் கண்டால் அவளை மனித இனத்தைச் சார்ந்தவள் எனக் கருதிவிடாதீர்கள். அவளை ஒரு உயிருள்ள ஜீவனாகக் கூட கருதாதீர்கள். நீங்கள் காண்பது நிச்சயமாக ஷைத்தானின் உருவத்தைத்தான் ,,, நீங்கள் செவியேற்கும் அவளின் சப்தம் பாம்பின் சீற்றம்தான்.  என்று அந்த அறிஞ்சர்கள் கூறினார்கள்.

இஸ்லாத்திற்கு முன்பு வரை அரேபியர்களிடத்தில் பெண்கள் இழிந்த பிறபிகளாக இருந்தனர். அவர்களுக்கு சொத்துரிமை கிடையாது. அவர்களை ஒரு பொருட்டாகக் கருதப்படமாட்டாது. அவர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது. அவர்களில் பெரும்பாலோர்  தம் பெண்மக்களை உயிருடன் புதைப்பவர்களாக இருந்திருக்கின்றனர்.
இவ்வனைத்து அநியாங்களையும் பெண்களை விட்டும் நீக்கவும் ,ஆண்களும்,பெண்களும் சமமானவர்கள்தான் பெண் ஆணின் வில எழும்பிலிருந்து படைக்கப்பட்டவள்தான் அவளுக்கும் உரியைகள் கடமைகள் இருக்கின்றதுதான் என்பதை தெளிவாக விளக்கவே இஸ்லாம் வந்தது . எனவே ஆண்களுக்கு உரிமை இருப்பது போல் பெண்களுக்கும் உரிமை இருக்கின்றன.

அல்லாஹ் கூறுகின்றான்..
"மனிதர்களே! நிச்சயமாக உங்களை ஒரு ஆணிலிருந்தும்,பெண்ணிலிருந்தும் படைத்தோம். நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்வதற்காக உங்களைப் பல கிளைகளாகவும்,கோத்திரங்களாகவும் ஆக்கினோம்.நிச்சயமாக உங்களில் அல்லாஹ்விடத்தில் மிக மரியாதைக்குரியவர்கள் உங்களில் மிகுந்த இறையச்சமுடையவர்களே."(49:13)
"ஆண் அல்லது பெண் ஈமான் கொண்ட நிலையில் நற்கருமங்கள் செய்தால் அவர்கள் சுவனத்தில் நுழைவார்கள்.சிறிதளவும் அநீதியிழைக்கப்பட மாட்டார்கள்." (4:124)
"மனிதன் தன் பெற்றோருக்கு உபகாரம் செய்ய வேண்டுமென நாம் அறிவுறுத்தியுள்ளோம்."(46:15)

நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்... இவ்வுலகம் முழுவதும் பயனளிக்கும் செல்வங்களே!. பயனளிக்கும் இவ்வுலகச் செல்வங்களில் மேலானது நல்லொழுக்கமுள்ள மனைவியே!.
அறிவிப்பவர் .அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னு ஆஸ்(ரலி)
(நூல்.முஸ்லிம் .2911
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "முஃமின்களில் ஈமானால் பரிபூரணமானவர் அவர்களில் மிக அழகிய குணமுடையவரே. உங்களில் சிறந்தவர் உங்கள் மனைவியரிடத்தில் சிறந்தவரே.'' ( திர்மிதி)

 ''நான் நபி (ஸல்) அவர்களிடம் ''அல்லாஹ்வின் நபியே நற்செயல்களில் சொர்க்கத்திற்கு மிகவும் நெருக்கமானது எது?'' என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ''தொழுகையை உரிய நேரத்தில் நிறைவேற்றுவது?'' என்று கூறினார்கள். ''அடுத்து எது? அல்லாஹ்வின் தூதரே! என்று கேட்டேன். அதற்கு ''தாய் தந்தையருக்கு நன்மை புரிவது'' என்றார்கள். ''அடுத்தது எது? அல்லாஹ்வின் தூதரே!'' என்று கேட்டபோது, ''அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிவது'' என்றார்கள்.
அறிவிப்பவர்.அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி­)
  நூல்: முஸ்­லிம் (138)   

  
நபி(ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து ''நான் அழகிய முறையில் உறவாடுவதற்கு மிகவும் தகுதியானவர் யார்?'' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் ''உன் தாய்'' என்றார்கள். அவர் ''பிறகு யார்?'' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் ''உன் தாய்'' என்றார்கள். அவர், ''பிறகு யார்?'' என்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள் ''பிறகு, உன் தந்தை'' என்றார்கள். 
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி­) 
 நூல்: புகாரி (5971)

மேலே சொல்லப்பட்டவை பெண்கள்  பற்றிய இஸ்லாத்தின் சுருக்கமான கண்ணோட்டம் .



* பெண்ணுக்குரிய பொதுவான உரிமைகள்.

உண்மையில் பெண்கள் அவசியம் தெரிந்திருக்க வேண்டிய பொதுவான உரிமைகள் உள்ளன. அவற்றை அவள் முழுமையாக  அறிந்து கொள்வதையும், அவள் விரும்பும் போது பூரணமாகச் செய்து கொள்வதையும் சமூகம் அங்கிகரிக்கவும் செய்கின்றது.
அவ்வுரிமைகள் பின் வருமாறு,,,,,
1-  சொந்தமாக்கிக் கொள்ளல்:-  வீடுகள், விவசாய நிலங்கள், தோட்டங்கள், வெள்ளி,தங்கம், கால்நடை வகைகள் இவற்றில் விரும்பிய வற்றை  ஒரு பெண் தனக்குச் சொந்தமாக்கிக் கொள்ளலாம் . அப்பபெண் தாயாக,அல்லது மகளாக,அல்லது சகோதரியாக இருந்த போதிலும் சரியே..இது இஸ்லாம் நமக்குச் சொல்லும் பாடம்.
2- திருமணம் செய்வது:-   கணவனைத் தேர்ந்தெடுப்பது, தனக்கு விருப்பமில்லாதவனை ஏற்க மறுப்பது, தனக்கு  இடையூறு ஏற்பட்டால் திருமண ஒப்பந்தத்தை முறித்துக் கொள்வது, போன்ற வற்றிலும் அவள் உரிமை பெறுகிறாள். இவை பெண்களுக்குரிய உரிமைகள் என்பதில் ஏகமான முடிவாகும்.
3- தனக்கு அவசியமான வற்றைக் கற்றுக் கொள்ளுதல்:- நிச்சயமாக அல்லாஹ்வை அறிய வேண்டும்  அதை முறைப்படி அறிவது, அவனுக்குச் செய்யவேண்டிய வணக்கங்களையும் அதை நிறை வேற்றும் முறைகளையும் அறிவது, இன்னும் தன்னுடைய கடமைகளையும் தனக்குத் தேவையான ஒழுக்கங்களையும் தான் கடைப்பிடிக்க வேண்டிய சிறந்த பண்புகளையும் அறிவது, ஏனெனில் அல்லாஹ் கூறுகின்றான்.. "அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குத் தகுதியானவன்  வேறு யாருமில்லை என்பதை நீ அறிந்து கொள்."(47:19).என்றும்  அல்லாஹ்வும் , கல்வியைத் தேடுவது ஆண்,பெண் அனைவர் மீதும் கடமையாகும். (இப்னு மாஜா) என நபி(ஸல்)அவர்களும் பொதுவாகவே சொல்லியிருப்பதால்  பெண் என்றவள் இதைக் கடைப்பிடிக்க வேண்டும் .இது அவளின் உரிமைகள்.
4- செலவு செய்தல்:-  தனது பொருளில் தான் நாடியதைத் தர்மம் செய்து கொள்வதற்கும், தனக்கும் தனது கணவன்,பிள்ளைகள், தாய், தந்தையர்கள் இவர்களில் தான் விரும்பியவர்களுக்கு வீண் விரயமில்லாத அளவுக்கு செலவு செய்துகொள்ள உரிமை பெறுகின்றாள். இவ்விஷயத்தில் இவர்களும் ஆண்களைப் போன்றுதான்.
5- விருப்பு,வெறுப்புக் கொள்ளுதல்:-  அவள் நல்ல பெண்ணை விரும்பவும், அவர்களைச் சந்திக்கவும், அன்பளிப்புகள் வழங்கவும் செய்யலாம், இன்னும் அவர்களின் நிலமைகளைக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம், அல்லாஹ்வுக்காக கெட்ட பெண்களை வெறுத்து அவர்களை விட்டும் ஒதுங்கிவிடுவதும் அவளின் உரிமைகள்.
6- மரணசாசனம்:-  அவளின் சொத்தில் மூன்றில் ஒன்றை அவளது ஜிவிதகாலத்தில் மரணசாசனம் எழுதிக்கொள்வதற்கும்,அதை எவ்வித ஆட்சேபனை செய்யாமல் செயல்படுத்துவதும் அவளின் உரிமைகளில் உள்ளதாகும். இதில் ஆண்களுக்கும் ,பெண்களுக்கும் சமமே.
7- பட்டாடை,தங்கம் அணிதல்:-  பட்டையும்,தங்கத்தையும் பெண்கள் அணிந்து கொள்வது கூடும். இவ்விரண்டும் ஆண்களுக்கு ஹராமாகும். ஒரு பெண் தன் கணவனுக்காக ஆடைகளைக் கழற்றி நிர்வாணமாக இருப்பதும், அரை ஆடை,கால் ஆடை அணிந்து கொள்வதும், தலை,கழுத்து,மார்பு முதலிய வற்றை தனது கணவனுடன் மட்டுமிருந்தால் திறந்து கொள்ளலாம்.
8- அலங்கரித்துக்கொள்ளல்:-  தனது கணவனுக்காக தன்னை அலங்கரித்துக்கொள்ள உரிமை பெறுகின்றாள்.மிக அழகிய அணிகலன்கள் அணிந்து கொள்ளலாம். எனினும் முஸ்லிம் அல்லாத மற்றும் தவறான நடத்தையுள்ள பெண்களுக்கே உரிய ஆடைகளை அணியக் கூடாது.
9- உண்பது,குடிப்பது:- நல்ல சுவையான உணவுகளையும்,பானங்களையும், உண்ணவும்,பருகவும் அவளுக்கு உரிமையுள்ளது. உண்பதிலும்,குடிப்பதிலும் ஆண்களுக்கும்,பெண்களுக்கும் எவ்விதப் பாகுபாடுமில்லை. அல்லாஹ் கூறுகின்றான்.. "உண்ணுங்கள்,பருகுங்கள் ஆனால் வீண்விரயம் செய்யாதீர்கள்.நிச்சயமாக வீண்விரயம் செய்பவர்களா அல்லாஹ் நேசிப்பதில்லை." (7:31). இங்கு இருபாலாரையும் நோக்கியே இவ்வாறு கூறப்பட்டுள்ளது.



*  கணவன் மீது மனைவிக்குரிய கடமைகள்.

ஒரு பெண்ணுக்கு அவளது கணவன் செய்ய வேண்டிய சில குறிப்பிட்ட கடமைகள் இருக்கின்றன. இக்கடமைகள் தனது கணவனுக்கு அவள் செய்ய வேண்டிய சில குறிப்பிட்ட கடமைகளுக்குப் பகரமாகி விடுகின்றன.
அவைகள்....
அல்லாஹ்வுக்கும்,அவனது தூதருக்கும் மாற்றமில்லாக் காரியங்களில் கணவனுக்குக் கட்டுப்பட்டு நடப்பது, கணவனின் தேவைகள் ...உணவு,படுக்கை இன்பம் இவற்றை தயார் செய்து கொள்வது, குழந்தைகளுக்குப் பாலூட்டுவது, அவர்களை வளர்ப்பது, அவர்களைப் பாதுகாத்துக்கொள்வது, அனுமதிக்கப்பட்ட வகையில் கணவனுக்காக அலங்கரித்துக் கொள்வது,அழகு படுத்திக் கொள்வது இவை ஒரு பெண் மனைவி என்ற அந்தஸ்தில் இருக்கும் போது தன் கணவனுக்குச் செய்யவேண்டிய கடமைகளாகும்.
அல்லாஹ் கூறுகின்றான்.. "மனைவியர் மீது கணவர்களுக்கு உள்ள உரிமையைப் போலவே முறைப்படி கணவர்கள் மீது மனைவியர்களுக்கும் உரிமையுண்டு." (2:228)
முஃமினான பெண் இவற்றை அறிந்து எவ்வித நாணமும், பயமுமின்றி இவ்வுரிமைகளை கேட்டுப் பெற வேண்டும் என்பதற்காக இவற்றை இங்கே தரிசனம் செய்கின்றேன். இவைகளில் சிலவற்றை  அவள் மன்னித்து விட்டாலன்றி கணவன் இவைகளை முழுமையாக தன் மனைவிக்கு வழங்குவது கடமையாகும். அவள் விட்டுக் கொடுப்பதும் அவளுக்கு கடமையாகும்.



2-  மாதவிடாய்,பிரசவ இரத்தத்தின் சட்டங்கள்.

ஃ  மாதவிடாயின் காலமும், அதன் வரையறையும்...
1-  பெரும்பாலும் மாதவிலக்கு வரக்கூடிய காலம் 12 வயது முதல் 50 வயது வரையாகும். சில சமயம் பெண்ணின் நிலை, அவளின் சுற்றுப்புறச் சூழலைப் பொறுத்து அதற்கு முன்னோ, பின்னோ அவளுக்கு மாதவிடாய் வந்து விடலாம்.
2- மாதவிலக்கின் குறைந்த கால அளவிற்கும்,அதன் கூடுதலுக்கும் வரையறை கிடையாது.

ஃ  கர்ப்பிணியின் உதிரப்போக்கு.

ஒரு பெண் கர்ப்பமாகி விட்டால் பெரும்பாலும் இரத்தம் நின்று விடும். எனினும் கர்ப்பமடைந்தவள் இரத்தத்தைக் கண்டால் அது குழந்தை பிறப்பதற்கு ஓரிரு நாட்களுக்கு முன்பாகயிருக்குமானால் அத்துடன் பிரசவ வலியும் இருந்தால் அது பிரசவ இரத்தமாகும். குழந்தை பெறுவதற்கு நீண்ட நாட்களுக்கு முன்னோ அல்லது பிரசவ வலியின்றி குறைந்த காலத்துக்கு முன்னோ இரத்தத்தைக் கண்டால் அது பிரசவ இரத்தமுமல்ல, மாதவிடாய் இரத்தமுமல்ல. எனினும் குழந்தை பெறும் வரை நிற்காமல் தொடர்ந்து வந்து கொண்டிருந்தால் அது மாதவிடாய் இரத்தமாகும்.

*  விதிவிலக்கான மாதவிடாய்.

ஃ  விதிவிலக்காக ஏற்படக்கூடிய மாதவிடாய் பலவகையாகும்.
1- அதிகமாகி விடுவது அல்லது குறைந்து விடுவது.
உதாரணமாக -  வழமையாக ஆறு நாட்கள் வரக்கூடிய ஒரு பெண்ணுக்கு அது நீடித்து ஏழாவது நாளும் வருகின்றது.அல்லது வழமையாக ஏழு நாட்கள் வரக்கூடியவள்  ஆறு நாட்களிலேயே தூய்மையாகிவிடுகின்றாள்.
2- முந்திவிடுவது அல்லது பிந்தி விடுவது.
உதாரணமாக -  வழக்கமாக மாதக் கடேசியில்  மாதவிடாய் வரக்கூடியவள் மாத ஆரம்பத்திலேயே  அதைக் கண்டு விடுகின்றாள். அல்லது மாத ஆரம்பத்தில் வருவது  பழக்கமாக உள்ளவள் மாத இறுதியில்  அதைக் காணுகின்றாள். எப்போது அவள் இரத்தத்தைக் கணுகின்றாளோ அப்போதே அவள் மாதவிடாய்க்காரியாகி விடுகின்றாள். அதிலிருந்து எப்போது சுத்தமாகிவிடுகின்றாளோ அப்போதே சுத்தமானவளாக ஆகிவிடுகின்றாள்.அது வழக்கத்தை விட அதிகமானாலும் சரி அல்லது குறைந்தாலும் சரி அல்லது முந்தினாலும்,பிந்தினாலும் சரியே.
3- மஞ்சல் அல்லது கலக்கல் நிறம்.
அதாவது  காயத்திலிருந்து வரக்கூடிய சீழ் போன்று மஞ்சளாகவோ, அல்லது மஞ்சளுக்கும்,கருப்புக்கும் இடைப்பட்ட நிறமாகவோ இரத்தத்தைப் பார்க்கின்றாள். அது மாதவிடாய் காலத்திலோ அல்லது  சுத்தமாவதற்கு முன் மாதவிடாய்க் காலத்துடன் சேர்ந்தோ இருந்தால் அது மாதவிடாய் தான். அதற்கும் மாதவிடாய் சட்டங்கள்தான். சுத்தமான பிறகு இருந்தால் அது மாதவிடாய் அல்ல .... இவற்றுள் நோய்களும் உண்டு. அதற்கு சிகிச்சைகளும் உண்டு.
4-  மாதவிடாய் நின்று நின்று வருவது.
அதாவது ஒரு நாள் இரத்தத்தையும், மறு நாள் சுத்தத்தையும் காண்கின்றாள் என்றால் இது போன்றவற்றுக்கு இரண்டு நிலைகள் உள்ளன.
முதல் நிலை:-  ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் விட்டு விட்டு வரும் நிலை எல்லா நேரத்திலும் நிரந்தரமாக இருந்தால்  அது நோயினால் ஏற்படக்கூடிய  தொடர் உதிரப்போக்காகும். இப்படிப்பட்ட பெண்ணுக்கு  தொடர் உதிரப்போக்கு சட்டம்தான்.
இரண்டாம் நிலை:-  மாதவிடாய் விட்டு விட்டு வரும் நிலை நிரந்தரமாக இல்லாமல் சில நேரங்களில் வந்து பிறகு வழக்கமான சுத்த நிலை ஏற்படுதல். ஒரு நாளைவிடக் குறைவாக இரத்தம் வந்து நின்று விட்டால் அது சுத்த நிலையல்ல.ஆனால் ஒரு நாளை விடக் குறைவாக இரத்தம் வந்து நின்று விட்டாலும் அது சுத்தமான நிலை என்பதை உறுதிப்படுத்தும் அம்சங்களிலிருந்தால்  அதாவது அவளது வழக்கமான மாதவிடாய் நாட்களின்  இறுதியில் இரத்தம் நின்று சுத்தம் ஏற்பட்டால் அல்லது இரத்தம் நிற்கும்போது வெண்மையான திரவம் கர்ப்பையிலிருந்து வெளியேறினால் அது சுத்தமான நிலையேயாகும்.



*  மாதவிடாயின் சட்டங்கள்.

1- மாதவிடாய் ஏற்பட்ட பெண்ணுக்கு கடமையான,நஃபிலான தொழுகைகளைத் தொழுவது ஹராமாகும். ஆனால் தொழுகை நேரத்தில் முழுமையாக ஒரு ரக்ஆத் தொழுவதற்குரிய நேரம் அவளுக்குக் கிடைத்தால் அத்தொழுகையை பூர்த்தி செய்வது அவள் மீது கடமையாகும்.அவளுக்குக் கிடைத்த நேரம் ஆரம்ப நேரமாக இருந்தாலும், கடேசி நேரமாக இருந்தாலும் சரியே.
திக்ர் செய்வதும்,சாப்பிடும் போதும் மற்ற நேரங்களிலும் பிஸ்மில்லாஹ் கூறுவதும், ஹதீஸ்களைப் படிப்பதும், தூஆச் செய்வதும், குர்ஆனை ஒதக் கேட்பதும் மாதவிடாய்ப் பெண்ணுக்கு ஹராமாகாது.  மேலும் அவள் குர்ஆனைப் பார்த்தோ, நாவால் மொழியாமல் உள்ளத்தால் சிந்தித்து ஓதுவதிலோ குற்றமில்லை. 
2-  பர்ளான, சுன்னத்தான நோன்பு நோற்பது ஹராமாகும். அப்படியே அவள் நோற்றால் அது கூடாது. எனினும் பர்ளான நோன்பை அவள் கழாச் செய்ய வேண்டும்.  ஒரு பெண் நோன்பு நோற்றிருக்கும் சமயம்  மாதவிடாய் வந்து விட்டால் அந்த நேரம் சூரியன் மறைவதற்கு ஒரு வினாடிக்கு முன்பாக இருந்தாலும் நோன்பு முறிந்து விடும். அதை அவள் கலாச் செய்ய வேண்டும்.
3- தவாஃப் செய்தல்:-  மாதவிடாய்ப் பெண் கஃபத்துல்லாவில் பர்ளான,நஃபிலான வலம் வருவது ஹராமாகும். அப்படி அவள் வலம் வந்தால் அது கூடாது. ஸஃபா மர்வாவிற்கிடையில் ஓடுவது, அரஃபாவிலே தங்குவது, முஸ்தலிஃபா, மினாவில் இரவு தங்குவது, கல் எரிதல்  போன்ற ஹஜ்,உம்ராவின் ஏனைய செயல்கள் அவளுக்கு ஹராமல்ல. இந்த அடிப்படையில் ஒரு பெண் சுத்தமானவளாக வலம் வந்து முடித்த பின்னாலோ, ஸஃபா,மர்வாவிற்கிடையே ஓடிக்கொண்டிருக்கும் போதோ மாதவிடாய் வந்து விட்டால் அதில் எந்தப் பிரச்சனையும் கிடையாது.
4-  பள்ளயில் தங்குதல்:-  மாதவிடாய்ப் பெண் பள்ளியில் தங்கியிருப்பது ஹராமாகும்.
5-  உடலுறவு கொள்ளுதல்:-  மாதவிடாயின் போது  மனைவியிடம் கணவன் உடலுறவு கொள்வதும், அதற்காக அவள் சம்மதிப்பதும் ஹராமாகும். உடலுறவைத் தவிர தனது இச்சையைத் தீர்க்கக்கூடிய முத்தமிடல், கட்டியணைத்தல், போன்றவைகள் குற்றமில்லை.
6-  தலாக்:-  மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் போது தனது மனைவியை கணவன் தலாக் சொல்லுவது ஹராமாகும். அவ்வாறு சொல்லிவிட்டால் அல்லாஹ்வுக்கும், அவன் தூதருக்கும் அவன் மாறு செய்து விட்டவனாவான்.  ஹராமைச் செய்தவனாவான். இந்நேரத்தில் அவளை அவன் மீட்டிக்கொள்வதும், சுத்தமாகும் வரை அவளைத் தன்னுடன் வைத்துக்கொள்வதும் கட்டாயமாகும். பிறகு அவன் விரும்பினால் அவளைத் தலாக் சொல்லிக்கொள்ளலாம். அவளுக்கு இரண்டாம் முறை மாதவிடாய் ஏற்படும் வரை விட்டு விடுவது நல்லதாகும். அவள் சுத்தமாகி விட்டால் அவன் விரும்பினால் அவளை தன்னுடன் வைத்துக்கொள்ளலாம்,விரும்பினால் தலாக் சொல்லவும் முடியும்.
7-  குளிப்புக் கடமை:-  மாதவிடாய்ப் பெண் சுத்தமாகி விட்டால் உடலின் எல்லாப் பகுதியையும் சுத்தப்படுத்திக் குளிப்பது கடமையாகும்.  மாதவிடாப் பெண் தொழுகைக்குரிய நேரத்திலேயே சுத்தமாகி விட்டால் தொழுகையை அதற்குரிய நேரத்தில் அடைந்து கொள்வதற்காக விரைவாகக் குளிப்பது கட்டாயமாகும். விரைவாக என்றால் உடலின் எல்லாப் பகுதியையும் சுத்தப்படுத்தல் வேண்டும். அவள் பயணத்திலிருக்கும் போது அவளிடம் தண்ணீர் இல்லையென்றால் அல்லது அவளுடன் தண்ணீர் இருந்து அதைப் பயன்படுத்துவதால் இடையூறு ஏற்படுமென பயந்தால் அல்லது தண்ணீர் அவளுக்கு இடையூறளிக்கும் வியாதியுடையவளாக இருந்தால் தடை நீங்கும் வரை குளிப்பதற்குப் பகரமாக தயம்மும் செய்து கொள்ள வேண்டும். தடை நீங்கிய பின் குளித்துக்கொள்ள வேண்டும்.

*  தொடர் உதிரப்போக்கும்,அதன் சட்டங்களும்.

தொடர் உதிரப்போக்கு என்பது ஒரு பெண்ணுக்கு இரத்தம் ஒரு போதும் நிற்காமல் தொடர்ந்து வருவதாகும். அல்லது மாதத்தில் ஓரிரு நாட்கள் போன்ற குறைந்த கால அளவு அது நின்றுவிடுவதாகும். அவளின் வழக்கத்திற்கு மாறாக பதினைந்து நாட்களுக்கு மேல் வந்தால் அதற்கும் தொடர் உதிரப்போக்கு எனக் கூறப்படுகின்றது.
தொடர் உதிரப்போக்கு உடையவர்களுக்கு மூன்று நிலைகள் உள்ளன.
1- இவ்வுதிரப்போக்கு  வருமுன் அவளுக்கு இயர்கையாக  வந்துகொண்டிருந்த  மாதவிடாய்க் காலத்தைத் தெரிந்திருக்க வேண்டும். அக்காலம் வரும் போது  அவள் மாதவிடாய்க்காரிதான். அக்காலங்களில் அக்காலங்களில் அவளுக்கு மாதவிடாயினுடைய சட்டங்களே. மற்ற நேரங்களில் அவள் தொடர் உதிரப்போக்குடையவள்.
2- ஒரு பெண் முதன் முதலில் எப்போது இரத்தத்தைக் காண்கிறாளோ அப்போதிலிருந்தே அவளுக்கு தொடர் உதிரப்போக்குத்தான். இப்படிப்பட்ட பெண் மாதவிடாய் இரத்தம் எது?  தொடர் உதிரப்போக்கு எது?  என்பதைப் பிரித்தறிந்து செயல்பட்டுக்கொள்ள வேண்டும். மாதவிடாய் இரத்தமாக இருந்தால் அது கருப்பாக அல்லது கட்டியாக அல்லது வாடையுடையதாக இருக்கும். இதல்லாத தந்மையிலிருந்தால்  அது தொடர் உதிரப்போக்கு என விளங்கிக்கொள்ள வேண்டும்.
உதாரணமாக... ஒரு பெண் முதன் முதலில் இரத்தத்தைப் பார்க்கும் போது  அது தொடர்ந்து வருவதைக் காண்கின்றாள். ஆனால் மாத்தில் பத்து நாட்கள் கருப்பாகவும்,  மீதி நாட்களில் சிகப்பாகவும்,  அல்லது பத்து நாட்கள் கட்டியாகவும்,  மீதி நாட்கள் இலேசாகவும் காண்கிறாள் அல்லது பத்து நாட்கள் வாடையுடனும்,  மீதி நாட்களில் வாடையில்லாமலும் காண்கிறாள். இவ்வாறிருந்தால் அவளது மாதவிடாய் இரத்தம்  முந்திய உதாரணத்தில் கருப்பானதும்,  இரண்டாவது உதாரணத்தில் கட்டியானதும்,  மூன்றாவது உதாரணத்தில் வாடையுடையதாகவும் ஆகும். மற்றத் தன்மையிலுள்ளது தொடர் உதிரப் போக்காகும்.
3-  தொடர் உதிரப்போக்கு அவள் இரத்தத்தைப் பார்த்த ஆரம்ப காலத்திலேயே தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது.  மாதவிடாய் இரத்தம் எது?  தொடர் உதிரப்போக்கு எது?  எனப் பிரித்தறிந்து கொள்ளமுடியாத அளவுக்கு அவளின் இரத்தம் ஒரே தந்மையிலோ அல்லது குழப்பமான தந்மையிலோ இருந்தால் இப்படிப்பட்டவள் பெரும்பாலான பெண்களின் வழக்கத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்பட வேண்டும்.

 தொடர் உதிரப் போக்கின் சட்டங்கள்:- தொடர் உதிரப்போக்கின் சட்டம் சுத்தத்தின் சட்டத்தைப் போன்றுதான். தொடர் உதிரப்போக்குடைய பெண்களுக்கும், சுத்தமுடனுள்ள பெண்களுக்குமிடையே எந்த வித்தியாசமுமில்லை  இரண்டு விஷயங்களைத் தவிர.
1-  தொடர் உதிரப் போக்குடையவள் ஒவ்வொரு தொழுகைக்கும் வுளுச் செய்வது கட்டாயமாகும்.
2-  அவள் வுளுச் செய்ய விரும்பினால் இரத்தத்தின் அடையாளத்தைக் கழுவிக்கொள்ள வேண்டும். இரத்தம் நிற்பதற்காக ஒரு துண்டுத் துணியை மறைவிடத்தின் மீது கட்டிக்கொள்ள வேண்டும்.

*  பிரசவ இரத்தமும் ,அதன் சட்டங்களும்.

பிரசவ இரத்தம் என்பது குழந்தை பிறந்த காரணத்தால் கர்ப்பையிலிருந்து வெளியேறுகின்ற இரத்தமாகும். இது பிரசவித்தவுடன் வரும். அல்லது அதர்குப் பிறகும் அல்லது பிரசவத்துக்கு இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு முன்னால் பிரசவ வலியுடன் வரும். இந்த இரத்தம் எப்போது நின்று விடுகின்றதோ அப்போது அவள் சுத்தமாகி விடுகின்றாள். நாற்பது நாட்களை விட அதிகமாகி விட்டால் நாற்பதுக்குப் பின்னர் குளித்து விட வேண்டும்.  ஏனெனில் அதுதான் பிரசவ இரத்தத்துக்குரிய கூடுதலான காலஅளவாகும்.  இரத்தம் தொடர்ந்து வந்து கொண்டிருந்தாலும் சரியே. எனினும் நாற்பது நாட்களை விட அதிகமாக வருவது மாதவிடாய் இரத்தமாக இருந்தால் அதிலிருந்து சுத்தமாகும் வரை  மாதவிடாய்க்காரியாக இருந்து விட்டு பிறகு குளித்துக் கொள்ளவேண்டும்.
மனிதத் தோற்றம் தெளிவாகும் முறையில் முழுக் குழந்தையாக அவள் பெற்றெடுத்தால்தான் அது பிரசவ இரத்தமாகக் கருதப்படும். மனிதனின் தோற்றம் தெளிவாக இல்லாத சிறிய சதைக் கட்டியைப் பெற்றெடுத்தால் அந்த இரத்தம் பிரசவ இரத்தமல்ல. மாறாக அது நரம்புத் தளர்ச்சி இரத்தமாகும்.இவளின் சட்டம் தொடர் உதிரப்போக்குடையவளின் சட்டமாகும். பிரசவ இரத்தத்தின் மிகக் குறைந்த காலஅளவு எண்பது நாட்களாகும். அதிகபட்ச அளவு தொன்னூறு நாட்களாகும். பிரசவ இரத்தத்திற்குரிய சட்டங்கள்  முன்னால் மாதவிடாய்க்குரிய சட்டங்கள் போன்றதாகும்.

*  மாதவிடாயைத் தடுத்து நிறுத்தக்கூடியவை.

ஒரு பெண் இரு நிபந்தனைகளுடன் மாதவிடாயைத் தடுத்து நிறுத்தக்கூடிய வற்றைப் பயன்படுத்துவது கூடும்.
1- தனக்கு இடையூறு ஏற்படுமென பயப்படாமலிருக்க  வேண்டும். இடையூறைப் பயந்தால் கூடாது.
2- உடலுறவுக்கு இடைஞ்சலாக இருக்குமானால் கணவனிடம் அனுமதி பெற வேண்டும்.
ஃ  மாதவிடாய் வரவழைக்கக்கூடியவற்ற பயன்படுத்துவது இரு நிபந்தனைகளுடன் கூடும்.
1- கணவனின் அனுமதி.
2- கடமைகளை விட்டும் தப்புவதற்காக தந்திரமாக இல்லாமல் இருக்க வேண்டும். உதாரணமாக...... தொழுகை,நோன்பு, போன்றவற்றை விட்டுவிடுவதாக இதைப் பயன்படுத்துவது போல்  தந்திரம் இருக்கக்கூடாது.

*  கருத்தரித்தலைத் தடுப்பது.

இது இருவகைகளாகும்.
1-  நிரந்தரமாக தடை செய்வது. இது கூடாததாகும்.
2-  குறிப்பிட்ட காலம் வரை தற்காலிகமாகத் தடை செய்வது. ஒரு பெண் அடிக்கடி கர்ப்பமாகக்கூடியவளாக இருந்து அது அவளுக்கு சிறமமாக இருந்தால்  இரண்டான்டுக்கு ஒரு முறை அல்லது  அதுபோல ஒரு குறிப்பிட்ட காலத்திலோ கர்ப்பமாவதை விருப்புகின்றாள் என்றால் இது கூடும். இதற்கு தனது கணவனின் அனுமதியும்,  அதனால் அவளுக்கு இடையூறில்லாமலிருப்பதும்  நிபந்தனையாகும்.


3-  பர்தா.

நிச்சயமாக இஸ்லாம் , குடும்பம் வீழ்ந்து சின்னா பின்னப்பட்டுப் போகாமல் அதைப் பாதுகாப்பதில் அக்கறை கொண்டுள்ளது. இதனால் அதைச் சுற்றி ஒழுங்குகள் மற்றும் நற்குணங்களான உறுதிவாய்ந்த வேலியை எழுப்பியுள்ளது. காரணம் மனிதர்கள் நிம்மதியாகவும், சமுதாயம் தூய்மையாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக. அச்சமுதாயத்தில் காம உணர்வு தூண்டப்பட முடியாது.  காமம் கிளறப்பட முடியாது. இயற்கைச் சூழ்நிலையை கேடுபடுத்திட முடியாது. இன்னும் நிச்சயமாக இஸ்லாம் குழப்பத்தின் பால் இட்டுச்செல்லக் கூடியவற்றைத் தடுப்பதற்காக திரைகளை ஏற்படுத்தியுள்ளது. ஆண்,பெண் இருபாலாரும் தம் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளும்படியும் ஏவியுள்ளது.

அறியாமைக் கால மக்கள் நெறிமுறையோ ஒழுக்கமோ இன்றி மனம் போன போக்கில் வாழ்ந்து வந்தனர். பெண்கள் ஆடவரை ஈர்த்து நிற்க்கும் கவர்ச்சிகரமான ஆடை ஆபரணங்களை அணிந்து நறுமணம் பூசி தெருக்களிலும். கடை வீதிகளிலும் பவனி வந்தனர். இதனால் பல்வேறு விபரீதங்கள் ஏற்பட்டு அவர்களின் கற்பு சூறையாடப்பட்டன. அவர்கள் அவமானப்படுத்தப்பட்டு சமுதாயத்தின் அடிமட்டத்திற்கு தள்ளப்பட்டனர்.
இவர்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளித்து சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்த்தை அளித்து கௌரவமாக நடத்தப்பட வேண்டுமென்பதற்காக இஸ்லாம் பல நடவடிக்கைகளை மனித சமூகத்துக்குக் காட்டியுள்ளது.


‘நீங்கள் உங்கள் இல்லங்களிலேயே (அடக்கத்துடன்) இருங்கள். முன் வாழ்ந்த அறியாமை கால மக்கள் (தங்களின் அலங்காரங்களை வெளியில்) காட்டி வந்ததைப் போல் உங்களின் வனப்பை வெளிக்காட்டிக் கொண்டு) திரியாதீர்கள்’( 33:33)
இந்த உத்திரவின் மூலம், ‘அவசியத் தேவையின்றி வீட்டை விட்டு வெளியேறாதீர்கள்’ என்று கூறியது.


பர்தா உடை எப்படி அமைய வேண்டும்.

1. பர்தா (ஹிஜாப்) உடை பெண்களின் முகம், முன் கைகள் தவிர உடலின் ஏனைய பகுதி முழுவதையும் மறைத்திருக்க வேண்டும்.
2. அணியும் ஆடை அடர்த்தியானதாக அமைய வேண்டும், உடலின் வனப்பை வெளிக்காட்டும் மெல்லிய ஆடையாக அமைதல் கூடாது.
3. ஆடை உடலின் வடிவையும் அங்கங்களையும் அளந்து காட்டும்படி இறுக்கமான ஆடையாக இல்லாமல் தொள தொளப்பாக இருக்க வேண்டும்.
4. பிறரை ஈர்த்து நிற்கும் வசீகரமான ஆடையாக அமைதல் கூடாது.
5. பெண் அணியும் ஆடை ஆண்கள் அணியும் ஆடையைப் போல் இருத்தல் கூடாது.


‘ஆண்கள் பெண்களைப் போலவும், பெண்கள் ஆண்களைப் போலவும் ஆடை அணிவதை நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் சபித்துள்ளார்கள்.’
அறிவிப்பவர்..அபூஹுரைரா(ரலி)

இஸ்லாமியப் பெண்கள் பர்தா அணியும்போது ஷரீஅத் கூறும் இந்த விதிகளை கவனத்திற் கொள்ள வேண்டும்.

நீங்கள் அல்லாஹ்வை அஞ்சி வாழ்பவராக இருப்பின் அந்நிய ஆடவர்களுடன் பேசநேர்ந்தால் நளினமாகப் பேசாதீர்கள். எவருடைய உள்ளத்தில் (தீய) நோய் இருக்கிறதோ, அவாக்ள தவறான விருப்பங்களை கொள்ளக்;கூடும். எனவே நீங்கள் (எதைப் பேசிய போதினும்) நேர்மையாக (உடனே) பேசி (முடித்து அனுப்பி) விடுங்கள்.
( 33:34)


இன்று எங்கே சென்றாலும், பெண்களின் கூட்டத்தையே காணமுடிகிறது. வீதிகளிலும், ஊர்திகளிலும், கடைகளிலும், பொது இடங்களிலும் பெண்களின் குரலோசைகளையும் சிரிப்பொலிகளையும் ஆர்பாட்டங்களையுமே பார்க்க முடிகிறது. பக்தியோடும், நாணத்தோடும், மரியாதையோடும் அமைதியாக செல்ல வேண்டிய பெண்கள், ஆர்ப்பாட்டங்களோடு வலம் வருவதைக் காணக்கூடியதாக உள்ளது.

ஒரு பெண் அந்நியருடன் தனித்திருப்பதை ஹராமாக்கியிருப்பது குடும்பத்தையும், பண்பாட்டையும் பாதுகாப்பதற்கு இஸ்லாம் அமைத்துள்ள சிறந்த வழியாகும். நபி(ஸ)ல்அவர்கள் ஒரு பெண் தன்னுடைய கணவன் அல்லது அவள் மணமுடிக்க விளக்கப்பட்டவன் இல்லாத போது அந்நிய ஆணுடன் தநித்திருப்பதைக் கடுமையாக எச்சித்துள்ளார்கள். ஏனெனில் நிச்சயமாக ஷைத்தான் உள்ளங்களையும், குணங்களையும் கெடுப்பதற்கு மிகவும் பேராசை உள்ளவனாக இருக்கின்றான்,.

எனவே மேலே சொல்லப்பட்ட இஸ்லாமிய பெண்கள் என்ற தலைப்பில் முடிந்த அளவு இது வரை முடிவுக்கு கொண்டு வந்துளேன் ..இதன் சட்டங்கள் பேணப்பட வேண்டும் என்ற ஒரே நோக்குடன் இந்த பகுதியை இந்த இடத்தில் தரிசனம் செய்கின்றேன் ..அல்லாஹ்வுக்கும்,அவன் தூதருக்கும் கட்டுப்பட்டு நன்நடத்தையுள்ள பெண்மணிகளாக வாழ்வதற்கு அல்லாஹ் நல்லருள் புரிவானாக. ஆமீன் ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்..

வஸ்ஸலாம்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அஹமட் யஹ்யா,
ஹொரோவபதான.
அனுராதபுரம்.
SRI LANKA.

******************************************************
 

வேண்டாம் பேராசை

 
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ.
அல்லாஹ்வின் திருப்பெயர் கொண்டு ஆரம்பம் செய்கின்றேன்.
இஸ்லாமிய சகோதர,சகோதரிகளே.
 

சொல்லிலும்,செயலிலும் இஸ்லாத்தைக் கலப்போம்.
சமூக உறவில் சகோதரத்துவத்தை வளர்ப்போம்.


”யார் தனக்கேற்பட்ட வறுமையை மக்களிடம் கொண்டு செல்கிறாரோ அவரது வறுமை நீங்கி விடுவதில்லை. எவர் அதை அல்லாஹ்விடம் கொண்டு செல்கிறாரோ உடனடியாகவோ, சிறிது காலம் கழித்தோ அவருக்கு அல்லாஹ் செல்வத்தை வழங்கக் கூடும்”
என நபி(ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர். இப்னு மஸ்வூது(ரலி)
நூல்.அபூதாவூத், திர்மிதீ

ஆதமுடைய மகன் ”என்னுடையது என்னுடையது” என்கிறான் ஆதமுடைய மகனே! நீங்கள் உண்டு கழித்ததையும் உடுத்திக் கிழித்ததையும் பிறருக்குக் கொடுத்ததையும் தவிர வேறு எது உன்னுடையது?
என்று நபி(ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்.அப்துல்லாஹ் இப்னுஷ்ஷிக்கிர்(ரலி),
நூல்.முஸ்லிம்


"செல்வத்தைப் பெருக்கும் ஆசை உங்களை (அல்லாஹ்வை விட்டும்) பராக்காக்கி விட்டது"(அல்குர்ஆன்.102:1)

"அவ்வாறல்ல - மெய்யான அறிவைக் கொண்டறிந்திருப்பீர்களானால் (அந்த ஆசை உங்களைப் பராக்காக்காது)".(அல்குர்ஆன்.10
2:5)

ஆதமின் மகனுக்கு (மனிதனுக்கு)த் தங்கத்தாலான ஒரு நீரோடை இருந்தால் தனக்கு இரண்டு நீரோடைகள் இருக்க வேண்டுமென்று அவன் ஆசைப்படுவான். அவனுடைய வாயை மண்ணை (-மரணத்தை)த் தவிர வேறேதுவும் நிரப்பாது. மேலும், (இது போன்ற பேராசையிலிருந்து) திருந்தி பாவமன்னிப்புக் கோரி மீண்டு விட்டவரின் கோரிக்கையை அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்.அனஸ் இப்னு மாலிக் (ரலி)
நூல்.புஹாரி: 6439

பசியுள்ள இரண்டு ஓநாய்களை ஆட்டு மந்தையில் விட்டுவிடின் அவை எத்தணை குழப்பத்தை உண்டுபண்ணி விடுமோ,அத்துணை குழப்பத்தை ஒரு மனிதனுடைய பொருளாசையும் பதவி மோகமும் அவனுடைய மார்க்கத்தில் உண்டுபண்ணிவிடும் என்று நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: கஃபுப்னு மாலிக் (ரலி) நூல்:திர்மிதீ

ஒருவருக்கு அல்லாஹ் வழங்கிய செல்வத்தை அவர் நல்ல வழியில் செலவு செய்தல்; இன்னொருவருக்கு அல்லாஹ் அறிவு ஞானத்தை வழங்கி, அதற்கேற்ப அவர் தீர்ப்பு வழங்குபவராகவும் கற்றுக் கொடுப்பவராகவும் இருப்பது ஆகிய இரண்டு விஷயங்களைத் தவிர வேறு எதிலும் பேராசை கொள்ளக் கூடாது'

நேர்மையான வகையில் மனிதன் ஒரு பொருளைப் பெற நினைத்தால், அதை "ஆசை' எனக் கூறலாம். அப்பொருள் அவனுக்குக் கிடைக்காவிடில், அதற்காக அவன் கவலை கொள்ளலாகாது. ஒருவன் ஆசைப்பட்ட பொருள் கிடைத்துவிட்டாலோ, அதற்காக தற்பெருமையோ, கர்வமோ அடையாது இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டியது ஒவ்வொரு மனிதனின் கடமையுமாகும்.


நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பார்த்து, நபித் தோழராகிய வியாபாரி ஒருவர், நாயகமே! இன்று நடந்த எனது வியாபாரத்தில் கிடைத்த லாபம் போல் வேறு எவருக்கும் கிடைக்கவில்லை'' என்று மிக்க பெருமிதத்துடன் கூறினார்.
அப்படியா! உங்களுக்கு சுமார் எவ்வளவு லாபம் கிடைத்தது. எனக் கேட்டார்கள், நபித் தோழர், முன்னூறு வெள்ளிக்காசுகள்' என்றார்.
உடனே நபி(ஸல்)அவர்கள், இதைவிட அதிக லாபம் தரும் ஒன்றினை நான் உங்களுக்கு சொல்லித் தரட்டுமா? எனக் கூறி,மேலும் ஒரு அறிவுரையை அவரிடம் கூறினார்கள்.
"பர்லு (கட்டாய) தொழுகை தொழுத பின் 2 ரக்அத் (தொழாத நிலையில் நின்று ஓதி, குனிந்து இருமுறை நெற்றியை தரையில் படும்படி வணங்குதல்) தொழுதபின் நஃபில் (கடமையாக வணங்குதளைக் காட்டிலும் அதிகமாக வணங்குவது) தொடர்ந்து தொழுது வாருங்கள்'' என நபிகளார் கூறினார்கள்.


உலகத்தின் இலாபம் (பொருள்) ஒரு மனிதனின் உள்ளத்தில் பதிந்து, முதலில் ஆசை ஏற்பட்டு, பிறகு அது பேராசையாக உருமாறி விடக் கூடாது என்பதற்காகவும், மறுமை வாழ்வை மறந்து இம்மை வாழ் வில் (உலக இன்பத்தில்) மூழ்கி விடாது மறுமைக்கான தயாரிப்பில் ஈடுபட வேண்டும் என்பதற்காகவும் நபித் தோழரின் எண்ணத்தை - ஆசையை திசை திருப்பிவிட்டார்கள் நபிகளார்.

"உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்." (அல்குர்ஆன் 67:2)
"ஈமான் கொண்டவர்களே! உங்கள் செல்வமும், உங்களுடைய மக்களும், அல்லாஹ்வின் நினைப்பை விட்டும் உங்களைப் பராமுகமாக்கிவிட வேண்டாம் எவர் இவ்வாறு செய்கிறாரோ நிச்சயமாக அவர்கள்தாம் நஷ்டமடைந்தவர்கள்." (அல்குர்ஆன் 63:9)


இவ்வளவு தெளிவாகச் சொல்லப்பட்டும் ஷைத்தான் மனிதனுக்கு பொருள் செல்வத்திலும் மக்கள் செல்வத்திலும் மயக்கத்தைக் கொடுத்து அவனை வழி தவறச் செல்கிறான். ஆனால் இந்த பொருட்செல்வமும் மக்கள் செல்வமும் மறுமையில் உதவிடப்போவதில்லை . உறுதியாக அல்லாஹ் எச்சரிக்கிறான்.

”அந்நாளில் செல்வமும், பிள்ளைகளும் (யாதொரு) பயனுமளிக்க மாட்டா. “(அல்குர்ஆன் 63:9)

மேலே கூறப்பட்ட 5 குர்ஆன் வசங்களும்,5 நபியவர்களின் பொன் மொழிகளும் இந்த இடத்தில், இந்த வினாடியில் நமக்குப் போதிக்கும் பொன்னான போதனைகள் தான் மனிதன் கோலமாக் கோலம் என்று தனக்கு இறக்கை இருக்கக்கூடாதா? நானும் வானம் வரை பறக்க வேண்டுமே! என்று தன்னையும்,தன் வாழ்க்கையையும் காலம் , நேரம் ஓய்வில்லாமல் கழித்துக் கொண்டிருக்கிறான் பேரசையில்.. இதுதான் மேலே சொல்லப்பட்ட அல்குர்ஆன்,அல் ஹதீஸின் விளக்கங்கள்.

இதுவே போதுமானது!!!!!!!!!!!! யாரெல்லாம் இந்த நபிமொழியையும்,அல்குர்ஆன் வசனத்தையும் கண்டும் காணாமலும் நமெக்கென்ன!!!!!!! அது இருக்கட்டும். நான் நான்தான் என்று போதனையை உள்ளத்தில் உணர்த்தவில்லை என்றால். அதுவும் பேராசை தான்.

எல்லாம் வல்ல அல்லாஹ் சத்தியத்தைத் தெளிவாக எடுத்துக் கூறும் சத்தியப் போதகர்களாகவும் அவ்வழியில் ஏற்படும் இன்னல்களைச் சகித்துக் கொள்ளும் உண்மைப் போராளிகளாகவும் எம்மையும் உங்களையும் ஆக்கி அருள் புரிவானாக.
<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
அஹமட் யஹ்யா, ஹொரோவபதான,  அனுராதபுரம்.SRI LANKA.
<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>