Powered By Blogger

Monday, December 24, 2012

அல்குர்னின் சில சூராக்கல்

           
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ.
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனும் அல்லாஹ்வின் திருநாமம் போற்றி துவங்குகின்றேன்...அல்ஹம்துலில்லாஹ்.

அல்லாஹ் மனிதனைப் படைத்து அவன், தான் விரும்புவது போல் வாழ்ந்துக் கொள்ள விட்டுவிடாமல் வாழ்க்கை நெறியை வேதங்களின் மூலமும் தூதர்களின் மூலமும் வகுத்துக் கொடுத்தான். இந்த அடிப்படையில் மனித சமுதாயத்திற்கு இறுதி வேதமாக அல்குர்ஆனையும் இறுதித் தூதராக முஹம்மது(ஸல்) அவர்களையும் அனுப்பியுள்ளான். எனவே நமது வாழ்க்கையை மன இச்சைப்படி அமைத்துக் கொள்ளாமல் அல்குர்ஆனும் நபிமொழியும் காட்டித்தரும் நெறியிலேயே அமைத்துக் கொள்ள வேண்டும். இதுவே முஸ்லிமின் உயரிய பண்பும் குர்ஆன் மற்றும் ஹதீஸின் எதிர்பார்ப்புமாகும். மார்க்கத்தின் இவ்விரு அங்கங்களில் முதலிடம் பெறுவது அல்குர்ஆன் ஆகும்.

அல்குர்ஆனுடன் இரண்டு விதமான தொடர்புகளை ஏற்படுத்துவது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கட்டாயக் கடமையாகும்.

1. திருக்குர்ஆனை பொருளறிந்து படிப்பது. அதன் கட்டளைகளைப் புரிந்து அதன் அடிப்படையில் வாழ்க்கையை அமைத்துக் கொள்வது.

2. அல்குர்ஆனை அதிகமாக ஓதி அளவற்ற நன்மையைப் பெற்றுக் கொள்வது.
           



                       அத்தியாயம்.1
                    அல் ஃபாத்திஹா. 
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையவனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் ஆரம்பம் செய்கிறேன்.

அகிலத்தாரைப் படைத்துப் பரிபாலிக்கும் அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். (1:1)

(அவன்) அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையவன். (1:2)

தீர்ப்பு நாளின் அதிபதி(யும் அவனே.!) (1:3)

(அல்லாஹ்வே!) நாம் உன்னையே வணங்குகின்றோம், உன்னிடமே உதவியும் தேடுகின்றோம். (1:4)

நீ எங்களை நேரான வழியில் செலுத்துவாயாக.! (1:5)

(அது) நீ யார் மீது அருள் புரிந்தாயோ  அவர்களின் வழி. (அது உன்) கோபத்துக்குள்ளானவர்களினதோ, வழிதவறியவர்களினதோ வழியுமல்ல.  (1:6,7)   
                                  





                     அத்தியாயம். 103
              சூரத்துல் அஸ்ர். காலம்.

                        
 அளவற்ற அருளாளனும்,நிகரற்ற அன்புடையவனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் ஆரம்பிக்கிறேன்.
  
காலத்தின் மீது  சத்தியமாக. (103:1)

நிச்சயமாக மனிதன் நஷ்டத்திலே இருக்கிறான். (103:2)

(எனினும்) எவர்கள் நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் புரிந்து, சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசித்து ,இன்னும் பொறுமையைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசித்தும் கொண்டிருந்தார்களோ அவர்களைத் தவிர. (103:4)


                              

                       அத்தியாயம்.104
         அல்ஹூமஸா. புறம் பேசுதல்.

                                     
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையவனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் ஆரம்பம் செய்கிறேன்.

குறை கூறி, புறம் பேசித் திரியும் ஒவ்வொருவருக்கும் கேடுதான். (104:1)

அவன் செல்வத்தைத் திரட்டி, அதைக் கணக்கிட்டுக் கொண்டிருக்கிறான். (104:2)

நிச்சயமாக தனது செல்வம் தன்னை நிலைத்திருக்கச் செய்யும் என அவன் எண்ணிக்கொன்டிருக்கிறான். (104:3)

வ்வாறன்று, நிச்சயமாக அவன் "ஹூதமா" வில் வீசப்படுவான். (104:4)

"ஹூதமா" என்றால் என்னவென உமக்கு அறிவித்தது எது.? (104:5)

(அது) உள்ளங்களைச் சென்றடையும் மூட்டப்பட்ட அல்லாஹ்வின் நெருப்பாகும். (104:6-7)

நீண்ட கம்பங்களில் (அவர்கள் கட்டப்பட்டிருக்க) நிச்சயமாக அது அவர்கள் மீது (நாலாதிசைகளிலும்) மூட்டப்பட்டிருக்கும். (104:8-9)
      
                    

                   அத்தியாயம். 105
                  அல்பீல். யானை.                         
 
 அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையவனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் ஆரம்பம் செய்கிறேன்.

யானைப் படையினரை உமது இரட்சகன் எப்படி (அழிய)ச் செய்தான் என்பதை (நபியே!) நீர் அறியவில்லையா? (105:1)

அவர்களின் சூழ்ச்சியை அவன் வீணாக்கிவிட வில்லையா? (105:2)

அவர்கள் மீது பறவைகளைக் கூட்டம் கூட்டமாக அவன் அனுப்பினான். (105:3)

சூடேற்றப்பட்ட கற்களை அவை அவர்கள் மீது எறிந்தன. (105:4)

அதனால் மெல்லப்பட்ட வைக்கோலைப் போன்று அவன் அவர்களை ஆக்கிவிட்டான். (105:5)

                     

                   அத்தியாயம்.106
         அல்குறைஷ். குறைஷிகள். 

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையவனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் ஆரம்பம் செய்கிறேன்.

குறைஷிகளுக்கு விருப்பத்தை உண்டாக்கியதற்காக. (106:1)

மாரி கால, கோடை காலப் பயணத்தில் விருப்பத்தை அவர்களுக்கு உண்டாக்கியதற்காக (106:2)

இந்த வீட்டின் இரட்சகனை அவர்கள் வணங்கட்டும். (106:3)

அவனே அவர்களுக்குப் பசியின் போது உணவளித்தான். இன்னும் அச்சத்தின் போது அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கினான். (106:4)

                
                 
                    அத்தியாயம்.107
      அல்மாஊன். அற்பப்பொருள்.  

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையவனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் ஆரம்பம் செய்கிறேன்.

தீர்ப்பு நாளைப் பொய்ப்பித்தவனை (நபியே!) நீர் பார்த்தீரா? (107:1)

அவன்தான் அநாதையை விரட்டுகிறான். (107:2)

அவன் ஏழைகளுக்கு உணவளிக்க (மற்றவர்களை)த் தூண்டவும் மாட்டான். (107:3)

 இன்னும், (கவனமற்ற) தொழுகையாளிகளுக்குக் கேடுதான். (107:4)
அவர்கள் எத்தகையோர் என்றால் தம் தொழுகையில் பராமுகமாக(வும், அசிரத்தையாக)வும் இருப்போர். (107:5)

அவர்கள் பிறருக்குக் காண்பிக்(கவே தான் தொழு)கிறார்கள். (107:6)

மேலும், அற்பமான (புழங்கும்) பொருள்களைக் (கொடுப்பதை விட்டும்) தடுக்கிறார்கள். (107:7)


                     அத்தியாயம்.108
          அல்கவ்ஸர். நீர்த்தடாகம்.
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையவனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் ஆரம்பம் செய்கிறேன்.
 (நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு "கவ்ஸர்" எனும் நீர்த்தடாகத்தை வழங்கினோம். (108:1)
எனவே உமது இரட்ச்சகனுக்காகத் தொழுது,(அவனுக்காகவே) அறுத்துப் பலியிடுவீராக. (108:2)
நிச்சயமாக, உம்மைக் கோபமூட்டியவனே சந்ததியற்றவன்.  (108:3)
 
 
                     அத்தியாயம்.109
   அல்காபிரூன். நிராகரிப்பாளர்கள்.  
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையவனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் ஆரம்பம் செய்கிறேன்.
(நபியே!) நீர் கூறுவீராக! நிராகரிப்பாளர்களே! (109:1)
நீங்கள் வணங்குபவற்ற நான் வணங்கமாட்டேன். (109:2)
மேலும் நான் வணங்குபவனை நீங்கள் வணங்குபவர்களுமல்லர். (109:3)
நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்கமாட்டேன். (109:4)
இன்னும் நான் வணங்குபவனை நீங்கள் வணங்குபவர்களுமல்லர். (109:5)
உங்களுக்கு உங்கள் மார்க்கம், எனக்கு எனது மார்க்கம்.  (109:6)
 
 
                   அத்தியாயம்.110
                 அந்நஸ்ர். உதவி.  
 
 அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையவனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் ஆரம்பம் செய்கிறேன்.
அல்லாஹ்வின் உதவியும்,வெற்றியும் வரும் போது. (110:1)
இன்னும் மனிதர்கள் அல்லாஹ்வின் மார்க்கத்தில் கூட்டம் கூட்டமாக நுழைவதை (நபியே!) நீர் காணும் போது. (110:2)
உமது இரட்சகனின் புகழைத் துதித்து அவனிடம் நீர் பாவமன்னிப்புக் கோருவீராக! நிச்சயமாக அவன் மன்னிப்புக் கோருவதை அதிகம் ஏற்றுக்கொள்பவனாக இருக்கிறான்.  (110:3)


                      அத்தியாயம்.111
             அல்லஹப். தீச்சுவாலை. 
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையவனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் ஆரம்பம் செய்கிறேன்.
அபூலஹபின் இரு கைகளும் நாசமாகட்டும்.! மேலும் அவனும் நாசமாகட்டும்.! (111:1)
அவனது செல்வமோ,அவன் சம்பாதித்தவையோ அவனுக்கு எந்தப் பயனையும் அளிக்கவில்லை. (111:2)
தீச்சுவாலையுடைய நரகத்தில் அவனும்,விறகு சுமக்கும் அவனது மனைவியும் நுழைவார்கள். (111:3-4)
அவனது கழுத்தில் முறுக்கேறிய ஈச்சம் கயிறு இருக்கும். (111:5)

 
 
                   அத்தியாயம்.112
    அல்இஹ்லாஸ். உளத்தூய்மை.  
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையவனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் ஆரம்பம் செய்கிறேன்.
அல்லாஹ் ஒருவன்தான் என (நபியே!) நீர் கூறுவீராக.! (112:1)
அல்லாஹ் (எவ்விதத்) தேவையுமற்றவன். (112:2)
அவன் (எவரையும்) பெறவுமில்லை.அவன் (எவருக்கும்) பிறக்கவுமில்லை. (112:3)
மேலும் அவனுக்கு நிகராக எவருமில்லை. (112:4)

 
 
                     அத்தியாயம்.113
              அல்பலக். அதிகாலை.   
 அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையவனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் ஆரம்பம் செய்கிறேன்.
அதிகாலையின் இரட்சகனிடம் அவன் படைத்தவற்றின் தீங்கை விட்டும் நான் பாதுகாப்புத் தேடுகிறேன் என (நபியே!) நீர் கூறுவீராக.! (113:1-2)
மேலும் இருள் படரும் போது ஏற்படும் இரவின் தீங்கை விட்டும்.  (113:3)
இன்னும் முடிச்சுக்களில் ஊதும் பெண்களின் தீங்கை விட்டும். (113:4)
இன்னும் பொறாமைக்காரன் பொறாமைப்படும் போது ஏற்படும் தீங்கை விட்டும் (நான் பாதுகாப்புத் தேடுகிறேன் என நபியே! நீர் கூறுவீராக.!) (113:5)
 
 
                     அத்தியாயம்.114
               அந்நாஸ். மனிதர்கள்.
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையவனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் ஆரம்பம் செய்கிறேன்.
மனிதர்களின் இரட்சகனும்,மனிதர்களின் அரசனும், மனிதர்களின் வணக்கத்திற்குரியவனாக இருப்பவனிடம், மறைந்திருந்து தீய எண்ணங்களை ஏற்படுத்துபவனின் தீங்கை விட்டும் நான் பாதுகாவல் தேடுகிறேன் என (நபியே!) நீர் கூறுவீராக.! (114:1,2,3,4)
அவன் மனிதர்களின் உள்ளங்களில் சந்தேகங்களை உண்டுபண்ணுகின்றான். (114:5)
(இத்தகையோர்) ஜின்களிலும்,மனிதர்களிலும் உள்ளனர். (114:6) 
   
 
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்;
“எவரேனும் அல்-குர்ஆனின் ஓர் எழுத்தை ஓதினால் அவருக்கு பத்து நன்மைகள் எழுதப்படும். ஒரு நன்மை பத்து மடங்காக இருக்கும். அலிப், லாம், மீம் என்பது ஓர் எழுத்து, என்று நான் கூறமாட்டேன். மாறாக அவை மூன்றும் மூன்று எழுத்துக்களாகும்.”
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (றழி),
ஆதாரம் : திர்மிதி

நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்,
“எவருடைய உள்ளத்தில் அல்-குர்ஆனின் ஒரு சிறிய பகுதியாவது இல்லையோ, அவரது உள்ளம் பாழடைந்த வீட்டைப் போன்றதாகும்.
அறிபிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (றழி),
ஆதாரம் : திர்மிதி

“ஜஹ்பர்” மற்றும் ‘அப்வா’ ஆகிய இரு இடங்களுக்கிடையில் நான் நபியவர்களுடன் நடந்து போய்க் கொண்டிருந்தேன். அப்போது திடீரென பலத்த காற்று வீசத்தொடங்கியது. கும்மிருட்டும் எம்மைச் சூழ்ந்து கொண்டது. அவ்வேளை நபியவர்கள் சூறதுல்பலக், சூறதுந்நாஸ் ஆகிய இரு சூறாக்களையும் ஓதலானார்கள். பிறகு என்னைப்பார்த்து, “உக்பாவே! இந்த இரண்டு சூறாக்களையும் கொண்டு நீ பாதுகாப்புத் தேடிக்கொள். பாதுகாப்புத் தேடுபவர்களுக்கு இவ்விரண்டையும் தவிர வேறெதுவும் தேவையில்லை..”
அறிவிப்பவர்: உக்பாபின் ஆமிர் (றழி)
ஆதாரம்: அபூதாவூத்

எல்லாம் வல்ல அல்லாஹ் சத்தியத்தைத் தெளிவாக எடுத்துக் கூறும் சத்தியப் போதகர்களாகவும் அவ்வழியில் ஏற்படும் இன்னல்களைச் சகித்துக் கொள்ளும் உண்மைப் போராளிகளாகவும் எம்மையும் உங்களையும் ஆக்கி அருள் புரிவானாக.

அஹமட் யஹ்யா,
ஹொரோவபதான,
அனுராதபுரம்.
SRI LANKA.