Powered By Blogger

Tuesday, December 25, 2012

அல்குர்ஆனில் கூறப்பட்ட இடங்கள்.




அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ.
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயர் கொண்டு ஆரம்பம் செய்கின்கின்றேன். அல்ஹம்துலில்லாஹ்.

அல்லாஹ் இவ்வுலகைப் படைத்து அதில் பல கோடிப் படைப்பினங்களைப் படைத்து, இப்படைப்பினங்களில் சிலதை சிலதுக்குப் படிப்பினையாகவும், பல அத்தாட்சிகளாகவும் அமைத்திருக்கிறான். மனிதன் இதன் மூலம் நல்லுணர்வு பெற வேண்டும், கண்ணியங்கள் கொடுக்கப்பட வேண்டும், நினைவூட்டப்பட வேண்டும், என்பதற்காக அல்லாஹ் அல்குர்ஆனில் பிறப்பு முதல் இறப்புவரைக்கும் அனைத்தையும் மனிதனுக்கு காட்டியிருக்கிறான். அதிலே அல்குர்ஆனில் கூறப்பட்ட இடங்கள் என்ற தலைப்பை இவ்விடம் தரிசனம் செய்கின்றேன்.  அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருள் புரிவானாக. என்றும் தக்வாவைக் கொண்டும் நல்லுபதேசம் செய்கின்றேன்.. ஆமீன்.

அல்குர்ஆனில் கூறப்பட்ட இடங்களின் சில.:-

1- உம்முல் குரா.
கிராமங்களின் தாய் என்பது இதன் பொருள். இது மக்காவைக் குறிக்க அல்குர்ஆனில் பயன்படுத்தப்பட்டுள்ளது. மக்காவுக்கு  பக்கா, அல்பலதுல்அமீன் ,(அபயமளிக்கும் நகரம்)  இது போன்ற பல பெயர்கள் உண்டு.
அல்லாஹ் அல்குர்ஆனில் கூறுகின்றான்.
"உம்முல் குரா (எனும் நகரங்களின் தாயாகிய மக்கா)வையும் அதைச் சூழ உள்ளவர்களையும் நீர் எச்சரிக்கை செய்வதற்காக நாம் இறக்கிய இவ்வேதம், அருள் பொதிந்தது. தனக்கு முன்னுள்ளவற்றை உண்மைப்படுத்துவதாகவும் இருக்கின்றது. எவர்கள் மறுமையை நம்பிக்கை கொள்கின்றார்களோ,அவர்கள் இதையும் நம்பிக்கை கொள்வார்கள், மேலும் அவர்கள் தமது தொழுகையிலும் பேணுதலாக இருப்பார்கள்". (6:92)

2- கஃபா.
மக்காவில் உள்ள புனித அல்மஸ்ஜிதுல் ஹராம் என்ற மஸ்ஜிதின் மையப் பகுதியில் அமையப்பெற்ற சதுரவடிவமான கட்டிடத்துக்கே கஃபா என்று அழைக்கப்படுகிறது. இதுவே அல்லாஹ்வை வணங்குவதற்காக முதன் முதலாக அமைக்கப்பட்ட வீடாகும்.  இதனை முதல் மனிதர் ஆதம்(அலை)அவர்கள் கட்டினார்கள். பின்னர் வரலாற்றுக் காலத்தில் இப்றாஹீம்(அலை), இஸ்மாயில்(அலை), ஆகிய நபிமார்கள் புணர்நிர்மாணம் செய்தார்கள். "அல் பைத்துல் அதீக்" புரான இல்லம் என்ற பெயராலும் இது அழைக்கப்படுகிறது. உலக முஸ்லிம்கள் அனைவரும் தொழுகையின் போது இதனையே முன்னோக்கித் தொழ வேண்டும், இந்த வகையில் முஸ்லிம்களின் "கிப்லா" என்றும்  கூறப்படும்.
அல்லாஹ் அல்குர்ஆனில் கூறுகின்றான்.
"(கஃபா எனும்) இவ்வீட்டை மக்கள் ஒன்றுகூடுவதற்காகவும், அபயமளிக்கும் இடமாகவும் ஆக்கியதை (எண்ணிப்பாருங்கள்.) நீங்கள் மகாமு இப்றாஹீமைத் தொழும் இடமாக எடுத்துக் கொள்ளுங்கள். எனது வீட்டை தவாப் செய்வோருக்காகவும், தங்கியிருப்போருக்காகவும்,ருகூஉ,சுஜூது  செய்பவர்களுக்காகவும் நீங்கள் இருவரும் தூய்மைப்படுத்துங்கள் என்று இப்றாஹீமுக்கும்,இஸ்மாயிலுக்கும் நாம் கட்டளையிட்டோம்."  (2:125)

"இப்றாஹீமும்,இஸ்மாயிலும் இந்த வீட்டின் அடித்தளங்களை உயர்த்திய போது எங்கள் இரட்சகனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக்கொள்வாயாக!  நிச்சயமாக நீயே செவியுறுபவனும், நன்கறிந்தவனுமாவாய். (என்று பிராத்தித்தனர்.)"  (2:127)

3- அல் பைத்துல் அதீக்.
புரான வீடு என்பது இதன் அர்த்தமாகும். உலகில் நிறுவப்பட்ட முதல் மஸ்ஜித் என்பதால்  கஃபாவுக்கு இப்பெயர் பயன்படுத்தப்படுகின்றது.
அல்லாஹ் அல்குர்ஆனில் கூறுகின்றான்.
"பின்னர் அவர்கள் தமது அழுக்குகளை அகற்றி , தமது நேர்ச்சைகளை நிறைவேற்றி பூர்வீக (புனித) வீட்டை தவாபும் செய்யட்டும்." (22:29)

"(குர்பானிக்கான கால்நடைகளாகிய) அவற்றில் குறிப்பிட்ட காலம் வரை உங்களுக்குப் பயன்கள் உள்ளன. பின்னர் அவை செல்லவேண்டிய இடம் பூர்வீக (புனித) வீடாகும்." (22:33)

4- பத்ர்.
மதீனாவுக்குத் தெற்காக சுமார் 150 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ஓர் இடத்தின் பெயரே பத்ராகும். இஸ்லாமிய வரலாற்றில் இடம்பெற்ற முதல் போரும், மிக முக்கியமான போர் பத்ர யுத்தம்  ஹி.2ல் இங்குதான் நடைபெற்றது. சுமார் 313 சஹாபி வீரர்களும், 1000 காஃபிர்களை எதிர்த்துப் போரிட்டு மாபெரும் வெற்றியை ஈட்டியதும் இங்குதான். இப்போரில் குறைஷிகளின் பெரும் தலைவர்களில் அபூஜஹ்ல் போன்ற அனேகமானவர்கள் கொள்ளப்பட்டனர். பின்னர் கலீப் என்ற பாழ்க்கிணற்றில் அவர்கள் போடப்பட்டனர்.
அல்லாஹ் அல்குர்ஆனில் கூறுகின்றான்.
"நீங்கள் பலம் குன்றியிருந்த நிலையிலும் பத(ர்ப்போ)ரில் அல்லாஹ் உங்களுக்கு நிச்சயம் உதவி செய்தான். ஆகவே நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டு அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள்." (3:123)

5- ஹூனைன்.
இது தாயிபுக்கும், மக்காவிற்கும் இடையிலுள்ள ஒரு பகுதியாகும். இங்கேதான் நபிஸல்அவர்களுக்கும் குறைஷிக் காபிர்களுக்கும் இடையில் ஹி.8ல் ஒரு யுத்தம்  நடைபெற்றது. அதற்கு ஹூனைன் யுத்தம் என்று கூறப்படும்.
அல்லாஹ் அல்குர்ஆனில் கூறுகின்றான்.
"அதிகமான (போர்க்)களங்களில்  நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு உதிவி செய்துள்ளான். இன்னும் ஹூனைன் (போர்த்) தினத்தன்றோ உங்களின் அதிக எண்ணிக்கை உங்களை அகமகிழச் செய்திருந்தும், அது உங்களுக்கு எவ்விதப் பயனையும் அளிக்கவில்லை. பூமி விசாலமானதாக இருந்தும் அது உங்களுக்கு நெருக்கடியாகி விட்டது. பின்னர் நீங்கள் புறமுதுகிட்டு ஓடினீர்கள்." (9:25)

6- ஸபா, மர்வா
இந்த இரண்டும் மக்காவின் ஹரம் எல்லைக்குள் அமைந்துள்ள இரு மலைகளாகும். ஹஜ்,உம்ரா செய்வோர் இவ்விரு மலைகளுக்குமிடையில் ஏழு முறை தொங்கோட்டம் ஓட வேண்டும். இதற்கு ஸஃயு என்றும் கூறப்படும்.
அல்லாஹ் அல்குர்ஆனில் கூறுகின்றான்.
"நிச்சயமாக "ஸபாவும்","மர்வாவும்" அல்லாஹ்வின் அடையாளச் சின்னங்களில் உள்ளவையாகும். எவர் இவ்வீட்டை ஹஜ் அல்லது உம்ராச் செய்கிறாரோ அவர் மீது அவ்விரம்டுக்குமிடையில் சுற்றி வருவது குற்றமில்லை. எவர் மேலதிகமாக நன்மை செய்கிறாரோ நிச்சயமாக அல்லாஹ் நன்றியுடையவனும்,நன்கறிந்தவனுமாவான்".  (2:158)

7- மகாமு இப்றாஹீம்.
இப்றாஹீம்(அலை)அவர்கள் தனது மகன் இஸ்மாயிலுடன் புனிதக் கஃபாவை புணர்நிர்மாணம் செய்த போது ஒரு கல்லின் மீது நின்றவாறு அதனைக் கட்டினார்கள். கஃபாவின் சுவருக்கு நெருக்கமாக இருந்த அல்கல்லை உமர்(ரலி)அவர்கள் தனது ஆட்சியின் போது தவாப் செய்வோரின் நன்மை கருதி இப்போதிருக்கும் இடத்துக்கு நகர்த்தி வைத்தார்கள். அவ்விடத்திற்கே "மகாமு இப்றாஹீம்" என்று சொல்லப்படும்.  கஃபாவைத் தவாப் செய்து முடித்ததும் இவ்விடத்துக்குப் பின்னர் நின்றவாறு இரண்டு ரக்அத்துக்கள் தொழுவது நபிவழியாகும்.
அல்லாஹ் அல்குர்ஆனில் கூறுகின்றான்.
"(கஃபா எனும்) இவ்வீட்டை மக்கள் ஒன்றுகூடுவதற்காகவும், அபயமளிக்கும் இடமாகவும் ஆக்கியதை (எண்ணிப்பாருங்கள்.) நீங்கள் மகாமு இப்றாஹீமைத் தொழும் இடமாக எடுத்துக் கொள்ளுங்கள். எனது வீட்டை தவாப் செய்வோருக்காகவும், தங்கியிருப்போருக்காகவும்,ருகூஉ,சுஜூது  செய்பவர்களுக்காகவும் நீங்கள் இருவரும் தூய்மைப்படுத்துங்கள் என்று இப்றாஹீமுக்கும்,இஸ்மாயிலுக்கும் நாம் கட்டளையிட்டோம்."  (2:125)

8- பைத்துல் மஃமூர்.
இது வானவர்கள் தொழுகின்ற ஏழாவது வானத்திலுள்ள ஓர் இடமாகும். இதில் தினமும் எழுபதாயிரம் வானவர்கள் தொழுவார்கள். அதில் தொழுதவர்கள் மீண்டும் தொழுவதற்காகச் செல்லமாட்டார்கள்.
அல்லாஹ் அல்குர்ஆனில் கூறுகின்றான்.
"பைத்துல் மஃமூர் (எனும் மலக்குகளின் வணக்கஸ்தலத்தின்) மீது சத்தியமாக!."  (52:4)

9- சபஃ
இது எமன் நாட்டின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு நகரத்தின் பெயர். இதை ஒரு மகாராணி ஆண்டு வந்தாள். சூரியனை வணங்கிக்கொண்டிருந்த இந்நகர மக்களைப் பற்றி "ஹூத் ஹூத்" என்ற பறவை சுலைமான்(அலை)அவர்களுக்கு அறிவித்துக்கொடுத்தது. சுலைமான்(அலை)அவர்களின் அவைப்புக்குப் பின் அவள் இஸ்லாத்தில் இணைந்து கொண்டாள்.
அல்லாஹ் அல்குர்ஆனில் கூறுகின்றான்.
"சிறிது நேரம் தாமதித்த அது (அந்தப் பறவை அவரிடம் வந்து) நீங்கள் அறியாத ஒன்றை நான் அறிந்து 'சபஃ '(எனும் பிரதேசத்தி)லிருந்து உறுதியான ஒரு செய்தியுடன் உங்களிடம் வந்துள்ளேன். என்று கூறியது." (27:22)

"அவர்களை ஆட்சி செய்யும் ஒரு பெண்ணை நிச்சயமாக நான் கண்டேன்.அவள்(தேவையான)அனைத்துப் பொருட்களும் வழங்கப்பட்டுள்ளாள். மேலும் அவளுக்கு மகத்தானதொரு சிம்மாசனமும் உள்ளது." (27:23)

10- மகாமுன் மஹ்மூத்.
புகழுக்குரிய இடம் என்று இதற்குப் பொருள். இந்த உயர்ந்த ஸ்தானம் சுவர்க்கத்தில் உயர்ந்த இடத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்படும்.
அல்லாஹ் அல்குர்ஆனில் கூறுகின்றான்.
"உமக்கு உபரியாக இருக்க, இரவின் ஒரு பகுதியில் தொழுகைக்காக எழுந்து நிற்பீராக!  உமது இரட்சகன் (புகழப்பட்ட இடமான) "மகாமு மஹ்மூதில்" உம்மை எழுப்புவான்."  (17:79)

11- மஸ்ஜிதுல் ஹராம்.
மஸ்ஜிதுல் ஹராம் என்றால் முஸ்லிம்கள் தொழும் இடத்தைக் குறிக்கும். ஹராம் என்பது கண்ணியமிக்கது, தடுக்கப்பட்டது  என்பதும், மஸ்ஜிதுல் ஹராம் என்றால் சங்கை மிக்க பள்ளி என்பது பொருளாகும். இது மக்காவிலுள்ள  கஃபாவைக் குறிக்கப் பயன்படுத்தும் பதமாகும்.  ஹரமைன் என்றால் கஃபா, மஸ்ஜிதுன் நபவி  ஆகிய இரு பள்ளிகளையும் குறிக்க முஸ்லிம்கள் பயந்படுத்துகின்றனர்.
அல்லாஹ் அல்குர்ஆனில் கூறுகின்றான்.
"(நபியே!) உம்முடைய முகம் வானத்தின் பால் அடிக்கடி திரும்புவதைக் காண்கின்றோம். எனவே நீர் விரும்புகின்ற கிப்லாவை நோக்கி நிச்சயமாக நாம் உம்மைத் திருப்புவோம். எனவே (இப்பொழுது) உம் முகத்தை மஸ்ஜிதுல் ஹராமின் பக்கமாகத் திருப்புவாயாக!. (2:144)

"(நபியே!)நீர் எங்கிருந்து புறப்பட்டுச் சென்றாலும்(தொழுகையின் போது)உமது முகத்தை மஸ்ஜிதுல் ஹராம் நோக்கித் திருப்புவீராக! ஏனெனில் இது உமது இரட்சகனிடமிருந்து வந்த உண்மையாகும். நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் கவனிக்காதவனாக இல்லை." (2:149)

12- மஸ்ஜிதுல் அக்ஸா.
பலஸ்தீனில் அமைந்துள்ள இம்மஸ்ஜித் பைத்துல் முகத்தஸ் என்றும் அழைக்கப்படுகிறது. உலகில் இரண்டாவது மஸ்ஜிதாகவும், நன்மையை நாடி புனிதப் பயணம் நபியவர்கள் ஒரு இரவில் விண்ணுலகப் பயணத்திற்காக கஃபாவிலிருந்து பைத்துல் முகத்தஸ் எனும் பள்ளிக்கு அவைத்துவரப்பட்டார்கள். பின்னர் அங்கிருந்தே விண்ணிலகப் பயணத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். இந்த விண்ணிலகப் பயணம் சென்றுதான் தொழுகையைப் பரிசாக பெற்று வந்தார்கள். இந்த  இடமே பைத்துல் முகத்தஸ் என்றும்,இது முதல் கிப்லாவாகவும் அழைக்கப்படுகிறது.
அல்லாஹ் அல்குர்ஆனில் கூறுகின்றான்.
"(முஹம்மதாகிய) தனது அடியாரை மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து  நாம் சுற்றுப்புறச் சூழலைப் பாக்கியம் பொருந்தியதாக ஆக்கிய அந்த மஸ்ஜிதுல் அக்ஸா வரை இரவில்  அழைத்துச் சென்றவன் தூய்மையானவன். நமது அத்தாட்சிகளிலிருந்து அவருக்கு நாம் காண்பிக்கவே (இவ்வாறே செய்தோம்)  நிச்சயமாக அவன் செவியுறுபவன்,பார்ப்பவன்." (17:1)

13- மஷ்அருல் ஹராம்.
முஸ்தலிபாவிலுள்ள ஒரு இடத்தின் பெயர். இது முஸ்தலிபாவையும் குறிக்கும். அரபாவிலிருந்து திரும்பும் ஹாஜிகள், இங்கு தங்கி பிராத்தனைகளிலும்,திக்ர்களிலும் ஈடுபடுவார்கள்.
அல்லாஹ் அல்குர்ஆனில் கூறுகின்றான்.
"(ஹஜ்ஜூடைய நாட்களில் வியாபாரத்தின் மூலம்) உங்கள் இரட்சகனின் அருளைத் தேடிக் கொள்வது உங்கள் மீது குற்றமில்லை. "அரபா"த்திலிருந்து  நீங்கள் திரும்பி வந்தால் "மஷ்அருல்ஹராம்" எனும் இடத்தில் அல்லாஹ்வை நினைவு கூறுங்கள். அவன் உங்களுக்கு வழி காட்டியது போன்று அவனை நினைவு கூறுங்கள். இதற்கு முன் நீங்கள் வழி தவறியவர்களாகவே இருந்தீர்கள்." (2:198)

14- மிஸ்ர்.
அல்குர்ஆனில் பெயர் குறிப்பிடப்பட்ட நாடுகளில் "மிஸ்ர்"  "எகிப்தும்" ஒன்றாகும். எகிப்தில் யூசுப்(அலை)அவர்கள் வாழ்ந்தது பற்றியும், மூஸா(அலை)அவர்கள் கொடுங்கோலன் "பிர்அவ்னின்" பிடியிலிருந்து  "பனூஇஸ்ராயில்களை" மீட்பதற்கும், அவனுக்கு ஓர் இறைக்கொள்கையைப் போதிப்பதற்கும் நடத்திய போராட்டம் பற்றியும் அல்குர்ஆன் விரிவாகப் பேசுகிறது.
அல்குர்ஆனில் அல்லாஹ் கூறுகின்றான்.
"மூஸாவுக்கும், அவரது சகோதரருக்கும் எகிப்தில் உங்களிருவரின் சமூகத்திற்கும் வீடுகளை அமைத்து, உங்கள் வீடுகளை நீங்கள் கிப்லாவாக ஆக்கி, தொழுகையை நிலைநாட்டுங்கள். இன்னும் நம்பிக்கையாளர்களுக்கு நன்மாராயாம் கூறுங்கள். என நாம் வஹி அறிவித்தோம்."(10:87 ) 

"பிர்அவ்ன் தனது சமூகத்தாரை அழைத்து  எனது சமூகத்தினரே!  எகிப்தின் ஆட்சி எனக்குரியதில்லையா?  இந்த ஆறுகளும் எனக்குக் கீழேதான் ஓடுகின்றன. இதை நீங்கள் (சிந்தித்துப்) பார்க்கமாட்டீர்களா?. எனக் கேட்டார்." (43:51)

15- யத்ரிப்.
நபி(ஸல்)அவர்கள் மக்காவிலிருந்து ஹிஜ்ரத் செய்து இங்கேதான் வந்து சேர்ந்தார்கள். நபியவர்களின் வருகைக்குப் பின் யத்ரிப்என்ற பெயர் மாற்றப்பட்டு மதீனத்தூர் ரஸூல்  என்று அழைக்கப்பட்டது. அதுவே இன்றைய மதீனாவாகும்.
அல்குர்ஆனில் அல்லாஹ் கூறுகின்றான்.
"யத்ரிப் வாசிகளே! உங்களால் தாக்குப் பிடிக்க முடியாது. எனவே நீங்கள் திரும்பிச் சென்று விடுங்கள், என அவர்களில் ஒரு பிரிவினர் கூறியதை (எண்ணிப்பார்ப்பீராக.!) இன்னும் அவர்களில் ஒரு பிரிவினர்  நிச்சயமாக எமது வீடுகள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளன, எனக் கூறி நபியிடம் (போருக்குச் செல்லாதிருக்க) அனுமதி கோரினர். அவை பாதுகாப்பாகவே இருக்கின்றன,(போர்க்களத்திலிருந்து) விரண்டோடுவதைத் தவிர வேறு எதையும் அவர்கள் விரும்பவில்லை." (33:13)

16- உஹது.
மதீனாவிற்கு சுமார் 7 கி.மீ, தொலைவில் உள்ள மலையின் பெயரே உஹதாகும். இந்த மலையடிவாரத்தில் ஹிஜ்ரி 3ல் முஸ்லிம்களுக்கும்,குறைஷிக் காபிர்களுக்கும் இடையில் நடைபெற்ற யுத்தம் உஹத்  யுத்தம் என்று அழைக்கப்படுகிறது. இப்போரில் 700 முஸ்லிம்களும், 3000 எதிரிகளும் பங்கு கொண்டனர். இந்த யுத்தத்தில் 70 ஸஹாபாக்கள் ஷஹீதானார்கள்.
அல்குர்ஆனில் அல்லாஹ் கூறுகின்றான்.
'(நபியே!) உமக்கு இவ்விஷயத்தில் ஒரு சம்பந்தமும் இல்லை, அவன் அவர்களை மன்னித்து விடலாம், அல்லது அவர்களை வேதனைப் படுத்தலாம், நிச்சயமாக அவர்கள் கொடியோராக இருப்பதன் காரணமாக.' ( 3: 128) 
 இந்த வசனம் உஹதுப் போரின் போது அருளப்பட்ட வசனமாகும்.


17- அல் அய்க்கா
அய்க்கா என்றால் அடர்ந்த தோப்பு என்பது அர்த்தமாகும். அஸ்ஹாபுல் அய்க்கா என்றால் அடர்ந்த தோப்புவாசிகள். இவர்களுக்கு சுஜப்(அலை)அவர்களை அல்லாஹ் நபியாக அனுப்பினான். இவரை அவர்கள் பொய்ப்பித்ததனால் அழிக்கப்பட்டனர். இவர்கள் மத்யன் நகரின் கிராமப்புறத்தில் வசித்தவர்கள் என்று கூறப்படுகின்றது.
அல்குர்ஆனில் அல்லாஹ் கூறுகின்றான்.
"இன்னும் தோப்புவாசிகளும் அநியாயக்காரர்களாகவே இருந்தனர்."  (15:78)

(அவ்வாறே மத்யன்) தோப்புவாசிகளும், துப்பவுடைய கூட்டத்தாரும் ஆக எல்லோரும் (நம்) தூதர்களைப் பொய்ப்பிக்க முற்பட்டனர்; எனவே (அவர்களைப் பற்றிய) என்னுடைய எச்சரிக்கை உண்மையாயிற்று. (50:14)

18- ஹிஜ்ர்.
மதீனாவிலிருந்து தபூக் செல்லும் வழியில் அமைந்துள்ள ஒரு கிராமத்தின் பெயர்  ஹிஜ்ர் என்பதாகும். இது தர்போது  மதாயின் ஸாலிஹ் ஸாலிஹின் கிராமங்கள்  என்று அழைக்கப்படுகின்றது. இப்பிரதேசத்திர்கு ஸாலிஹ்(அலை) அவர்களைத் தூதராக அல்லாஹ் அனுப்பினான். அவரை அவர்கள் பொய்ப்பித்து அவர்களுக்கு அத்தாட்சியாக அனுப்பப்பட்ட ஒட்டகத்தை அநியாயமாகக் கொன்ற போது, செல்வச் செலுப்பில்  வாழ்ந்த அம்மக்கள் அழிக்கப்பட்டனர்.
அல்குர்ஆனில் அல்லாஹ் கூறுகின்றான்.
"(ஸமூது கூட்டத்தினரான) ஹிஜ்ர் வாசிகளும் தூதர்களைப் பொய்ப்பித்தனர்."  (15:80)


19- தூர்.
தூர் என்றால் மலை என்பது அர்த்தம். பொதுவாக ஸினாய் மலையைக் குறிக்கவும் இந்தச் சொல் அல்குர்ஆனில்  பயந்படுத்தப்பட்டுள்ளது. இது புனிதப் பிரதேசமாகவும் மதிக்கப்படுகிறது. இந்த மலையடிவாரத்தில் தான் மூஸ(அலை)அவர்களுக்குத் தூதுத்துவப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.அல்லாஹ்வுடன் நேரடியாகவும் உரையாடப்பட்டார்கள்.
அல்குர்ஆனில் அல்லாஹ் கூறுகின்றான்.
"நாம் உங்களுக்கு வழங்கிய (வேதத்)தை உறுதியாகக் கடைப்பிடியுங்கள்.அதிலுள்ளவற்றை சிந்தியுங்கள்.(இதன் மூலம்) நீங்கள் பயபக்தியுடையோராகளாம்!. என்று தூர் மலையை உங்களுக்கு மேல் உயர்த்தி உங்களிடம் நாம் வாக்குறுதி வாங்கியதை (எண்ணிப்பாருங்கள்".) (2:63)


20- ஜூதி மலை.
நூஹ்(அலை)அவர்களது காலத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின் பின்னர் நூஹ்(அலை)அவர்களின் கப்பல் தங்கிய மலையின் பெயரே "ஜூதிமலை".இது துருக்கியின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இம்மலையில் நூஹ்(அலை)அவர்களது கப்பலின் சில பாகங்கள் இருந்ததாக மலைகளின் ஆய்வுகள் மேற்கொள்ளும் மலையேறு குழுவினர் சில ஆண்டுகளுக்கு முன்னர் கண்டுபிடித்தனர். அல்குர்ஆன் கூறும் சரித்திரங்கள் காலத்தால் நிரூபிக்கப்பட்டதற்கு இதுவும் ஒரு சான்றாகும்.
அல்குர்ஆனில் அல்லாஹ் கூறுகின்றான்.
"பூமியே! உனது நீரை உரிடஞ்சிக்கொள். வானமே! (மழையை) நீ நிறுத்திக்கொள். என்று கூறப்பட்டது நீர் வற்றியது. கட்டளையும் நிறைவேற்ரப்பட்டு விட்டது. ஜூதி (மலை)யில் (கப்பல்) தரித்தது. அநியாயக்காரக் கூட்டத்தார் (அல்லாஹ்வின் அருளிலிருந்து) தூரமாகட்டும் என்றும் கூறப்பட்டது." (11:44)


எல்லாம் வல்ல அல்லாஹ் சத்தியத்தைத் தெளிவாக எடுத்துக் கூறும் சத்தியப் போதகர்களாகவும் அவ்வழியில் ஏற்படும் இன்னல்களைச் சகித்துக் கொள்ளும் உண்மைப் போராளிகளாகவும் எம்மையும் உங்களையும் ஆக்கி அருள் புரிவானாக.

அஹமட் யஹ்யா.
ஹொரோவபதான,
அனுராதபுரம். 
SRI LANKA.